செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது

காஞ்சிவரம் ' சிறந்த படம் : பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது
செப்டம்பர் 08,2009,00:00 IST


"புதுடில்லி: கடந்த 2007ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக, "காஞ்சிவரம்' என்ற தமிழ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

நாட்டின் 55வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு செய்வதற்காக, பிரபல இயக்குனர் சாய் பரஞ்சபே தலைமையில், நடுவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2007ல் வெளியான 102 திரைப்படங்கள் மற்றும் 106 டாகுமென்டரி படங்களை ஆய்வு செய்து, தேசிய விருதுகளை அறிவித்துள்ளது. கடந்த வாரமே விருதுக்கான அறிவிப்பு வெளியாவதாக இருந்தது. ஆனால், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் காரணமாக இந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

நேற்று விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக, பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் "காஞ்சிவரம்' என்ற தமிழ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த இயக்குனர் பிரகாஷ் ராஜுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. காஞ்சி ஏழை நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, யதார்த்தமாக இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. "சக்தே இந்தியா'வில் நடித்த ஷாரூக் கான், "தாரே ஜமீன்பார்' படத்தில் நடித்த அமீர் கான் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்குத் தான் சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும், ஏழை நெசவாளனாக காஞ்சிவரம் படத்தில் வாழ்ந்து காட்டிய பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பிரகாஷ் ராஜ்,"இருவர்'என்ற படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் . உமாஸ்ரீ தேர்வு :சிறந்த நடிகையாக "குலாபி டாக்கீஸ்' என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக உமாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷாரூக்கான் நடித்த சக்தே இந்தியா இந்தி படம், தேசிய அளவில் சிறந்த பொழுது போக்கு படமாகவும், அமீர் கான் நடித்த தாரே ஜமீன்பார் இந்தி படம் தேசிய அளவில் சிறந்த குடும்ப நல படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த பின்னணி பாடகராக, தாரே ஜமீன்பார் படத்தில் "மேரி மா'என்ற பாடலைப் பாடிய, சங்கர் மகாதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரமாக, "டின்கயா' என்ற மராட்டிய மொழிப் படத்தில் நடித்த சரத் கோயகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். "காந்தி மை பாதர்'என்ற இந்திப் படம், தேர்வுக் குழுவின் சிறப்பு விருதுக்கான படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு மேலும் இரு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த திரைக்கதைக்கான விருது பெரோஸ் அப்பாசுக்கும், சிறந்த துணை நடிகர் விருது தர்ஷன் ஜாரிவாலாவுக்கும் கிடைத்துள்ளது. சிறந்த படத்துக்கான தேசிய ஒருமைப்பாட்டு விருது, "தார்ம்'என்ற படத்துக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது "சேம் சங்'என்ற படத்தில் பாடல் எழுதிய, பர்சூன் ஜோசிக்கு கிடைத்துள்ளது. பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபலகிருஷ்ணனின் "நாலு பெண்கள்'என்ற படத்துக்காக, சிறந்த இயக்குனர் விருதை பெற்றுள்ளார். இது, இவருக்கு கிடைத்த ஏழாவது தேசிய விருது என்பது குறிப்பிடத் தக்கது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது "புரோஜன்'என்ற இந்தி திரைப்படத்தை இயக்கிய சிவாஜி சந்திரபூஷனுக்கு கிடைத்துள்ளது.

இந்த படத்துக்கு, சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக "போடோ'என்ற இந்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த படத் தொகுப்புக்கான விருது "நாலு பெண்கள்'மலையாள படத்துக்கு கிடைத்துள்ளது. பெரியார் படத்துக்கு விருது: சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது, "இனிமே நாங்கதான்' என்ற தமிழ் படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகையாக, ஷெபாலி ஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். "தி லாஸ்ட் லையர்'என்ற படத்தில் நடித்ததற்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த பின்னணி பாடகியாக, ஷ்ரேயா கோஷல் (ஜாப் வீ மீட்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடனத்துக்கான விருதும் "ஜாப் வீ மீட்' படத்துக்கு கிடைத்துள்ளது. மாநில மொழி வாரியான விருதில், சிறந்த தமிழ் படமாக "பெரியார்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மலையாள படமாக "ஒரே கடல்'என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரியதர்ஷன் மகிழ்ச்சி:காஞ்சிவரம் படத்துக்கு விருது கிடைத்தது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில்,"மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வர்த்தக ரீதியான படங்களின் இயக்குனர் என்ற பெயர் எனக்கு இருந்தது. தற்போது, காஞ்சிவரம் படம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருந்தார். எனவே, அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை'என்றார்.

கருத்துகள் இல்லை: