ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

உடல் உறுப்பு தானம்

உடல் உறுப்புகள் தானம் - வழியும், முறைகளும்
ஆகஸ்ட் 30,2009,00:00 IST

மனிதன் இறந்த பின் அளிக்கப்படும் கண் தானம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை போன்று, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்தியாவில் தினமும் நடக்கும் இறப்புகளில், இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்றால், உறுப்புக்காக காத்திருக்கும் நோயாளிகள் உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்படும்.இந்தியாவில் உடல் உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம். இதனால் தான் கடந்த 1994ம் ஆண்டு உடல் உறுப்புகள் பெறுவதற்குரிய சட்டத்தை அரசு இயற்றியது. இந்த சட்டத்தின் மூலம் உறுப்பு வேண்டியவர்கள், அரசின் உறுப்பு மாற்றும் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். அவசர, அவசியம் கருதி தானமாகக் கிடைக்கும் உறுப்புகள் அந்த நோயாளிக்கு வழங்கப்படும். உறுப்புகளை தானம் அளிப்போரை பாதுகாக்கும் விதத்திலும், உறுப்புகளை முறையாக நீக்கி, பாரபட்சமின்றி வினியோகிப்பதை உறுதி செய்யும் விதத்திலும், தமிழக அரசால் வடிவமைக்கப்பட்ட முழுமையான சட்டம் இது.அரசு சட்டம் இயற்றினாலும், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் ஏற்படவில்லை. உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னை, மியாட் மருத்துவமனையில் துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா மூலம் இயக்கம் ஒன்று துவக்கப்பட்டது. இருவரும் முதல் நபராக இந்த இயக்கத்தில் இணைந்து, தங்களின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க சம்மதித்து, படிவத்தில் கையெழுத்திட்டனர். மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடல் உறுப்புகள் கூட வேறு ஒருவருக்கு பொருத்தலாம். எச்.ஐ.வி., தாக்கியவர்களின் உடல் உறுப்புகள் மட்டுமே பயன்படாது.உறுப்பு தானம் செய்ய வயது வித்தியாசம் கிடையாது. உறுப்புகளை உடலில் இருந்து எடுக்கும் செலவுகள், தானம் கொடுப்பவரின் குடும்பத்தைச் சேராது. உடல் உறுப்பு தானம் செய்வதால் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு பணம் எதுவும் கிடைக்காது. இந்தியாவில் மனித உடல் உறுப்புகளை வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம். தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட பின்னர், உயிரற்ற அந்த உடலில் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் தெரியாது. உறுப்புகளை தானமாக பெறுவோர், நீண்ட காலம் காத்திருக்கும் நிலை, ரத்தப்பிரிவு, திசு இயல்புகள் ஆகியவற்றின் படி தேர்ந்தெடுக்கப்படு கின்றனர்.இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால், அவ்வளவு சிறுநீரகங்கள் கையிருப்பு இல்லை. 2.5 மில்லியன் அளவிற்கு இதய வால்வுகள் தேவைப்படுகின்றன. உடல் உறுப்புகள் இல்லாததால், உறுப்புகளை தானமாகப் பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியல் பெரிதாக உள்ளது. தானமளிப்போர் குறைவாக உள்ளதே இதற்கு காரணம். இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். "மோட்' அமைப்பை பொறுத் தவரையில் www.mode.org.in என்ற இணையதளத்திலும், 22492288 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்தால், உறுதியேற்பு படிவம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். அதில், கையெழுத்திட்டு, விருப்பத்தை உறுதிபடுத்தினால், அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். இதற்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. உடல் உறுப்புகள் தானம் தரும் விஷயத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. இறந்த பின், தானம் செய்தவர்களின் உடல் உறுப்புகளை அவர்களின் உறவினர்கள் எடுக்க விடுவதில்லை. இந்த வகையில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களில் 30 சதவீதம் பேரின் உறுப்புகள் கிடைக்காமல் போயுள்ளன. இந்த பிரச்னையைத் தவிர்க்க, ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்தவுடன், அவரது அந்த விருப்பத்தை நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்க வேண்டும்.எந்தெந்த உறுப்புகளை தானம் தரலாம்: மனித உடலில் இருக்கும் கண்கள், கார்னியா, நுரையீரல், இதயம், இதய வால்வுகள், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம், சிறுகுடல், பெமோரல், சபீனஸ் நாளங்கள், சருமம், எலும்பு, டென்டன் என்ற எலும்புகள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். "இவற்றை வேறு ஒருவரின் உடலில் பொருத்தி இயக்கச் செய்யலாம். அறிவியல் வளர்ச்சியில் இது சாத்தியம்' என்று டாக்டர்கள் நிரூபித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: