செவ்வாய், 1 டிசம்பர், 2009

வரலாற்று சம்பவம்: 03.12.1984. போபாலில் விஷ வாயு தாக்கி 2,500 பேர் பலி


நெஞ்சை உறைய வைக்கும் ஒரு பயங்கர சம்பவம் 3/12/1984 அன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்தது. விஷ வாயு தாக்கி 2,500 பேர் இறந்தார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் கண் பார்வை இழந்தார்கள்.
போபால் நகரில் பூச்சி மருந்து தயாரிக்கும் "யூனியன் கார்பைடு" என்ற தொழிற்சாலை இருந்தது. இந்த தொழிற்சாலையில் பூமிக்கு அடியில் "மெதில் ஐசோ சயனைடு" என்ற வாயு சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த விஷ வாயுவாகும். பூச்சி மருந்து தயாரிக்க பயன்படுவதாகும்.
 
3/12/1984 நள்ளிரவு 1 மணி அளவில் விஷ வாயு சேமிப்பு தொட்டியை மூடியுள்ள வால்வு, தொட்டிக்குள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உடைந்தது. இதனால், விஷ வாயு கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வெளியேறியது. சிறிது நேரத்திலேயே அங்கிருந்த அதிகாரிகள் இதனை கண்டுபிடித்தார்கள். 40 நிமிட நேரத்தில் கசிவு நிறுத்தப்பட்டது. என்றாலும், அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய விஷ வாயு நகரத்திற்குள்ளும், 40 சதுர கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்குள்ளும் பரவியது.
 
அந்த பகுதியில் வசித்தவர்களை விஷ வாயு தாக்கியது. இதனால் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மயக்கம் போட்டு விழுந்தார்கள். அவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவையும் ஏற்பட்டன. இந்த விஷ வாயு தாக்குதலுக்கு உள்ளானவர்களில் சுமார் 300 பேர் அன்றைய தினமே பரிதாபமாக மரணம் அடைந்தனர்.
 
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களை பஸ், லாரி, டெம்போ, கார், ஸ்கூட்டர் என்று எது கிடைத்ததோ, அதில் ஏற்றி ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு போனார்கள். ஆஸ்பத்திரிகளில் தாங்க முடியாத கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆஸ்பத்திரியில் சேர நீண்ட "கியூ" வரிசை நின்று கொண்டிருந்தது.
 
ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஏராளமானபேர் வந்த வண்ணம் இருந்தார்கள். சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினார்கள்.
 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டெல்லியில் இருந்து விமானங்களில் டாக்டர்களை அனுப்ப பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். உடனே டாக்டர்கள் விமானம் மூலம் போபால் விரைந்தனர். ராணுவத்தை சேர்ந்த டாக்டர்களும் அழைக்கப்பட்டார்கள்.
 
விஷ வாயுவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே சென்றது. ஐந்தே நாட்களில் சாவு எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்தது. 50 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வை இழந்தார்கள்.
 
விஷ வாயு தாக்கி மரணம் அடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். போபால் நகரில் உள்ள பல்வேறு மயானங்களுக்கு பிணங்கள் லாரிகள் மற்றும் டாக்சிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு குவியல், குவியலாக பிணங்கள் அடக்கம் செய்யப்பட்டன.
 
மயானங்களுக்கு பிணங்கள் கொண்டு செல்லப்படுவது தெரிந்ததும், மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் அங்கு விழுந்தடித்துக்கொண்டு ஓடினார்கள். பிணமாகிவிட்டவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் போது, கதறி அழுதனர். எல்லா மயானங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
 
மரணம் அடைந்தவர்களில் குழந்தைகள்தான் அதிகமாகும். குழந்தைகளின் உடல்களை வெள்ளைத் துணியால் மூடி மயானத்துக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
 
ஊருக்குள் விஷ வாயு பரவி விட்டது என்ற செய்தியை கேள்விப்பட்டதும், உயிர் தப்புவதற்காக பலர் ஊரை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். ஊரில் உள்ளவர்களை எல்லாம் தாக்கிய விஷ வாயு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரையும் பாதிக்கவில்லை. இதனால் தொழிலாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தொழிற்சாலைக்கும் சேதம் ஏற்படவில்லை.
 
விஷ வாயு தாக்குதல் காரணமாக போபால் நகரில் அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இந்த விபத்தை தொடர்ந்து "யூனியன் கார்பைடு" தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டது.
 
உயிர் இழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் உதவிப்பணம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் பிரதமர் ராஜீவ் காந்தி ரூ.40 லட்சம் வழங்கி உத்தரவிட்டார்.
 
விபத்து ஏற்பட்ட இந்த `யூனியன் கார்பைடு' தொழிற்சாலை அமெரிக்க நிறுவனமாகும். இதன் தலைமை நிறுவனம் அமெரிக்காவில் "வெஸ்ட் லெர்சினியா மாநிலத்தில் தன்டிரி நகரில் உள்ளது. விபத்து குறித்து அந்த நிறுவனத்தின் சுகாதார பிரிவு நிபுணர் ஜாக்சன் கூறியதாவது:-
 
"கடந்த 2 ஆண்டுகளாக இந்த வாயுவை தயாரித்து சேமித்து வைத்து பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்து வருகிறோம். விபத்து ஏற்பட்டது எப்படி என்பதை ஆராய அமெரிக்காவில் இருந்து நிபுணர் குழு போபால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எந்த அளவில் உதவி செய்வது என்பது பற்றி இந்திய அரசுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்."
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் செய்து வந்த பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லி திரும்பும் வழியில் போபால் சென்றார். யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டார். விஷ வாயு கசிந்து வெளியேறிய விவரங்கள் கேட்டறிந்தார்.
 
பிறகு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் சொன்னார். ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த குழந்தைகளை அழைத்து பேசினார். ஆஸ்பத்திரிகளில் இடைவிடாது பணிபுரிந்த டாக்டர்கள், ஊழியர்களை ராஜீவ் காந்தி பாராட்டினார். பின்னர் ராஜீவ் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

"இப்படிப்பட்ட பயங்கரமான தொழிற்சாலை நகரின் மையப்பகுதியில் இடம் பெற்றது தவறு. இனிமேல் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் அமைக்கும்போது, தேவையான பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா என்று கண்காணிக்கப்படும்.
பெரும்பாலும் அபாயத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகள் நகரின் மையப்பகுதியில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளப்படும். அதற்கு ஏற்ப விரைவில் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
 
விஷ வாயு தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகளை பார்த்தேன். அது நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி. அந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாக நிற்கிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வது, எப்படி வளர்ப்பது என்பது பற்றி விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்."
 
இவ்வாறு ராஜீவ் காந்தி கூறினார்.
 
இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி என்.கே.சிங் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் லாரன் ஆண்டர்சன் என்பவர்தான் "யூனியன் கார்பைடு" தொழிற்சாலையின் நிர்வாக போர்டு தலைவராக இருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் போபால் நகருக்கு வந்தார்.
 
விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த 2 அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள். இதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் இந்திய நிர்வாக அதிகாரி கேசவ மகேந்திரா, மானேஜிங் டைரக்டர் வி.பி.கோகலே ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் நடந்த உடனேயே தொழிற்சாலை ஜெனரல் மானேஜர் உள்பட 5 அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கவனக்குறைவு காரணமாக பலர் பலியானதற்கு காரணமாக இருந்ததாகவும், கண் பார்வை இழத்தல் போன்ற கொடூரமான சூழ்நிலை ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாகவும் இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 கோர்ட்டுகளில் பல ஆண்டுகள் விசாரணை நடந்து முடிந்த பிறகே பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தொகை கிடைத்தது.
 

கருத்துகள் இல்லை: