ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

டாக்டர் அப்துல் கலாம்: இளைஞர்கள் காலம்.


ரு தலைவன் கிடைத்தால்...

தமிழகத்தின்அருமைமிகு மக்களே, வாசகர்களே, இளைஞர்களே, உங்களுடன் ஒவ்வொரு “நக்கீரன்’’ இதழிலும் நான் மனம் திறந்து உரையாடப் போகிறேன். என்றுமே எனக்கு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைச் சந்திப்பதில் மிகவும் விருப்பம் உண்டு. இதுவரை என் வாழ்நாளில் பல பள்ளிகளுக்குச் சென்று அன்றலர்ந்த மலர்களைப் போல் இருக்கும் குழந்தை களைச் சந்தித்து அவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 1 கோடி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி, அவர்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுள்ளார்கள்.


அப்போதெல்லாம் அவர்கள் என்னிடம் காட்டிய அன்பும், மரியாதையும், நேசமும் என்னால் எப்போதுமே மறக்க முடியாது. என்னையே புதுப்பித்துக் கொண்ட தருணங்கள் அவை. பள்ளிகளில் மட்டும் அல்லாது, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், விஞ்ஞான ஆய்வரங்கங்கள், கூட்டங்கள் என்று பல்வேறு சந்திப்பு மையங்களில் நான் கண்ட இளைய சமுதாயம் என்னுள்ளே எப்போதுமே பெருமிதத்தையும், மிகப் பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த நாட்டின் மிகப்பெரிய வளம் மனித வளம். அதுவும் இளைய சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்த நாட்டின் மனித வளம் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தருகிறது.

கனல்விடும் இளைய நெஞ்சங்களே சக்தி வாய்ந்ததோர் ஆற்றல் வளம் என்பதை நான் உணர்கிறேன். அதையே தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன். 2020-ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னாலே கூட, இந்தியா ஒரு வளர்ந்த நாடு ஆகும் என்பது என் கனவு மட்டுமல்ல, ஆதாரங்களைக் கொண்ட நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்டன என்கிற தாக்கங்கள் இளைய சமுதாயத்தைச் சென்றடைந்தால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணியதன் விளைவே, உங்களுடன் நான் உரையாடப் போகும் இந்தத் தொடர்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவது “கற்பனை திறன் வாய்ந்த லீடர்ஷிப்’ (ஈழ்ங்ஹற்ண்ஸ்ங் கங்ஹக்ங்ழ்ள்ட்ண்ல்) எனப்படும் தலைமைப் பண்புதான். சிறிய அளவில் இருந்து நாட்டின் மிக உயர் பதவிகள் வரை சிறந்த தலைவர்கள் கிடைத்து விட்டால், அந்த நாடு மிக வேகமாக முன்னேறி விடும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதை நான் கண்கூடாகப் பார்த்திருக் கிறேன். நல்ல தலைவனும், நல்ல தலைமைப் பண்புகளும் சுபிட்சத்தைக் கொண்டு வரக்கூடிய ஆதார சக்திகள்.

இதற்கு எடுத்துக் காட்டாக எத்த னையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதியாக நான் பதவி வகித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள்..

தமிழ்நாட்டிலிருந்து சுமார் ஐம்பது கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அந்த எளிய மனிதர்களைக் காண எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், மழைத் தண்ணீர் சேமிப்புத் திட்டம் எப்படி செயல்படுத்தப் படுகிறது என்பதை பார்வையிட்டு விட்டு அவர்கள் என்னைக் காண வந்திருந் தார்கள்.

அவர்களிடம் நான், எப்படி கிராமங்கள் தன்முனைச் செயல்பாட்டின் மூலம் தன்னிறைவு கிராமங்களாக மாற முடியும் என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடித்ததும் ஒருவர் எழுந்தார். வேட்டி-சட்டையில் ஒரு கிராமத்து விவசாயியைப் போன்ற தோற்றம். அவர் பெயர் பன்னீர்செல்வம். கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் கிராமத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அவருடைய கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும், சுமார் 1125 வீடுகள், சுகாதாரத் தண்ணீர் வசதிகள் தன்முனைப்புடன், கிராம மக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டிருப்பதாகச் சொன்னார். நேரம் கிடைக்கும் போது தன் கிராமத்துக்கு வந்து அதைக் காணுமாறும் அவர் அன்போடு அழைப்பு விடுத்தார். தன்னிறைவு பெற்ற ஒரு தமிழகத்து கிராமத்தை உடனே காண எனக்கும் மிக விருப்பமாகவே இருந்தது. "கண்டிப்பாக வருவேன்' என்று அவரிடம் சொல்லி எல் லோருக்கும் விடை கொடுத்து அனுப்பினேன். மனதுக்குள் கீரப்பாளையம் கிராமமே சுற்றிச் சுற்றி வந்தது. எனது அலுவலர்களிடம் உதவியாளர்களிடம் சொல்லி சீக்கிரமே ‘கீரப்பாளையம்' கிராமத்துக்குச் செல்லப் பயண ஏற்பாடு செய்யுமாறு சொன்னேன்.

அந்த நாளும் சீக்கிரமே வந்தது. 2004-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 27-ம் தேதி நான் கீரப்பாளையம் கிராமத்துக்குச் சென்றேன். என் வருகையை நம்ப முடியாத அந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும், மக்களும் பெரும் ஆரவாரத்துடன் என்னை அன்போடு வரவேற்றார்கள். என்னைச் சூழந்து கொண்ட சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள்... அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை மட்டுமின்றி உணவு, உடை, பாத்திரங்கள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் என்று வகை வகையாய் அவர்கள் செய்து வைத்திருந்த கைவினைப் பொருட்களின் அழகியலையும் தரத்தையும் கண்டு நான் வியந்து போனேன். இந்தப் பொருட்களைச் சுற்று வட்டார மாவட்டங்களில் விற்பதாகவும் அவர்கள் தெரிவித்தது எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தந்தது. அவர்களிடம் "பொருட்களை மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யுங்கள்' என்று கூறினேன். மாவட்ட ஆட்சியரிடம், அதற்கான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னேன்.

அவர்கள் என்னை அமரவைத்து இனிமையான கிராமத்துப் பாடல்களைப் பாடியபடி நடனம் ஆடினார்கள். அந்த நாட்டார் சங்கீதம் மிக இனிமையாக இருந்தது. கீரப்பாளையம் கிராமமே பல விதங்களில் தன்னிறைவைப் பெற்று சந்தோஷமாக இருந்தது. அந்த கிராம பஞ்சாயத்துத் தலைவர் பன்னீர் செல்வம் தொலைநோக்கு கொண்டவராய், அருமையான தலைமைப்பண்புகள் கொண்ட எளிய தலைவராக இருந்தார். ஒரு சிறப்பான தலைமையின் வழி காட்டுதலில் கிராமம் கம்பீர நடை போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ணாரக் கண்டேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட் டுதல்களைத் தெரிவித்துக் கொண்டேன்.

இன்னொருவரைப் பற்றி யும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். கடலூர் மாவட்டத் தின் ஆட்சியாளராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த திரு. ககன் தீப் சிங் பேடிதான் அவர். சுற்று வட்ட கிராமங்களில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் களையும், சுய உதவிக் குழுக் களையும் ஒருங்கிணைத்து கை தேர்ந்த முறையில் உற்சாகப் படுத்தி அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒரு தலைவருக்குரிய நற்பண்புகளுடன் செய்து கொண்டி ருந்தார்.

தலைவர்களின் வழிகாட்டுதலி லும், மக்களின் உழைப்பிலும் பல கிராமங்களில் உள்ள குளங்கள் தூர் வாரப்பட்டு, நல்ல தண்ணீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டி ருந்ததை நான் கண்டேன். கீரப் பாளையம் கிராமத்தில் 5347 பேர் வசித்தார்கள். அவர்களில் ஆண்கள் 3012 பேர், பெண்கள் 2335 பேர். அவர்கள் வசித்த அத்தனை வீடுகளுக்கும் குடிதண்ணீரும், சுகாதாரத்துக்கான தண்ணீரும் குறைவில்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. இதைப் போலவே இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஆசை அப்போது என் மனதில் தோன்றியது. அப்போதுதான் காந்தி கண்ட கனவை நாம் நனவாக்க முடியும்.

ஏன், அது நடக்க முடியாத கனவா என்ன?

இந்த "கீரப்பாளையம்' என்கிற ஒரே ஒரு கிராமம் எனக்கு அந்த உண்மையை ஒரு ஒளிக்கதிர் போல உணர்த்தியது. இந்திய கிராம மக்கள் எல்லோருமே நல்ல மாற்றத்தை மனதார விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தின் கருவிகளாய் தாங்களும் உழைப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவை எல்லாம் ஒரு தலைவன். வழிகாட்ட ஒரு தலைமை. அந்த தலைவன் எங்கிருந்தோ வந்துதிப்பான் என்று இருக்கக்கூடாது. நம்மில் இருந்து, இளைய சமுதாயத்தில் இருந்து, நமது மண்ணில் இருந்து தலைவர்கள் தோன்ற வேண்டும்.

இந்த 21-ம் நூற்றாண்டில், உணர்ச்சிகளுக்கு அப்பாற் பட்டு அறிவார்ந்த சமுதாயத்திற்கு மக்களை இட்டுச்செல்லும் கூடமாக பள்ளிகள் இருக்க வேண்டும், அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் விளங்க வேண்டும், குழந்தைகளை வழிநடத்த வேண்டும், அவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும், அந்த மாற்றத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்.

அறிவுசார்ந்த சமுதாயம் உருவாக தலைவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்கள், மற்றும் சினிமா, நகைச்சுவை மூலம், நல்ல கருத்துக்கள் அனைத்து தரப்புக்கும் சென்று சேரவேண்டும். அந்த சூழ்நிலையை நமது நாட்டில் தோற்றுவிக்க வேண்டியது அனைவரது கடமையாகும். அந்த மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். அந்த மாற்றம் மட்டும் சரியாக ஏற்பட்டுவிட்டால் இங்கே மகத்தான மறுமலர்ச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

(தொடரும்)

Picture
Picture

கருத்துகள் இல்லை: