செவ்வாய், 29 செப்டம்பர், 2009

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம்

உள்நாட்டில் உருவான கிரையோஜெனிக் இயந்திரம் விண்ணில் பறக்க தயார்
செப்டம்பர் 29,2009,00:00 IST

திருநெல்வெலி : இந்திய தொழில்நுட்பத்தில் உருவான கிரையோஜெனிக் எரிபொருள்இயந்திரத்தின் மூலம் வரும் டிசம்பரில் ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி மலைப்பகுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் "திரவ திட்ட இயக்க மையம்' உள்ளது.



ராக்கெட்டின் உந்து சக்தியாக விளங்கும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனை தளமாக மகேந்திரகிரி மையம் செயல்படுகிறது. இதற்கு முன்பு ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் கூடிய கிரையோஜெனிக் இயந்திரங்களை இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. முதன்முறையாக இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகேந்திரகிரியில் நடந்த இதற்கான சோதனைகள் வெற்றியடைந்துள்ளன. மையத்தை நேற்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பார்வையிட்டார். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



பின்னர் அவர் கூறியதாவது: அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளில் இயங்கும் கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுகிறது. முதன்முறையாக இந்திய தொழில்நுட்பத்திலேயே தயாரான கிரையோஜெனிக் இயந்திரம் வரும் டிசம்பரில் தகவல் பரிமாற்றத்திற்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி.,மார்க் 3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான கிரையோஜெனிக் பயன்பாட்டிற்கு வருவதில் பெருமிதம் கொள்வோம். சந்திரயான் 1 வெற்றியை தொடர்ந்து சந்திரயான் 2 விண்கலம் வரும் 2010ம் ஆண்டின் இறுதியிலோ 2013ம் ஆண்டில் துவக்கத்திலோ ஏவப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: