வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே: ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்

 
கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது.  இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

கிரிகோரி ஜேம்ஸ்:- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்:- (ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.) நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 17வது நூற்றாண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த அறிஞர், தரங்கம்பாடிக்கு வந்து தமிழ் மொழி பயின்று, தமிழ் மொழியில் நூல்களை எழுதியுள்ளார். அதிலிருந்து, 300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி அங்கு மதிக்கப்பட்டு வருகிறது. கலோன் பல்கலைக்கழகத்தின் 1943லிருந்து தமிழ்த்துறை செம்மையாக செயல்படுகிறது. தமிழில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப்படிப்பு வரை அங்கே படிக்கும் வசதியுள்ளது. தமிழகத்துக்கு வெளியே உள்ள தமிழ் நூலகங்களில் பெரிய நூலகம் அங்குள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அங்குள்ளன.

ஜெர்மனியில் தமிழ்த் தாய்க்கு கோவில் கட்ட முயற்சி எடுத்து வருகிறோம். எட்டாவது தமிழ் இணைய தள மாநாட்டை நாங்கள் நடத்தினோம். தற்போது செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9வது இணைய தள மாநாடு நடத்துவது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது. தமிழ்மொழி, பழம் பெருமை வாய்ந்த மொழி என்பதோடு, நவீன கணினி யுகத்துக்கு ஏற்ற மொழியாகவும் உள்ளது.  எனது தாய் வீடு ஜெர்மனி என்றாலும், புகுந்த வீடு இந்த தமிழகம் தான். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் மருமகள் நான். தமிழ்த்தாயின் வளர்ப்பு மகளாகவே நான் வாழ்கிறேன்.

ஆனந்தகிருஷ்ணன்:- தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்: தமிழ்மொழி வரலாற்றில் இலக்கியமும், இணையமும் சேரும் முதல் நிகழ்வு இங்கு நடக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்த, சீரிய முயற்சியாக இந்த இணைய தள மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 1997ல் கணினித் தமிழ் குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பியபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த கோவிந்தசாமி, முதன் முதலாக அங்கு இணையதள மாநாட்டை நிகழ்த்தினார். தமிழ் இணையதளம், பல மைல்களைத் தாண்டி, சில மைல்களை தவற விட்டுள்ளது. இதை உணர்ந்த இளைஞர்கள், புதிய முயற்சிகளை எடுத்துள்ளனர்.

தமிழ் இணைய மாநாட்டில் 15 தலைப்புகளில் கணினித் தமிழ் பற்றி ஆய்வு நடக்கிறது.  இதில் தரப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் மீது விவாதம் நடந்து, அவை செயல்பாடுகளாக மாற வேண்டும். மாநாட்டுக்குப்பின், இந்த தீவிரம் மங்கி விடக்கூடாது. கணினி மொழியியல் மையத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்த வேண்டும், வடிவமைப்பு, எழுத்து வடிவங்கள் குறித்த ஆய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ள வேண்டும்.  ஏழு விதமான ஆராய்ச்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வீதம் 70 கோடி ரூபாய் நிதியை கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, பல்கலைக்கழகங்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும்.

வா.செ.குழந்தைசாமி:- துணைத்தலைவர், உலகத் தமிழாய்வு நிறுவனம்: சிந்து வெளி நாகரிகம், சீன நாகரிகம், மெசபடோமியா நாகரிகம் உள்ளிட்ட உலகின் பழமையான ஆறு நாகரிகங்களில், நான்கு நாகரிகங்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து விட்டன. சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. இந்த நாகரிகத்தை அடித்தளமாகக்கொண்ட மொழிகளில், சீன மொழியும், இந்திய மொழிகளில் வடமொழியும், தமிழ் மொழியும் தான் அழியாமல் உள்ளன. 

அந்த மொழி, நம் தாய் மொழி என்பதால், நாம் ஓர் அங்குலம் உயர்ந்திருக்கிறோம். இந்த பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது முக்கியம். ஆரிய நாகரிகத்துக்கு அடிப்படை சமஸ்கிருதம்; திராவிட நாகரிகத்தின் அடையாளம் தமிழ் மொழி. ஆனால், இந்திய நாகரிகம், தத்துவத்துக்கு அடிப்படையாக தமிழ் மட்டுமே விளங்குகிறது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும். 

துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் தொன்மை வாய்ந்த இரு மொழிகளுக்குள் 2000 ஆண்டுகளாக போட்டி இருந்து வருகிறது. அது இப்போது பகைமையாக மாறும் சூழல் உள்ளது.  உண்மையில், இந்த இரு மொழிகளும், இந்திய நாகரிகத்தின் தூண்கள். அதற்கு மாறாக, தமிழின் தொன்மை குறித்து, சில கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

தமிழ் இலக்கிய நூல்கள், பாண்டிய மன்னர்கள் காலத்தில், 9வது நூற்றாண்டில் கற்பனையாக எழுதியவை என்று ஹெர்மன் டிக்கன் எழுதியுள்ளார். ஷெரிலேக் என்ற அறிஞர், இந்திய மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் என்று கூறுகிறார். ஆனால், தமிழ் பற்றி தனியாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. வடமொழி ஆதரவாளர்கள் இயக்கம், வெளிநாடுகளில் புதிய கருத்தைப் பரப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்று தமிழின் தொன்மைக்கு ஆதரவாக வாதிடும் மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட் கூறுகிறார். 

நன்றி
தினமலர்.