சனி, 12 டிசம்பர், 2009

மனதில் உறுதி வேண்டும் ?


""விடிஞ்சா உன் புருஷன தூக்குல போடப் போறாங்க.வந்து உடம்ப வாங்கிக்க.'' வீடு தேடி வந்து போலீஸ்காரர் ஒருவர் இப்படியொருச் செய்தியைச் சொன்னதும் உச்சந்தலையில் இடி இறங்கியது போல் ஆகி விட்டார் ஈரோடு மாவட்டம் ஈஸ்வரி.
இதயம் வெடிக்காத குறை. அழுது புரண்டார். தன்னோடு சேர்ந்து கொண்டு ""அப்பா சாகப்போறாராம்மா ?'' என்று கேட்டு அழும் தன் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லக்கூட அவருக்கு தெம்பில்லை. எதைச் சொல்லி குழந்தைகளை சமாதானப்படுத்துவது ? புரியாமல் தவித்தார். அவர் வேண்டாத கடவுள் இல்லை. என்ன பிரயோசனம் ? விடிந்தால் கணவனுக்குத் தூக்கு !
இடுப்பில் ஒரு குழந்தையையும்ல கையில் ஒரு குழந்தையையும் பிடித்துக் கொண்டு சிறை வாசலுக்கு வந்தார். சிறை வாசலில் அழக்கூடாது என்றார்கள். மனசுக்குள் அழுதார்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் கோவிந்தசாமி ஒரு சாதுவான விவசாயி. அப்பாவி. வரப்புத் தகராறில் தன்னையும், தன் குடும்பத்தையும் அழிக்கத் திட்டமிட்டிருந்தார் அவரது சித்தப்பா. அதனால் ஆத்திரத்தில் சித்தப்பா குடும்பத்தினர் ஐந்து பேரை உறக்கத்தில் இருந்தபோது அரிவாளால் சீவி எடுத்தார் கோவிந்தசாமி. இதுதான் விதியின் விளையாட்டு.
1984-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி இரவு நடந்த இந்த விபரீதம், அதிகாலையில் தெரியவந்தபோது கொண்டையம்பாளையம் கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போனது. கோவிந்தசாமி கைது செய்யப்பட்டு சிறறையில் அடைக்கப்பட்டார். இனி நடந்ததை அவரது மனைவி ஈஸ்வரியே விளக்கினார்.
""என்னுடைய பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனக்குத் திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்த சமயம். எங்கள் ஊர் முழுக்க இவரைப் பற்றியே பேச்சு. ""நல்ல பையன். யார் வம்பு தும்புக்கும் போகாதவன். எந்த கெட்டபழக்கமும் இல்லாத கோவிந்தசாமிக்கா இந்த நிலைமை ?''என்று எல்லாரும் பரிதாபப்பட்டார்கள். அதனால் அவருக்கு ஒரு ஆறுதலாக இருப்போம் என்று அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்.
இந்த சமயம் அவர் குற்றவாளி இல்லை என்று ஈரோடு கோர்ட்டில் தீர்ப்பாகி விட்டது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், மேல்முறையீட்டில் அவருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் மனு செய்து, ஜாமீனில் வெளி வந்தார். எது எப்படி இருந்தாலும் அவரைத்தான் திருமணம் செய்வது என்று முடிவோடு இருந்தேன்.
என் எண்ணத்தைச் சொன்னபோது, சொந்தக்காரங்க, ""உனக்கு வேற மாப்பிள்ளை கிடைக்கலையா ? அவன்
உசிரே இன்னைக்கோ, நாளைக்கோன்னு ஊசலாடிட்டு இருக்கு. அவனையா கல்யாணம் பண்ணிக்கிறது ''என்று இழிவாய் பேசினார்கள். ஆனால் நான் உறுதியோடு இருந்தேன்.
என் உறுதியைப் பார்த்து அவருக்கே என்னை திருமணம் செய்து வைத்தார்கள்.
திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டோம். இரண்டாவதாக, பெண் குழந்தை பிறந்த ஐந்தாவது நாள் இவரை சிறைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். தூக்குத்தண்டனை உறுதியாகி விட்டது என்றார்கள்.
