புதன், 6 ஜனவரி, 2010

மரணவாசலில் மழலைகளின் அழுகுரல் : கண்ணீரை துடைக்க கரங்கள் நீளுமா?

 





கோவையில், ரத்தப்புற்று நோய் பாதித்த எண்ணற்ற குழந்தைகள், அரிய வகை ரத்தம் கிடைக்காமல் உயிருக்கு பேராடுகின்றனர்.  புற்றுநோய் பாதித்தாலே வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டதாக பலர் கருதுகின்றனர். ஆரம்ப நிலையில் கண்டறியும் புற்று நோய்களை குணப்படுத்த மருத்துவ வசதிகள் உள்ளன. ஆனால், ரத்தப்புற்று நோய் பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பது, டாக்டர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.


குறைந்து வரும் செல்களின் "கவுன்ட்' க்கு ஏற்ப, அடிக்கடி புதிய ரத்தம் ஏற்றப்பட வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவரின் வாழ்நாளை நீட்டிக்க முடியும். ஆனால், ரத்தப்புற்று நோய் பாதித்தோருக்கு ரத்த தானம் அளிக்க பலரும் முன்வருவதில்லை. விபத்து காயமடைந்து உயிருக்கு போராடும் நபர்களுக்கும், அறுவைச் சிகிச்சைக்காகவும் ரத்த தானம் செய்ய தாராளமாக முன் வருபவர்கள், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ரத்தம் அளிக்க ஆர்வமுடன் முன்வருவதில்லை.


கோவையிலுள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென பிரத்யேக வார்டுகள் உள்ளன. இங்கு சிகிச்சை பெறுபவர்களில் பலர் ஏழைக் குழந்தைகள். நள்ளிரவில் ரத்தத்தில் செல் எண்ணிக்கை குறையும் போது ரத்தம் கிடைக்காமல் தவித்துப் போகின்றனர். ரத்தம் கிடைக்காமல் கண் முன் குழந்தைகள் மரணம் அடைவதை கண்டு, பெற்றோர் கண்ணீர் விடுகின்றனர். எனவே, ரத்தப்புற்று நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்ய அதிகளவில் இளைஞர்கள் முன் வரவேண்டும் என்கின்றனர், டாக்டர்கள்.


கோவையில் சில இளைஞர்கள் இணைந்து, ரத்தப்புற்று நோயாளிகளுக்கு உதவுவதற்கென்றே "ஸ்பாட் பிளட்' ரத்த தான கிளப் நடத்துகின்றனர். இவர்கள் நள்ளிரவில் யார் அழைத்தாலும் ரத்த தானம் செய்து வருகின்றனர். எனினும், "ஏபி நெகட்டிவ், பி நெகட்டிவ், ஓ நெகட்டிவ், பாம்பே ஓ.எச்.ஆர்' போன்ற அரிய வகை ரத்தம் தேவைப் படும் போது, தானம் செய்வோர் கிடைக்காமல் திணறுகின்றனர். "ஸ்பாட் பிளட்' கிளப்பில் அங்கம் வகிக்கும் அப்பாஸ் கூறியதாவது: நெகட்டிவ் குரூப் ரத்தம் உள்ளவர்கள் சிலரே உள்ளனர். இவர்கள் அவசர தேவையின் போது, புற்று நோயாளிகளுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வாழ்நாளை நீட்டிக்க முடியும். உடனிருந்து கவனிக்கும் பெற்றோருக்கும் புதிய நம்பிக்கை பிறக்கும்.


ஒருவர், ஐந்து நிமிடம் செலவிட்டு அளிக்கும் ரத்தம், குழந்தையின் ஆயுளை ஐந்து நாட்கள் நீட்டிக்க உதவும். இவ்வாறு ரத்தம் தானம் அளித்து நான்கு ஆண்டுகள் வரை கூட பத்து வயது சிறுமியின் ஆயுளை நீட்டித்துள்ளோம். தானம் அளிப்பவரை நம்பித்தான் இந்நோயாளிகளின் ஒவ்வொரு நொடியும் கடக்கிறது. ஆகவே, நெகட்டிவ் குரூப் உள்ள ஒவ்வொருவரும் ரத்த தானம் அளித்து ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக் குழந்தைகள் இந்த உலகில் இன்னும் சிறிது நாட்கள் குதூகலத்துடன் வாழ உதவ வேண்டும். இவ்வாறு, அப்பாஸ் தெரிவித்தார்.


தனியார் மருத்துவமனையின் ரத்த வங்கி ஊழியர் குணசேகரன் கூறியதாவது: ரத்த புற்று நோயாளிகளுக்கு புதிய ரத்தம் தான் நல்லது. இதனால் குறைந்து வரும் ரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். ஏற்கனவே சேமித்து வைத்த ரத்தம் சிறிதளவே பயன் தரும். பல மருத்துவமனைகளில் அதிக ரத்தம் சேமிப்பதற்கான வசதிகள் இல்லை. 

சாதாரண அறுவை சிகிச்சைகளின் போது ரத்தம் தேவைப்படுவோருக்கு அவர்களின் உறவினர்கள் ரத்தம் அளித்து உதவுவர். ஆனால், ரத்த புற்று நோயாளிகளுக்கு ரத்தம் அளிக்க அவர்களின் உறவினர்களே கூட வர மறுக்கும் அவல நிலைதான் உள்ளது. 

ஆகவே, மருத்துவமனைகள், பொது அமைப்புகள் நடத்தும் ரத்த தான முகாம்களில் பங்கேற்று யாரோ முகம் தெரியாதவர்களுக்காக தானம் செய்பவர்கள், புற்றுநோய் மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளில் தங்கள் பெயரை பதிவு செய்து புதிய உறவுகளை உருவாக்கலாம். 

இதனால், அவசர காலங்களில் தேவைப்படும் போது புதிய ரத்தம் அளித்து பிஞ்சுக் குழந்தையின் ஆயுளை நீட்டிக்க முடியும். ஊனமுற்றோரும், அரவாணிகளும் பதிவு செய்து ரத்தம் வழங்க தயாராக இருக்கும் போது, அவர்களை போல் அனைவரும் பதிவு செய்து கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு, குணசேகரன் தெரிவித்தார்.


ஒருவர் உயிருடன் இருக்கும் போது செய்யும் தானங்களில் சிறந்தது ரத்த தானம் மட்டுமே. சாவின் விளிம்பில் நிற்கும் ஏழைக் குழந்தைகளுக்கு ரத்தம் அளித்து தானத்தை அர்த்தம் உள்ளதாக மாற்றலாம். அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படுவோர் 96004 00190, 98434 89535 ஆகிய எண்களில் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என, "ஸ்பாட் பிளட்' கிளப் தெரிவித்துள்ளது.

நன்றி:தினமலர் 


வேண்டுகோள் : இந்த வலைப்பதிவை படிக்கின்ற நண்பர்களே, நீங்களோ,அல்லது உங்கள் நண்பர்களோ,அல்லது உறவினர்களோ கோவைக்கு அருகில் இருப்பீர்களாயின் உங்களால் முடிந்ததை இந்த பிஞ்சு குழந்தைகளுக்காக செய்யுங்கள். 

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றே "  




கருத்துகள் இல்லை: