சனி, 2 ஜனவரி, 2010

வரலாறு : பூலான் தேவி ( இறுதி பாகம் )

 

 

முன்னாள் கொள்ளைக்காரி பூலான்தேவி "எம்.பி", மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். "எம்.பி"யாகி இருந்ததால் பூலான்தேவிக்கு டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள அசோகா ரோட்டில் 
44-ம் எண் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.

பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் காலங்களில் பூலான்தேவி அந்த வீட்டில் தங்கி இருந்து, சபைக்கு சென்று வருவது வழக்கம். 2001,ம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. எனவே, பூலான்தேவி டெல்லி வந்து பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

25.7.2001 அன்று பாராளுமன்ற கூட்டத்துக்கு சென்ற பூலான்தேவி பகல் 1:30 மணி அளவில் மதிய சாப்பாட்டிற்காக காரில் வீடு திரும்பினார். அவருடன் பாதுகாவலர் பல்வீந்தர்சிங் சென்றார்.

வீட்டு முன் சென்று கார் நின்றதும் பூலான்தேவி இறங்கினார். `கேட்டை திறப்பதற்காக பல்வீந்தர்சிங் முன்னால் சென்றார். அப்போது, திடீரென்று முகமூடி அணிந்த 3 மர்ம மனிதர்கள் பூலான்தேவியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதை பார்த்ததும் பல்வீந்தர்சிங், மர்ம மனிதர்களை நோக்கி திருப்பி சுட்டார். ஆனால் அவரையும் அந்த மர்ம மனிதர்கள் சுட்டு வீழ்த்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டு, வீட்டிற்குள் இருந்த வேலைக்காரர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பூலான்தேவியையும், பாதுகாவலர் பல்வீந்தர்சிங்கையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே பூலான்தேவியின் உயிர் பிரிந்து விட்டது. டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். கணவரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

பூலான்தேவியின் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அதில் 3 குண்டுகள் தலையை ஊடுருவி இருந்தன. 2 குண்டுகள் மற்ற இடங்களில் பாய்ந்து இருந்தன. பாதுகாவலர் பல்வீந்தர்சிங் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

பூலான்தேவி சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பூலான்தேவியின் சொந்த தொகுதியான மிர்சாபூரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. உத்தரபிரதேச மாநிலத்தில் "முழு அடைப்பு" நடந்தது.

பூலான்தேவியை கொன்ற மர்ம மனிதர்கள் 3 பேரும் பச்சை நிற மாருதி காரில் வந்தனர். பூலான்தேவியை எதிர்பார்த்து அவரது வீட்டு அருகில் காத்திருந்தனர். பூலான்தேவி காரை விட்டு இறங்கியதும், அவரை சுட்டு விட்டு, அதே காரில் தப்பிச் சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வந்து பிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும், அந்தக் காரை ரோட்டில் அனாதையாக விட்டுவிட்டு, "ஆட்டோ"வில் ஏறிச்சென்று விட்டனர்.

கொலையாளிகள் விட்டுச்சென்ற காரை போலீசார் கைப்பற்றினர். காருக்குள் 2 கைத்துப்பாக்கிகள், 9 காலி தோட்டாக்கள், 15 சுடப்படாத குண்டுகள், 2 முகமூடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட அந்த குண்டுகள், வெளிநாட்டுத் துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடியவை. எனவே, கொலைக்கு வெளிநாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பூலான்தேவியின் உடல் அவருடைய வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் வாஜ்பாய் சென்று, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பூலான்தேவியின் தாயார் மூலாதேவிக்கு ஆறுதல் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் பூலான்தேவியின் உடல் தனி விமானத்தில் வாரணாசி கொண்டு செல்லப்பட்டது. அந்த விமானத்தில் பூலான்தேவியின் தாயார் மூலாதேவி, கணவர் உமத்சிங், சகோதரிகள் முண்ணி, ருக்மணி, மைத்துனர் ஹர்கோவிந்த் ஆகியோரும் சென்றனர்.

