செவ்வாய், 8 ஜூன், 2010

விழாக் கோலம் பூண்டது தென் ஆப்ரிக்கா!

      

 


உலகிலேயே அதிகமான நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை முதன்முறையாக தென்னாப்பிரிக்கா நடத்துகிறது.
வருகின்ற 11.06.2010. வெள்ளிகிழமை அன்று போட்டிகள் தொடங்குகின்றன.இப்போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டிகள் 4 நாடுகளாக 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே  உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.  

ஜோகன்னஸ்பர்க் தம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போட்டி நடைபெறும் கால்பந்து மைதானம் வரையிலான சாலைகள் மிகவும் அழகாகவும் , அற்புதமாகவும் சீரமைக்கப்பட்டுள்ளன. 
தென்னாப்பிரிக்காவில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும், கார்களில் உலகக் கோப்பையை நினைவுகூரும் வகையில் வண்ணமயமான கொடிகளும், முக்கிய பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஏராளமான விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. 
போட்டிகளில் பங்கேற்கும் 32 நாடுகளை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் கார்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளன.தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா தனது நாட்டு கால்பந்து வீரர்கள் அணியும் மஞ்சள்நிற உடை அணிந்தே, தற்போது வலம் வருகிறார். 
தென்னாப்பிரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை தோறும் கால்பந்து உடையணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்பந்து உடைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வேலை செய்யும் இடங்கள் மற்றும் பள்ளிகளிலும் உலகக் கோப்பை கால்பந்து பற்றியே பரவலாக பேசப்படுகிறது. 
2010-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் என்று 2004-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போதே, புதிய சாலைகள், புதிதாக விமான நிலையங்கள், ஹோட்டல்கள், 6 புதிய கால்பந்து மைதானங்கள் ஆகியவை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. 
சாக்கர் சிட்டியில் புதிய மைதானம் 94,700 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 1.3 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம் போட்டி துவங்கும் வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்படுகிறது. 
உலகக் கோப்பை போட்டியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பது குறித்து கேட்டபோது, அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தென்னாப்பிரிக்காவின் உள்துறை அமைச்சர் நேதி தேத்வா தெரிவித்துள்ளார். 
இப்போட்டிக்கு இண்டர் போல் (சர்வதேச போலீசார்) பாதுகாப்புப்       பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கோலாகலமாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மட்டுமின்றி, 32 நாடுகளின் முன்னணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடவுள்ளதால் உலக கால்பந்து ரசிகர்களுக்கு இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி, திருவிழாவாக அமையும் என்பதில்  சந்தேகமில்லை.1 கருத்து:

goma சொன்னது…

கிரிக்கெட் கிரிக்கெட்ன்னு கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு...கால்பந்தாட்டமும் கொஞ்சம் பார்க்கலாமே என்ற உணர்வை உண்டாக்கியது உங்கள் பதிவு