கைக் குழந்தையோடு செய்வதறியாது திகைத்துப் போனேன். பல நாட்கள் அழுது புரண்டேன். அழுது அழுது என் கண்ணில் நீரே இல்லை. திடீரென்று தூக்கில் போடும் நாளை அறிவித்தார்கள். அன்று இரவு முழுவதும் அவரது விடுதலைக்காகப் பிரார்த்தித்தேன். நான் நேர்ந்து விட்ட கடா கயிறை  அறுத்துக் கொண்டு போய் கோயில் வாசலில் கொடி மரத்தடியில் படுத்துக்கிடந்தது. அதைப் பார்த்து இவருக்குத் தூக்கு வராது என்று எல்லாரும் சொன்னார்கள்.
அது போலவே அவரது கருணை மனுமூலம் அவரது முதல் தூக்கு தள்ளிப் போனது. பின்பு இரண்டாவது முறை தூக்கு அறிவித்தபோது என் தாலிக்கு இனி பங்கம் வராது என்றே நம்பினேன். அதுபோலவே நான்கு முறையும் அவரது தூக்குத் தேதி உறுதியாகியும், அது தள்ளிப் போனதால் என் கணவரின் உயிர் தப்பியது. இப்போது அவரது தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்படும் என்று சொல்கிறார்கள். அவரோட நன்னடத்தையில் அவர் வெளியில் வந்து விடுவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு'' என்று அடிக்கடி தெருவைப் பார்த்துக் கொள்கிறார் ஈஸ்வரி.
ஈஸ்வரியின் மகன் தாமோதரன் பத்தாம் வகுப்பும், கோவிந்தசாமி சிறைக்குச் சென்றபோது கைக்குழந்தையாக இருந்த மகள் பத்மா ஏழாவது வகுப்பிலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கூலி வேலைக்குப் போய்தான் கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி.
கோவை சிறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ், ""தமிழக வரலாற்றில் இப்படியொரு உயிர்ப்போராட்டம் நடத்தியவர்கள் சிலர்தான். அதில் கோவிந்தசாமியும் ஒருவர். கோவிந்தசாமி தன் செயல்களுக்கு வருந்தி ஒரு மவுன நிலையிலேயே உள்ளான். நான்கு முறை தூக்கு உறுதியாகி, கருணை மனுவால் தள்ளுபடியாகி இருக்கிறது. தற்போது தண்டனையைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சிறைச்சாலை என்பது தண்டனை வழங்கும் கேந்திரம் அல்ல. அது கொடூர மனதையும் செம்மைப்படுத்தும் கூடம். மனிதம் தொலைந்து விடாமல் இருக்க இங்கு பயிற்சி அளிக்கிறோம். அந்த வகையில்தான் நன்னடத்தை வழங்கப்படுகிறது. அதில் கோவிந்தசாமியும் ஒருவர்.'' என்றார். அந்த அப்பாவி கிராமத்துப் பெண்ணின் விடிவுகாலம் வெகுதொலைவில் இல்லை என்பது உறுதி.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

அவர்கள் உறுதி பாரட்டபடகூடியதுதான்.

<<<
வரப்புத் தகராறில் தன்னையும், தன் குடும்பத்தையும் அழிக்கத் திட்டமிட்டிருந்தார் அவரது சித்தப்பா. அதனால் ஆத்திரத்தில் சித்தப்பா குடும்பத்தினர் ஐந்து பேரை உறக்கத்தில் இருந்தபோது அரிவாளால் சீவி எடுத்தார் கோவிந்தசாமி.
>>>

சித்தப்பா ஒக்கே... மீதி 4 என்ன செஞ்சாங்க பாவம்?

தப்புக்கு தண்டனை வேண்டாமா?

கலையரசன் சொன்னது…

//மீதி 4 என்ன செஞ்சாங்க பாவம்?
தப்புக்கு தண்டனை வேண்டாமா?//

வழிமொழிகிறேன்...

குப்பன்.யாஹூ சொன்னது…

inspirational post, many thanks for sharing such a great useful post.

Millions of thanks.