வாரணாசி போய்ச் சேர்ந்ததும் பூலான்தேவியின் உடல் வேன் மூலம் மிர்சாபூருக்கு கொண்டு செல்லப்பட்டு சுடு காட்டில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு கணவர் உமத்சிங் தீ மூட்டினார்.

ஏற்கனவே, பூலான்தேவிக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே, தனது பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

அதற்கு போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. "ஆயுதச் சட்டத்தின்படி கைதிகள் துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. ஏனென்றால், பூலான்தேவி மீதான சில வழக்குகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன" என்று தெரிவித்தனர். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக பூலான்தேவி அறிவித்து இருந்தார்.

கொலை நடந்த 3 தினங்களிலேயே, முக்கிய புள்ளி சிக்கினான். அவனுடைய பெயர் பங்கஜ்சிங் (வயது 25). பூலான்தேவியை சுட்டுக்கொன்ற பிறகு, ஆட்டோவில் தப்பிய பங்கஜ்சிங் பஸ் மூலம் ஹரித்துவார் சென்றான். அங்கிருந்து டேராடூன் போய்ச் சேர்ந்தான்.

இதனை மோப்பம் பிடித்து தெரிந்து கொண்ட போலீசார் டேராடூன் விரைந்து சென்று 27,ந்தேதி காலையில் பங்கஜ்சிங்கை கைது செய்து விட்டனர். பிறகு அவனை டெல்லிக்கு கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக பங்கஜ்சிங்கின் கூட்டாளிகள் ரவீந்தர், சேகர், ராஜ்வீர் ஆகிய 3 பேரும் தேடப்பட்டனர். இவர்கள் உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். போலீஸ் பிடி இறுகியதால், இந்த 3 பேரும் சகரன்பூர் என்ற இடத்தில் உள்ள கோர்ட்டில் சரண் அடையச் சென்றார்கள். குற்றம் டெல்லி எல்லைக்குள் நடந்திருப்பதால் அங்கு சென்று சரணடையுங்கள்" என்று நீதிபதி கூறிவிட்டார்.

இதனால் ஏமாற்றத்துடன் கோர்ட்டை விட்டு வெளியேறினர். அங்கு தயாராக நின்ற போலீசார் அந்த 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தார்கள். அவர்கள் பயன்படுத்திய வெள்ளை நிற கார், செல்போன் மற்றும் 2 சிம்கார்டு ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 மாத காலமாக திட்டம் தீட்டி இந்த கொலை சதியை நிறைவேற்றியதாக போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். கொலையாளி பங்கஜ்சிங் தனது வாக்குமூலத்தில், "பெக்மாய் கிராமத்தில் எங்கள் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த 22 பேரை ஈவு இரக்கமின்றி பூலான்தேவி கொன்றார். அப்போது எனக்கு 6 வயதுதான்.

இதற்கு பழிக்கு பழி தீர்க்க பூலான் தேவியை கொன்றேன். என்னுடைய அந்த லட்சியத்தை நிறைவேற்றிவிட்டேன்" என்று கூறி இருந்தான். அவனது அரசியல் முன்னேற்றத்துக்கு பூலான்தேவி உதவி செய்யாததால் கொலை செய்ததாக மற்றொரு காரணமும் கூறப்பட்டது.

பூலான்தேவிக்கு புத்தகம் வெளியிட்டதிலும், "பாண்டிட் குயின்" படத்தின் மூலமாகவும் ரூ.1 கோடி வரை ராயல்டி கிடைத்தது. இந்த பணம் விவகாரமாகவும் கொலை நடந்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகப்பட்டனர். இது தொடர்பாக பூலான்தேவியின் கணவர் உமத்சிங்கிடம் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. ஆனால் கொலையாளிகள் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று உமத்சிங் மறுத்துவிட்டார்.

பூலான்தேவியின் வாழ்க்கை துப்பாக்கியால் தொடங்கி, துப்பாக்கியில் முடிவுற்றது.

1 கருத்து:

கிரி சொன்னது…

பூலான் தேவி தொடர் சிறப்பாக இருந்தது..