வியாழன், 27 ஆகஸ்ட், 2009

இந்திய மாணவர்களுக்கு இனிய செய்தி

ரூ.2 1/2 லட்சத்துக்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களின் கல்விக் கடன் வட்டி ரத்து!

உயர்க்கல்வி மற்றும் தொழில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தேசிய மயம் ஆக்கப்பட்ட வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றன.

கல்விக் கடன் வழங்குவதை எளிமை ஆக்கவும், அதிக அளவில் கடன் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படிப்பை முடித்தவர்கள், பெற்ற கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பை முடித்த அனைவரும் வேலை வாய்ப்பு பெற முடியாத நிலை இருக்கிறது. எனவே ஏழை மாணவ மாணவிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு, குடும்ப வருமானம் குறைவாக உள்ள ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கடன் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியது.

அதன்படி குடும்ப வருட வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் வட்டி செலுத்த வேண்டியது இல்லை. இன்று நடைபெறும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் மூலம் மாணவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறையும். 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் அடைவார்கள்.

கருத்துகள் இல்லை: