திங்கள், 21 ஜூன், 2010

கட்சி தாவல் : கழகங்கள் போடும் கணக்கு ?

அற்ற நீர்குளத்து அறுநீர் பறவைபோல்' அ.தி.மு.க., என்ற குளத்தில் இருந்து பறக்கும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அ.தி.மு.க., தலைமை தனது அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பது இந்த பறவைகளால் அந்த கட்சிக்கு கிடைத்த நன்மை.


பறந்து வரும் பறவைகளுக்கு அடைக்கலம் தரும் கூடாரமாக தி.மு.க., மாறி வருகிறது. வந்தவர்களை வரவேற்ற நிலை மாறி, "வாருங்கள்... வாருங்கள்...' எனஅழைக்கும்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளது தி.மு.க., தலைமை.அ.தி.மு.க.,வை நிலைகுலையச் செய்ய, ஆளுங்கட்சி நடத்தும் இந்த இழுப்பு வேலைகள், அவர்களது கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில், ஆளுங்கட்சியும், அதில் இணைபவர்களும், எதிர்காலக் கணக்குகளை போட்டுப் பார்த்த பின்புதான், இணைப்பு வைபவம் நடந்து வருகிறது.


தூத்துக்குடியில் பெரியசாமியின் இடத்தை எதிர்காலத்தில் நிரப்பவும், பெரியசாமிக்கு, "செக்' வைக்கவும் ஒரு ஆள்தேவை என்பது தி.மு.க.,வின் கணக்கு. தூத்துக்குடி தி.மு.க.,வில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம், இதே சொல்வாக்குடன் அரசியலைத் தொடர முடியும் என்பது அனிதா ராதாகிருஷ்ணனின் எதிர்பார்ப்பு.
 
கரூரில் மாவட்ட செயலராக இருந்த வாசுகி முருகேசன் மறைவுக்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்ட, "சீனியர்' உடன்பிறப்பான பரமத்தி சண்முகம், கே.சி.பழனிசாமி ஆகியோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், அவர்களை முன்னிலைப்படுவது பலன் அளிக்காது என தி.மு.க., தலைமை கருதுகிறது.


இதன் காரணமாகத்தான், கரூர் சின்னச்சாமியை ஆளுங்கட்சி அரவணைத்துள்ளது. இந்த கணக்குகளின் அடிப்படையில் தனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், சின்னசாமியும் ஐக்கியமாகியுள்ளார்.ஈரோட்டில், "மாஜி' அமைச்சர் ராஜாவால் கட்சிக்கு ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட முத்துசாமியை ஆளுங்கட்சி இழுத்துள்ளது. 

மாநில அளவில் இல்லாவிட்டாலும், மாவட்ட அளவில் தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் அரசியல் செய்ய இடம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் முத்துசாமியும்  இடம் மாறியுள்ளார்.கருப்பசாமி பாண்டியன், சாத்தூர் ராமச்சந்திரனில் துவங்கி, இது போல பல பறவைகள் வந்திருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒருவிதமாக, காரணங்களைத் தாங்கியே, தி.மு.க., கூட்டில் அடைந்துள்ளன. இவற்றில், வழக்குகள் மூலம் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கவும், சிலர் பாõதுகாப்பான இடமாக ஆளுங்கட்சியை கருதி வந்து இணைந்துள்ளனர்.


இப்படி வந்தவர்களில், புதுக்கோட்டையில் பெரியண்ணன் இடத்தை நிரப்ப வந்த ரகுபதி, கோவையில் பொங்கலூர் பழனிசாமிக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட கண்ணப்பன், திருச்சியில் மருங்காபுரி பொன்னுசாமி என மணக்காத மல்லிகைகளும் உண்டு.
ஆளுங்கட்சி என்னதான், ஆசை வார்த்தை காட்டினாலும், அதற்கு சலனப்படாத நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் ஏராளமானவர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் தங்களுக்கு கட்சி தலைமை கொடுத்த அங்கீகாரம்,பதவி, மரியாதையை மதிக்கும் இவர்கள், எதிர்காலத்திலும் இவை தங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகின்றனர்.


"உங்களுக்கு அழைப்பு வரவில்லையா' என, வழக்குகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க., "மாஜி' ஒருவரைக் கேட்டபோது, "அரசியலில் இந்த அளவிற்கு உயர்வேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இந்த இயக்கம்தான் என்னை உலகிற்கு அடையாளம் காட்டியது. அரசியல் என்ற பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்ப்பதற்கும், ஆளுங்கட்சியில் இணைவதற்கும் வித்தியாசமில்லை' என்று நெற்றிப்பொட்டில் அடித்தார்போல் பதில் சொன்னார்.


ஆளுங்கட்சி மட்டுமே இழுப்பு வேலைகளை செய்து வரும் நிலையில், " தி.மு.க.,வில் இருந்து பலர் வரவுள்ளனர்' ஜெயலலிதாவும் தன் பங்கிற்கு வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதற்குள், இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்களை இழுத்து, "இணைப்பு விழா' என்ற பெயரில், "கூத்தாட' தயாராகியுள்ளனர்.இந்த கூத்துக்களை வாக்காளர்களும் மவுன சாட்சிகளாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இரு கழகங்களும் மறக்காமல் இருப்பது, அவர்களது எதிர்காலத்திற்கு நல்லது.

நன்றி:
தினமலர்.

10 கருத்துகள்:

goma சொன்னது…

அரசியல் ...என்ன அரசியலோ...
புரியாமலேயே இப்படியென்றால் புரிந்து விட்டால் எப்படி இருக்குமோ....

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அரசியலில் நிரந்தர நண்பனும் , எதிரியும் இல்லை என்பதுதான் ஞாபகத்துக்கு வருது. :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இன்றைய நிலை நாளை மாறலாம்.. அரசியலில் எல்லாமே சகஜமாகிவிட்ட நிலையில் சாதாரணமாகவே தோன்றுகிறது.

Unknown சொன்னது…

நன்றி:-
@கோமதி அவர்களே
@அக்பர் அவர்களே
@ஸ்டார்ஜன் அவர்களே

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஏதோ புரியுது ஆனா புரியல..

பனித்துளி சங்கர் சொன்னது…

ஒரு நாள் சுத்தம் செய்யப்படும் இந்த சாக்கடை நிரந்தரமாக .

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல அரசியல் பார்வை...

Unknown சொன்னது…

"ஏதோ புரியுது ஆனா புரியல."
இதுதான் அரசியல். புரியாதவரை அரசியல் நமக்கு ஒரு புதிர்தான்.
நன்றி: சகோதரி மலிகா..

Unknown சொன்னது…

"ஒரு நாள் சுத்தம் செய்யப்படும் இந்த சாக்கடை நிரந்தரமாக"

ஆம்.நிச்சயமாக.
நன்றி:@ சங்கர் .

Unknown சொன்னது…

நன்றி: சங்கவி