செவ்வாய், 1 டிசம்பர், 2009

சுதந்திரக்காற்று சுவாசிக்க .., இலங்கை அரசு விடுவித்தது; முகாம் தமிழர்கள் மகிழ்ச்சி !


6 மாதத்திற்கும் மேலாக முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சுதந்திர காற்று சுவாசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இலங்கை அரசு உத்தரவை அடுத்து இலங்கை தமிழ் மக்கள் , மகிழ்ச்சியுடனும் , உற்சாகத்துடனும், இருப்பதை காண முடிகிறது.

இலங்கையில் புலிகளுக்கும் - அரசுக்கும் 25 ஆண்டு காலமாக கடும் போர் நடந்தது . போரில் புலிகள், ராணுவத்தினர், பொதுமக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இத்துடன் பிரபாகரன் இறப்புக்கு பின் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து போர்க்காலங்களில் பிடிக்கப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கு இடமான தமிழ் மக்களை பிடித்து அகதிகள் முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்தது. இலங்கையில் போர்க்குற்றம் நடந்திருப்பதாக அமெரிக்கா அறிக்கை கேட்டது. போர் முடிவு ஏற்பட்டாலும் முகாம்களில் தமிழர்கள் இடம் பெயரக்கூடாது என கடும் பாதுகாப்பு பிடியில் இருந்தனர். முள் வேலிக்குள் சிக்கி தவித்த காட்சிகள் குறித்து தமிழக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.


சர்வதேச கண்டனம்: இந்நிலையில் இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களை சந்திக்க மத்திய அரசு அனுமதியுடன் தமிழக எம்.பி.,க்கள் குழுவினர் இலங்கை புறப்பட்டு சென்றனர். அங்கு தமிழர்களை சந்தித்து குறைகள் குறித்து கேட்டறிந்தனர். முகாம் தமிழர்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என எம்.பி.,க்கள் குழு அதிபர் ராஜபக்‌சேவிடம் வலியுறுத்தியது. சர்வதேச அளவிலும் முகாம்களில் அகதிகள் அடைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் எழுந்தது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அதிபர் ராஜபக்சே அளித்தார். கடந்த அக்டோபர் மாதம் 40 ஆயிரம் பேர் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.


இன்று ( 1 ம் தேதி ) வவுனியாவில் உள்ள முகாம் தமிழர்கள் சுதந்திரமாக சென்று வர விடுவிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. இந்த செய்தி கேட்ட தமிழ்மக்கள் பெரும் மகிழ்வுடன் காணப்பட்டனர். இங்குள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர்களும் இன்னும் ஒரிரு நாளில் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்கப்படுவர். இதன்படி தமிழ்மக்கள் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று வரலாம், அங்கேயே தங்கி கொள்ளலாம். இவர்கள் முறைப்படி பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


15 நாட்களுக்குள் முகாமுக்கு திரும்ப வேண்டும் : வெளியே எங்கு சென்றாலும் 15 நாட்களுக்குள் முகாமுக்கு திரும்பி விட வேண்டும். இவர்களை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பர். செவ்வாய்கிழமையில் ( இன்று ) சுமார் 6 ஆயிரம் பேர் வெளியே சென்றுள்ளனர். இவர்கள் நிரந்தரமாக வீடுகளுக்கு செல்ல விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிக் உதயநானயகாரா தெரிவித்தார். முகாம்களில் இருந்து வெளியே சென்று வர போக்குவரத்து ஒரு பிரச்னையாக உள்ளது. இருந்தாலும் கை, கால் வீசியபடி உற்சாகமாக சென்ற வண்ணம் இருந்தனர் தமிழர்கள்.

கருத்துகள் இல்லை: