சனி, 23 ஜனவரி, 2010

வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 2)

காணாமல் போன அந்த 3 பேரும் ஆட்டோ சங்கரின் விபசார விடுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோ சங்கரையும், சில கூட்டாளிகளையும் பிடித்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். "இந்த 3 பேர்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது" என்று பொய் சொல்லி போலீசாரின் பிடியில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பித்துக்கொண்டான்.
 
மற்றொருபுறம் சங்கரின் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். ஆனால் பாபு போலீசாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய 5 பேரை கொலை செய்ததாக தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.
 
சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4 பேர் பிணங்களையும் திருவான்மிïர் பெரியார் நகர் ரங்க நாதபுரத்தில் தெனாலி கால் வாய்க்கு அருகில் உள்ள 2 வீடுகளில் புதைத்துவிட்டதாக கூறினான். சுடலையின் உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.
 
அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பெரியார் நகருக்கு விரைந்து சென்று பிணங்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டின் 3,வது அறையில் போலீசார் தோண்டினார்கள். 15 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் ஆகியோரின் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தன. 2,வது அறையில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜனின் பிணத்தையும் போலீசார் வெளியே எடுத்தனர்.
 
அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு கூரை வீட்டில் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக்கப்பட்டிருந்தது. அதையும் போலீசார் தோண்டி எடுத்தனர். 4 பிணங்களும் அழுகிப்போய் இருந்தன. அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மக்கிப்போகாமல் அப்படியேருந்தன. ரவி காக்கிச்சட்டையும், பாண்டும் அணிந்து இருந்தான். மற்ற 3 பேர்களும் சட்டையும் பேண்டும் அணிந்து இருந்தனர். உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேத சோதனை நடத்தப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து ஆட்டோ சங்கரும், அவனது 7 கூட்டாளிகளும் 7.7.1988 அன்று கைது செய்யப்பட்டனர். சங்கரின் மனைவி ஜெகதீசுவரி மற்றும் சில அழகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆட்டோ சங்கர் தனது கொலை படலத்தை எப்படியெல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதபதைக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டனர்.
 
பிணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்டோ சங்கரின் டைரி சிக்கியது. அழகிகளுடன் சங்கர் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு சங்கர் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும் இருந்தன.
 
சங்கர் அவனுடைய காதலி விஜி, மது, லலிதா ஆகியோர்களின் பெயர்களை கையில் "பச்சை" குத்தி இருந்தான். அவனுடைய தம்பி மோகனின் பெயரையும் பச்சை குத்தி இருந்தான். மார்பில் 3,வது மனைவி சுமதியின் பெயரை பொறித்திருந்தான்.
 
சங்கரின் 4,வது மனைவியான பெங்களூர் லலிதாவை காணவில்லை. போலீசுக்கு பயந்து அவள் ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த லலிதாவும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக மோகன் (ஆட்டோ சங்கர் தம்பி) போலீசாரிடம் தெரிவித்தான். இதனை அடுத்து திருவான்மியூர்  பெரியார் நகரில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்கு சென்று தோண்டினார்கள்.
 
சமையல் கூடத்தில் இருந்த அடுப்பை அகற்றியதும் சிமெண்டு தரை இருந்தது. அதை தோண்டியபோது நீண்ட வரிசையில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு சிமெண்டு பூசப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை போலீசார் அகற்றினார்கள். அதற்கு கீழே மேலும் தரையைத் தோண்டியபோது உள்ளே எலும்புக் கூடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
எலும்புக்கூட்டின் மீது எந்தவித துணியும் இல்லை. நிர்வாணமாக இருந்தது. எலும்புக்கூட்டை போலீசார் வெளியே எடுத்தனர். லலிதாவை கொலை செய்து நிர்வாணமாக புதைத்து உள்ளனர் என்று தெரியவந்தது. அது பெண்ணின் உடல்தான் என்று டாக்டர்கள் உறுதி செய்தனர். இதனால் ஆட்டோ சங்கர் செய்த கொலை பட்டியலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. கொலை செய்யப்பட்டவர்கள் விவரம்:-
 
1. பெங்களூர் அழகி லலிதா (வயது 22).
 
2. சுடலை (வயது 28). ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவன்.
 
3. திருவான்மிïர் ரவி. ஆட்டோ டிரைவர் (வயது 27).
 
4. சம்பத் மந்தைவெளியை சேர்ந்த டெய்லர் (வயது 30).
 
5. மோகன், பொதுப்பணித்துறை ஊழியர் (வயது 29)
 
6. கோவிந்தராஜ் (வயது 28).
 
கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், மோகன் (சங்கர் தம்பி), எல்டின் என்கிற ஆல்பர்ட் (மைத்துனர்) கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
 
ஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார். இந்த வழக்கு முக்கியமாக கருதப்பட்டதால் மாநில ரகசிய குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி, விசாரணையை மேற்கொண்டார்.


இன்னும் வரும் . . . . . . . . . . . 

1 கருத்து:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஆட்டோ சங்க‌ரை பத்தி நிறைய தகவல்கள்