ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

அமெரிக்கா இந்தியா ஆட்டோ காதல்

காதலுக்கு கண் இல்லைன்னு தெரியும் ஆனால் கண்டம் கூட இல்லைன்னு இப்போதாங்க தெரிஞ்சிக்கிட்டேன்.என்னங்க ஒன்னும் புரியலையா? என்ன இவன் குழப்புறானேன்னு யோசிக்கிறீங்களா? சரி வாங்க அது என்னன்னு பார்ப்போம்.அதாவது காதலிக்கறதுக்கு அழகு,பணம்,பேரு,புகழ் இப்படி எதுவுமே தடையில்லைன்னு தெரியும்.அதனால்தான் காதலுக்கு கண் இல்லைன்னு சொல்றாங்கன்னு நான் நினைக்கிறேன்.ஆனால் சமீபத்துல ஜெய்ப்பூரில் நடந்த ஒரு கல்யாணத்துல கண்டம் கூட காதலுக்கு ஒரு தடையில்லைன்னு நிரூபிச்சு இருக்காங்க அமெரிக்க-இந்திய காதல் ஜோடியான விட்னி-ஹரிஷ்! என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாங்க, உண்மைதான்! அந்த பொண்ணு அமெரிக்காவின் சிக்காகோகாரர், நம்ம பையன் இந்தியாவின் ஜெய்ப்பூர்க்காரர், ஆனா பிடிச்ச உடனே காதல சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அந்த ரெண்டு பேரும் இந்தியாவிலேயே!

அதாவது, விட்னி என்கிற ஒரு அமெரிக்கப் பெண் இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டிருக்கிறார்.இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரை சுற்றிப்பார்க்க விரும்பிய அந்த பெண் ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி சுற்றிப்பார்கிறார்.அந்தப் பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் ஹரிஷுக்கு பிடித்துப் போக, தேனீர் அருந்தலாமா என அழைகிறார் ஹரிஷ்.ஆனால் முதலில் மறுத்து விடுகிறார் விட்னி.பிறகு இரண்டாம் நாளும் ஜெய்ப்பூரை சுற்றிப்பார்க்க எண்ணிய விட்னி ஆட்டோ தேடுகிறார்.புது ஆட்டோவை வாடகைக்கு அமர்த்த விருப்பமில்லாத விட்னி, மீண்டும் ஹரிஷின் ஆட்டோவையே அமர்த்தி சுற்றிப்பார்கிறார். நிறைய இடங்கள் சுற்றிப்பார்க்க வேண்டி இருப்பதால் ஹரிஷின் ஆட்டோவை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வாடகைக்கு அமர்த்தி ஜெய்ப்பூரை வலம் வருகிறார் விட்னி.

ஆட்டோவில் ஒரு காதல் கதை!

இந்த மூன்று நாட்களும் ஜெய்ப்பூரில் அவர்கள் மட்டும் இடமாறவில்லை(சுற்றிப்பார்க்கத்தாங்க!) அவர்களின் இதயங்களும் இடமாறிவிடுகிறது! அதாங்க காதல்! வெறும் காதல் இல்லீங்க, கண்டம் இல்லாக் காதல்.அப்புறமென்ன, காதலன் காதலியை மணம் முடிக்க எண்ணி சம்மதம் கேட்கிறார்.விட்னியும் உடனே சம்மதம் தெரிவிக்க காதல் கல்யாணமாய் மலர்கிறது.விட்னிக்கு “இது புதுசு கண்ணா புதுசு”, நம்ம ஹரிஷுக்கும்தாங்க! இதுல விசேஷம் என்னன்னா, விட்னி தன் பெற்றோரிடம் சம்மதம் எதுவும் பெருசா வாங்கி கல்யாணம் செய்துகொள்ளவில்லை.பிறகு எப்படிங்கிறீங்களா? அதாவது, ஹரிஷை மணக்க எண்ணிய விட்னி, தன் தாயாரிடம் அலைபேசியில் சொல்ல, அவர் ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சரியென்றிருக்கிறார்.தந்தையார் மட்டும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.அடுத்த வாரம் அமெரிக்க பறக்கவிருக்கும் விட்னி, தன் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்து பின் இந்தியா திரும்புவதாக முடிவெடுத்து இருக்கிறார்.

அந்த கண்டம் தாண்டி கண்டம் வந்து கல்யாணம் செய்துகொண்ட விட்னியை நீங்க பார்க்க வேணாமா? அதற்கு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளியை நீங்கள் பார்க்க வேண்டும்!

இதுதான் கண்டம் இல்லாக் காதல் போலிருக்கிறது! ம்ம்ம்…காலம் கெட்டுகெடக்கு மக்களே.சொடக்கு போடற நேரத்துக்குள்ள எடக்கு மடக்கா எது வேணும்னாலும் நடக்கும் போல இருக்கு.பார்த்து நடந்துக்குங்க!

கருத்துகள் இல்லை: