ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

இந்தியாவின் கனவு நிறைவேறுமா

செயல் இழந்தது சந்திரயான்!- விஞ்ஞானிகள் அதிர்ச்சி

First Published : 30 Aug 2009 12:59:26 AM IST

Last Updated : 30 Aug 2009 09:18:22 AM IST

பெங்களூர், ஆக. 29: பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவிக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது "சந்திரயான்-1' செயற்கைக்கோள்.

இதனால் இந்திய விஞ்ஞானிகள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-1 செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முடியவில்லை. தகவலை அனுப்ப முடியவில்லை. செயற்கைக்கோளில் இருந்தும் எந்த தகவல்களும் புகைப்படமும் கிடைக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அந்த செயற்கைக்கோள் செயல் இழந்த பேச முடியாத ஊமைப் பொருளாகி விட்டது. இனிமேலும் சந்திரயான் திட்டங்களை தொடர முடியாது என்றார்.

இதற்கிடையே இஸ்ரோ செய்தித் தொடர்பாளர் சதீஷ் கூறுகையில், "சந்திரயான் செயற்கைக்கோளில் இருந்து பெங்களூர் அருகே உள்ள பையலாலு விண்வெளி கட்டுப்பாட்டு மையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை தகவல்கள் கிடைத்து வந்தன. அதன் பிறகு 1.30 மணியளவில் சந்திரயானுடனான ரேடியோ தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

சந்திரயானுக்கும் புவி கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு திடீரென துண்டித்து போனது. தொடர்பு இழந்து போனதற்கான காரணங்கள், கோளாறுகள் குறித்து பிறகு தெரியவரும்' என்றார்.
அண்ணாதுரை பேட்டி... சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 செயற்கைக்கோள்களின் திட்ட இயக்குநரான தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எம். அண்ணாதுரை கூறியது:

இந்தியாவின் நிலவுத் திட்டம் இத்துடன் முடிந்துவிட்டது. செயற்கைக்கோளுடனான தொடர்பை இழந்துவிட்டோம். ஆனாலும் சந்திரயான், தொழில்நுட்ப ரீதியில் தனது பணிகளை நூறு சதவிகிதம் கச்சிதமாக முடித்தது.

அதேபோல அறிவியல் ரீதியிலும் தனது பணிகளை 95 சதவீதம் முடித்தது.

செயற்கைக்கோள் செயல் இழந்ததற்கான காரணத்தையும் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் ஆய்வு செய்வோம் என்றார் அவர்.

முன்னதாக ஆளில்லாத சந்திரயான்-1 செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நிலவுக்கு வெற்றிகரமாக ஏவியது.

கருத்துகள் இல்லை: