புதன், 13 ஜனவரி, 2010

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


யாரோ ஒருவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை  வைக்க முடிகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விவசாய பெருமக்கள்தான் அவர்கள். 

அறுவடை நாளை மனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் இதை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தோடு கொண்டாடுகின்றனர். தை முதல் நாளுடனேயே தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கிறது. 

பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டுப் பிறப்பையும் ஒரு சேரக் கொண்டாடும் நிலையை நாம் பெற்றிருக்கிறோம்.
 


இது இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் பண்டிகை என்று சொல்லாமல் தமிழர் திருநாள் என்கிறோம். உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் ஒரு விழா என்றால், அது தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவை தவிர வேறு ஏதுமில்லை. 

விவசாய நிலங்களில் இராப்பகலாக உழைத்து அறுவடைக்கு வருகிற நாள்தான் தை. உழைப்பை அறுவடை செய்து தேவையான தானியங்களையும், செல்வத்தையும் வீட்டுக்கு எடுத்து வர காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றி பெருக்கோடு எடுக்கும் விழா என்றால் அதுவும் பொங்கல் திருநாளில்தான்.
 


‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி எப்படி ஏற்பட்டது தெரியுமா? ‘‘கண்ணை இமை காப்பது போல விவசாய நிலத்தை பாதுகாத்து; நாற்றுகளை நட்டு; அவற்றுக்கு தேவையான உரம், நீரை இட்டு பாதுகாக்கும் காலகட்டத்தில் விவசாயின் கையில் நையா பைசா இருக்காது. 

நிலத்தில் விளைந்ததை அறுவடை செய்து அதை விற்று முடித்த பிறகே, அவன் கையில் காசு இருக்கும். புதுத் துணி, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது; வாரிசுகளின் திருமணம் என மகிழ்ச்சியோடு தை மாதத்தில் ஒவ்வொன்றாக மன நிறைவோடு செய்து முடிப்பான் விவசாயி.
 


இதனால்தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழியே தோன்றியது என்கிறார்கள் முன்னோர்கள். பொங்கல் திருநாள் ஒருநாளில் முடியும் பண்டிகை அல்ல. போகிப் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்களும் தமிழர்களுக்கு உற்சாகமான நாட்கள்தான்.
 

போகி
மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. பழையன கழிதலும்; புதியன புகுதலும் இத்தினத்தில்தான் நடக்கிறது.
இதற்காகதான் தைப் பொங்கலுக்கு முன்பே வீட்டுக்கு புதிதாக வெள்ளையடித்து, பழையப் பொருட்களை மூட்டைக்கட்டி போகிப் பண்டிகை அன்று தீயிட்டு கொளுத்துகிறோம். இப்படி செய்யும் போது பழையன கழிந்து விடுகிறது.
 


தைப் பொங்கல்
 சந்திரன், சூரியன் போக்கை வைத்து காலத்தை கணித்தவர்கள் நம் பழம்பெருமைக் கொண்ட தமிழர்கள். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் இயற்கை நிகழ்வை தைத் திருநாளாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் தமிழர்கள் புத்தாடை அணிவார்கள். அறுவவையில் கிடைத்த அரிசி, கரும்பு சாறில் எடுக்கப்பட்ட வெல்லம், பால், நெய் இட்டு பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் போதே வீட்டில் உள்ளவர்கள் ‘பொங்கலோ.... பொங்கல்’ என்று உற்சாக முழக்கம் செய்வார்கள். சூரியனுக்கு தனியாக பூஜை செய்து வணங்கி மகிழ்வார்கள்.
 


மாட்டுப் பொங்கல்
தைப் பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள் வருவது மாட்டுப் பொங்கல். உழவர்களின் நண்பர்களான கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் உழவுக்கு உதவிய விவசாய கருவிகள், ஏர் ஆகியவற்றை சுத்தம் செய்து மஞ்சள், குங்கும் வைத்து வழிபடுவார்கள். கால்நடைகளையும் சுத்தம் செய்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி அழகுப்படுத்துவார்கள். அதற்கு பொங்கல் கொடுத்தும் அந்நாளை கொண்டாடி மகிழ்வர். கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டுப் பொங்கல் களைகட்டும்.
 


காணும் பொங்கல்
கடைசி நாளை காணும் பொங்கலாக தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இதை கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கிறார்கள். இன்றைய தினத்தில் உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வார்கள். பெரியோர்களிடம் ஆசி பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் உரி அடித்தல், கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இந்நாளை கழிப்பார்கள்.
 


இவற்றோடு பொங்கல் திருநாளில் தனியாக இடம் பிடிப்பது ஜல்லிக்கட்டு. தை மாதம் தொடங்கி பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அமர்க்களப்படும். இதேபோல் சாவக்கட்டு என்றழைக்கப்படும் சேவல் சண்டைகளும் கிராமங்களில் நடத்தி மகிழ்வார்கள். பொங்கல் திருநாள் இப்படி நான்கு நாட்களுக்கு களைகட்டும். பொங்கல் விழா தமிழர்களின் பெருவிழா!

உலகில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய 
" தமிழ் புத்தாண்டு  மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்" 5 கருத்துகள்:

goma சொன்னது…

பொங்கலாய் இனித்தது பதிவு.

வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அபுல் ப‌சர் சார் .

பாலா சொன்னது…

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தமிழ் சொன்னது…

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

பெயரில்லா சொன்னது…

தை திருநாள், தமிழர் திருநாள் தான் !
தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று தான் . விளக்கத்துக்கு இந்த சுட்டியை பாருங்கள்
http://mohanacharal.blogspot.com/2009/01/blog-post_21.html