வியாழன், 3 செப்டம்பர், 2009

ஆந்திர முதலமைச்சர் மரணம்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
செப்டம்பர் 03,2009,00:00 IST

ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சாலமன் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். முதல்வர் உட்பட ஐந்து பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் 24 மணி நேரத்துக்குப் பிறகு கர்னூல் பகுதி மலையில் ‌இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தை பிரதமர் மந்திரியின் அலுவலகம் உறுதி செய்துள்ளது. முதல்வர் மரணம் குறித்து ம‌த்திய கேபினட் குழு கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்வர் மரண‌த்தை அடுத்து காங்., தலைவர் சோனியா ஆந்திரா விரைகிறார்.

ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்துவிட்டார். நேற்று காலை 8.35 மணிக்கு ஐதராபாத்திலிருந்து சித்தூர் செல்லும் வழியில் கர்னூல் அருகே உள்ள மலைப் பகுதியில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்திய அரசியலில் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து வரும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1949 ஜூலை 8ல், புலிவெண்டுலு எனும் இடத்தில் ராஜா மற்றும் ஜெயம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த அவர், மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். அவர் பிறந்த கடப்பா மாவட்டத்தில் சில காலம் மருத்துவப் பணியில் ஈடுபட்டார். பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். கடப்பா லோக்சபா தொகுதியிலிருந்து அவர் நான்கு முறை தேர்வானார். புலிவெண்டுலு சட்டசபை தொகுதியிலிருந்து ஆறு முறை தேர்வாகியிருக்கிறார்.

1980-83ல் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். கர்நாடாகவிலுள்ள துங்கபத்திரா நதியிலிருந்து, புலிவெண்டுலு கிளை கால்வாயில் தண்ணீர் பெற்றுத் தந்தது இவரை அரசியலில் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையாக அமைந்தது.

1983-1985 மற்றும் 1998 - 2000 ஆகிய காலங்களில் ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

2003ல், தெலுங்கு தேசம் சார்பில் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவர் மூன்று மாதத்தில் 1,400 கி.மீ., தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்திய அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியானது.பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் அதிகப்பகுதிகளுக்கு இந்த பாதயாத்திரையின் போது சென்றார். அதற்கடுத்த ஆண்டில் நடந்த தேர்தலில் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு இது காரணமாக அமைந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற அவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தார். கிடப்பில் இருந்த 70 நீர்ப்பாசன வசதிகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். நெல் கொள்முதல் விலையை உயர்த்தினார். சிறு தொழில் நடத்துவோருக்கு சிறப்பு சலுகைகள், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு, ஏழை எளியோருக்கு உதவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை அவர் வாரி வழங்கினார்.

கருத்துகள் இல்லை: