வெள்ளி, 11 ஜூன், 2010

தமிழக கல்லூரி மாணவர் உலக சாதனை



  


உலகின் 124 நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்ற போட்டியில் கலந்து கொண்டு மனிதக் கழிவுகளை எளிய வகையில் பயனுள்ளதாக மாற்றி, அதை எரிசக்தியாக மாற்ற முடியும் என சாதித்தார் தமிழக கல்லூரி மாணவர்.


அமெரிக்க நாட்டின் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆண்டுதோறும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே "இமேஜின் கப்' என்ற பெயரில் உலகளாவிய போட்டியை நடத்துவது வழக்கம். இதில், உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்தியா உட்பட 124 நாடுகளைச் சேர்ந்த மூன்று லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மொத்தம் ஆறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தாலும், கடும் போட்டிகளை சமாளித்து இன்விஷனிங் 2020 அவார்டு என்ற பிரிவில் இந்திய மாணவ, மாணவியர் தங்கள் பங்கை அளித்தனர்.
இப்பிரிவில் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பம் ,பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் மாணவர் கவுசிக் தனது கண்டுபிடிப்பான "எலக்ட்ரானிக் லேவட்டரி' (மின்னணு கழிவறை) யை சமர்ப்பித்தார்.

இத்திட்டத்தின்படி செயல்படும் எளிய கருவி மூலம் நீரை சேமிக்கவும், மனிதக் கழிவுகளை எளிதாக அகற்றவும், அகற்றப்பட்ட கழிவுகள் மூலம் பயோ காஸ் தயாரிக்கவும், எரிசக்தி உற்பத்தி செய்யவும் முடியும். இக்கருவி மூலம் சுற்றுச்சூழலை பாதிப்படையாமல் காப்பதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மாணவர் கவுசிக்கின் கண்டுபிடிப்பு, போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து, கவுசிக் இறுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள போலந்து நாட்டுக்கு செல்ல உள்ளார். அவரது பயணச் செலவு அனைத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது. கல்லூரி செயல் அலுவலர் பிரதியுஷா கூறியதாவது: மாணவர் கவுசிக் கல்லூரியில் பயின்ற நான்கு ஆண்டுகளில், தனது பல்வேறு ஆய்வுகளுக்காக, பல்வேறு வகைகளில் 75 பரிசுகளை வென்றுள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்திலும் அவர் பரிசினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் போலந்து நாட்டில் நடக்கும் இறுதிச் சுற்றிலும் வெல்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதியுஷா கூறினார்.

4 கருத்துகள்:

goma சொன்னது…

மாணவன் கவுசிக் வெற்றி பெற வாழ்த்துவோம்

மாதேவி சொன்னது…

சாதனை படைத்ததற்கு பாராட்டுகள்.

கவுசிக் இறுதிச் சுற்றிலும் வெல்ல வாழ்த்துகள்.

AkashSankar சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

நன்றி: கோமா, மாதேவி,ராசராசசோழன்