வியாழன், 3 டிசம்பர், 2009

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவலம் வந்தது ஏன்?

"உற்பத்திக் குறைவைச் சமாளிக்க, மத்திய அரசு, அரிசியை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது' என, மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா சமீபத்தில் தெரிவித்தார். உணவு உற்பத்தியில் உபரியாக இருந்த நாடு, இன்று அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளதற்கான காரணம் என்ன?


கடந்த 1969ம் ஆண்டு பசுமைப் புரட்சி ஆரம்பிக்கப் பட்டது. அப்போது, நிறைய ரசாயன உரங்களையும், குட்டை ரக நெல்களையும், பூச்சிக் கொல்லிகளையும், அறிமுகம் செய்தனர். அதில், விவசாயிக்கு செலவு அதிகம் ஆனது. ரசாயனம் போட்டதால், நிலவளம் குறைந்துகொண்டே வந்தது. அதற்காக, அதிக ரசாயன உரம் இட்டனர். உரம் விற்கும் முதலாளிகள் நினைத்த போதெல்லாம் விலையை ஏற்றவிடாமல், அரசாங்கம் பார்த்துக் கொண்டது. அதிகமாக விளையும் பொழுது கொள்முதல் செய்யாமல், அதிகாரிகள் விட்டுவிடுவர். தனி வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை பிடித்து, அதிக தூரம் கடத்துவர். ஆனால், அதன் பலன் விவசாயிக்கு கிடைக்கவில்லை. பருவகால மாறுதல்களால், விளைச்சல் குறைவாக இருக் கும் நேரத்தில் தனியாரை பிடிக்கவிட மாட்டார்கள். அரசாங்கமே குறைந்த விலையில் கொள்முதல் செய்யும். அந்த வகையில், கூட விளைந்தாலும் குறைவாக விளைந்தாலும் விவசாயிக்கு நன்மையில்லை. இதன் விளைவாக, நிறைய நெல் விளையும் நிலங்கள், கரும்பு விளையும் நிலமாக மாற்றப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 1955ம் ஆண்டு 27 லட்சம் ஹெக்டேர் நெல் விளைந்தது. 2009ம் ஆண்டு 20 லட்சம் ஹெக்டேராக குறைந்து உள்ளது.


தொடர்ந்து ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக் கொல்லி எல்லாம் மண்ணில் இட்டதனால், பாதி விளை நிலம், உவர் நிலமாக மாறியது. இதனால், நுண் ணூட்ட பற்றாக்குறை வந்தது. மொத்தத்தில், விளைச்சல் குறைந்துகொண்டே வந்தது. இப்பொழுது, இந்த நூறு நாள் வேலை திட்டம் வந்ததால், விவசாய வேலைக்கு ஆட்களே இல்லை. விளைந்த நிலம், அறுக்க ஆள் இல்லாமல் நிலத்திலேயே கொட்டி நெல் முளைக்கிறது. வேறு வழியின்றி, விவசாயி வேறு பயிருக்கு மாறிக் கொண்டே இருக்கிறார். போதாத குறைக்கு, நிறைய தொழிற்சாலைப் புகை வருவதால், வளிமண்டலம் கரியாகி சூடாகிறது. நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம் என்ற பெயரில், விளை நிலங்கள் பட்டணமாக விரிந்துவிட்டன. ஆற்றோரங்களில் தொழிற்சாலைகள் கட்டி, தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் விட்டதால், விளைநிலங்கள் பாழாகின (உதாரணம்: பாலாறு, நொய்யலாறு). மண்ணில் போடப்படும் தழைச்சத்து உரங்கள், நைட்ரஸ் வாயுவை வெளியிடுகின்றன. இதுவும் ஆகாயத்தை சூடாக்குகிறது. ஆகையால் தட்பவெப்ப நிலை மாறுகிறது. விதைக்கும் பொழுது மழை இல்லாமல் இருக்கிறது. அறுக்கும் நேரத்தில் மழை பெய்து கெடுக்கிறது.


பூமி சூடாவது, அதனால் தட்ப வெப்பநிலை மாறுவது, அதனால் வறட்சியையும் அதிக வெள்ளத்தையும் நாடு சந்திக்கிறது. மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூற்றுப்படி, 2009ம் ஆண்டில் 28 சதவீதம் மழைக்குறைவு. மொத்த சாகுபடி நிலத்தில், மூன்றில் ஒரு பங்கு வறட்சியில் பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் மேட்டூரில் தண்ணீர் இல்லாததால், காவிரி படுகையில் 100 ஆண்டுகள் காணாத வெள்ளம். அதனால் விளைச் சல் பாதிக்கப்பட்டு உள்ளது. குட்டை ரக நெல்லை புகுத்தி டிராக்டரையும் நுழையவிட்டதால், மாடுகள் தொடர்ந்து கசாப்பு கடைக்கு சென்றுகொண்டே இருக்கின்றன. ஆகையால், நிலத்தின் வளத்தை புதுப்பிக்க சாணியே இல்லாமல் போயிற்று. அண்டை மாநிலங்களுக்கு இடையில், தண்ணீர் தகராறே 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதனாலும் உற்பத்தி குறைந்துகொண்டே உள்ளது. எப்போதுமே, வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கும் தானியங்களை அரசு எடுப்பது இல்லை. மாறாக, வெளிநாட் டிலிருந்து இறக்குமதி செய்வதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது.


நம் நாட்டில் இன்னும் 60 சதவீதம் நிலம், நேரடியாக மழையை நம்பி உள்ளது. இந்த நிலங்களில் மக்கள் நவதானியங்களை பயிர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால், அரசாங்கம் ரேஷன் கடையை திறந்து அரிசி, கோதுமை இரண்டை மட்டுமே போடுவதால், நவதானிய சாகுபடி குறைந்துகொண்டே வந்தது. இதுவரை அரசாங்கத்தின் கொள்கை, ஆலைத் தொழில் களை மட்டும் காப்பாற்றுவதாகவே இருந்தது. இந்த கொள்கை மாற்றப்பட வேண் டும். உழவர் நலனுக்காகவும் நுகர்வோர் நலனுக்காகவும் வேளாண்மை மேற் கொள்ளப்பட வேண்டும். ரசாயனம் நீங்கிய இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். உர மானியம் என்ற பெயரில், கம்பெனிகளுக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கப்படுகிறது. இந்த மானியம், உழவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும். மடகாஸ்கர் நெல் சாகுபடி முறையைத் தான், செம்மை நெல் சாகுபடி என்கின்றனர். இந்த முறைக்கு, நெல் வயலில் தண்ணீர் நிறுத்த வேண்டியதில்லை. ஆனால், நீர் பாயவும், காயவும் இருந்தால் தான் விளைச்சல் உயர்வதாக கதைகட்டி அவிழ்த்துவிடுகின்றனர்.


தமிழகத்தைப் பொறுத்தவரை 52 லட்சம் ஏக்கரில் 80 லட்சம் டன் நெல் அறுவடை செய்கின்றனர். இயற்கை விவசாயம் மூலம், ஒரு ஏக்கர் நிலத்தில் 4,000 கிலோ நெல் அறுவடை செய்கின்றனர். ஆங்காங்கே சில விவசாயிகள், வேளாண் துறையின் உதவியோடு 5,000 கிலோ வரை அறுவடை செய்து இருக்கின்றனர். இயற்கை விவசாயத்தின் அடிப்படையில், ஆந்திராவைச் சேர்ந்த நாகரத்தின நாயுடு 7,000 கிலோ அறுவடை செய்திருக்கிறார். அதாவது பசுமைப் புரட்சி கால விளைச்சலைப் போல மூன்று மடங்கு அறுவடை செய்து வருகின்றனர். ஆனால், இயற்கை வேளாண் முறையைப் பின் பற்றும் உழவர்களுக்கு மானியத் தொகை கிடைப்பது இல்லை. இவர்களுக்கு ஏக்கருக்கு, 3,000 ரூபாய் மானியமாக அளித்தால், ஏராளமான விவசாயிகள் இயற்கைக்கு மாறுவர். இயற்கைக்கு மாறாமல், மண் வளமாவதோ, நுண்ணூட்ட பற்றாக்குறை சரிசெய்யப்படுவதோ சாத்தியம் இல்லை. மானாவாரியாக பயிரிடப்படும் சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாளி, தினை, சாமை, காடைகன்னி போன்ற பயிர்ச் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். அப்படி விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, குறைந்த விலையில் ரேஷன் கடையில் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இப்படி செய்வதால் அரிசித் தேவை குறையும். உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, அடுத்தடுத்த மாநிலங்களுக்கு இடையில் உள்ள தண்ணீர் தகராறைத் தீர்த்துவைக்க வேண்டும். அனைத்து உழவர்களும் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர் ஆக்கப்பட்டு, வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட வேண்டும்.


சொட்டு நீர், தெளிப்பு நீர் சாதனங்களை மானிய விலையில் கொடுப்பதாகக் கூறி, உழவர்களுக்குச் செலவு அதிகமாக்கப்படுகிறது. மாறாக, நூறு சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டால், மின்சக்தி தேவை குறையும். தண்ணீர் தேவை குறையும். நெல் உற்பத்தி உயரும். பூமி சூடாவது தனியும். மலைப்பகுதிகளில் மக்கள் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, காடுகள் வளர்க்கப்பட வேண்டும். ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு மழைநீர் (வெள்ளம் வரும் பொழுது) சேமிக்க வேண்டும். காட்டு ஆறுகள் கடலில் கலப்பதற்கு முன், தடுப்பு அணைகள் கட்டி, நிலத்திற்கு அடியில் நீரை சேமிக்க வேண்டும். கொள்ளிடம், காவிரி போன்ற ஆறுகளில் கதவணைகள் எழுப்பி நீரை நிலத்திற்குள் இறக்கி, வறட்சியில் இருந்து பயிரை மீட்க வேண்டும். ஆறுகளில் கட்டுப்பாடு இல்லாது மணல் அள்ளுவது தடுக்கப் பட வேண்டும். மானிய விலையில் அனைத்து உழவர்களுக்கும் கொளுஞ்சி விதை (உரச்செடி) வினியோகம் செய்ய வேண்டும். கால்நடைகள் மாவட்டம் தாண்டி கடத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும். இப்படி ஒரு நிலை மேற்கொண்டால், இந்தியா மீண்டும் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நன்றி:
 நம்மாழ்வார், வேளாண் விஞ்ஞானி

கருத்துகள் இல்லை: