செவ்வாய், 8 டிசம்பர், 2009

பச்சைப் பாசி'யில் பவர்புல் பேட்டரிகள்



மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக "அல்கே' (பச்சை பாசி) மூலம் பேட்டரிகள் தயாரிக்கும் ஆய்வுகள்  நடந்து வருகின்றன. தண்ணீரில் வளரக்கூடிய, முடி போன்ற இழைகளாலான இந்த பாசிகள், பார்ப்பதற்கு அருவருப்பாகவும், நாற்றம் கொண்டதாகவும் இருக்கும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும்,   எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத, மெல்லிய, எடை குறைவான, உலோகம் இல்லாத, வளையக்கூடிய, விலை குறைந்த, எளிதாக பயன்படுத்தும் வகையிலான பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இம்முயற்சியில் விஞ்ஞானிகள் தற்போது வெற்றியும் பெற்றுள்ளனர். சாதாரணமான "கிளடோபோரா' என்ற பச்சை பாசியை கொண்டு பேட்டரி தயாரிக்கும் ஆராய்ச்சி பலன் அளித்துள்ளது.காகிதத்தை விட 100 மடங்கு செலுலோஸ் அதிகம் கொண்டதாக இந்த தாவரம் உள்ளது. மின்சாரத்தை சேமிக்கவும், வெளியேற்றவும்  தேவையான ஆற்றல், பாசிக்கு உள்ளது.
"சுற்றுச்சூழல் பாதிக்காத, விலை, எடை குறைந்த, பெரிய அளவில் மின் சேமிப்பு முறையை  பாசியை கொண்டு தயாரிக்க முடியும்' என, சுவீடனை சேர்ந்த உப்சாலா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்ப வல்லுனர் மரியா ஸ்ரோமி கூறியுள்ளார். தற்போதுள்ள பாலிமர் பேட்டரிகளை ஒப்பிடும் போது,  பாசியை கொண்டு தயாரிக்கும் பேட்டரி 40 முதல் 50 நானோ மீட்டர் அளவு சிறியதாக இருக்கும். காகிதத்திற்குள் வைக்கப்படும் பச்சை பாசியின்  தடிப்பு  20 முதல் 30 நானோ மீட்டர் அளவு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிமர் பேட்டரிகளை விட 50 முதல் 200 சதவீதம் அதிகமாக இந்த புதிய பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். சாதாரண பேட்டரிகளில் ஒரு மணி நேரத்தில் ரீசார்ஜ் செய்யும் மின்சாரத்தை புதிய பேட்டரிகள் 11 வினாடி முதல் 8  நிமிடங்களுக்குள் ரீசார்ஜ் செய்து விடும். ரீசார்ஜ் பேட்டரிகளை பயன்படுத்துபவர்களுக்கு புதிய பேட்டரிகள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாலிமர் பேட்டரிகளில் 60 முறை ரீசார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யும் போது 50 சதவீதம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், புதிய பேட்டரிகளில் 100 முறை சார்ஜ் செய்தாலும், 6 சதவீத இழப்பே ஏற்படும்.

கருத்துகள் இல்லை: