திங்கள், 28 செப்டம்பர், 2009

இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம்


சென்னை, செப். 26: "இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழகத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், அவரது இந்தியப் பயணத்துக்கான விசா அனுமதியும் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்... இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் "இலங்கைத் தமிழர்' குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அமெரிக்காவில் இருந்து எலின் ஷான்டர் பேசியது: 1940-களில் போலந்து நாட்டில் சித்திரவதை முகாம்களில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி படுகொலையானவர்களில் என்னுடைய குடும்பத்தாரும் அடங்குவர். ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் யூதர்கள் என்று அழைக்கலாம். அகதிகள் முகாமில் 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். இப்போது தொடங்கிவிட்ட பருவ மழையால் அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. முகாம்களில் உள்ள 35 ஆயிரம் குழந்தைகளில், 1,800 பேர் பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் உதவி நிறுவனத்தை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. அக் குழந்தைகளுக்கு யார் உதவி செய்ய இருக்கிறார்கள். கொசாவோ நகரில் மக்களை படுகொலை செய்த மிலோசெவிக், சூடான் பஷீர், லிபியா அதிபர் கடாபி ஆகியோர் போல இலங்கை அதிபர் ராஜபக்ஷவும் கொடுமையாக தமிழர்களை கொன்றுள்ளார். அவரை ஒரு போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும். உலகில் எந்த நாடும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லை. ஐக்கிய நாடுகள் சபை உதவ மறுக்கிறது. இப்போது தமிழக தமிழர்களும் உதவி செய்யாவிட்டால் யார் உதவி செய்வர்?. தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தன. அதன் விளைவாக நிறவெறி அரசு வீழ்ந்தது. அதுபோல ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருள்களை வாங்கக் கூடாது. அங்கு சுற்றுலா செல்லக் கூடாது. இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலியில் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளது வேறு எங்கும் நடக்காத மனிதப் பேரவலமாகும். 3 லட்சம் பேருக்கு முறையான தங்கும் வசதி கிடையாது. போதிய கழிப்பறை வசதி கிடையாது. வெறும் 500 கழிப்பறைகள் தான் உள்ளன. சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் சிக்குன்-குன்யா, மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி இறந்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கப் போதிய டாக்டர்கள் இல்லை. இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும் என்றார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இதில் பேசினர்.

கருத்துகள் இல்லை: