காமன்வெல்த் போட்டிக்காக இசையமைத்த பாடல், இன்னும் 10 நாட்களில் வெளியிடப்படும். இது உலக கோப்பை கால்பந்து பாடலைவிட பிரபலமாகும்,'' என, இசையமைப்பாளர் ரஹ்மான் உறுதி தெரிவித்துள்ளார்.
டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் போட்டி நடக்க உள்ளது. இப்போட்டிக்கான மையநோக்கப் பாடலை, ஆஸ்கர் விருதுகள் வென்ற, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் "பிரிவியூ' நிகழ்ச்சிக்கு மீடியா குழுவினர் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.
பாடலை இயக்கிய ஷியாம் பெனகல், தயாரிப்பாளர் பரத்பாலா, அமைச்சர் குழு தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகள் அமைப்புத் தலைவரான சுரேஷ் கல்மாடி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால் மையநோக்கப் பாடல் ஒலிபரப்பப்படவில்லை.
இதுகுறித்து ரஹ்மான் கூறியது:
அறிமுக நிகழ்ச்சி பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்படும் பாடல் இந்தியர்களின் மனதில் இடம்பெறும். இந்த பாடல் நிச்சயம் இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்யும். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் சாதகமாகவே நடக்கும்.
காமன்வெல்த் பாடலுக்கான பணியில் நான் கடந்த ஆறுமாதமாக ஈடுபட்டுள்ளேன். இதற்காக என்னுடைய மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருந்தேன். இதிலிருந்தே இந்நிகழ்ச்சியை எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொண்டேன் என உங்களுக்குத் தெரியும்.
காந்திக்கு அர்ப்பணம்:
"யாரோ இந்தியா, புலா லியா...' எனத் துவங்கும் இந்தப்பாடலை மற்றவர்களுடன் இணைந்து நானும் பாடியுள்ளேன். இந்தி மற்றும் ஆங்கில வரிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. சக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், வெற்றியை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இதை மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் பாரம்பரியத்துக்கும் அர்ப்பணம் செய்யவுள்ளேன். இப்பாடலை அனுபவம் வாய்ந்த மத்திய அமைச்சர்கள் குழு, அங்கீகரிப்பார்களா என்ற அச்சம் இருந்தது. ஆனால் அவர்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வரவேற்பு உறுதி:
இதற்கு மேல் இதுகுறித்து செய்திகளை தெரிவிக்க முடியாது. இன்னும் 10 நாட்களில் ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்புக்கிடையில் பாடல் வெளியாகும். உலக கோப்பை கால்பந்து தொடரின் போது வெளியான ஷகிராவின் "வாகா, வாகா...' பாடலைவிட, பெரும் வரவேற்பை பெறும் என்பது மட்டும் உறுதி.
நான் லண்டனில் இருந்த போது காமன்வெல்த் போட்டிகள் குறித்து, பல தவறான செய்திகளை மீடியா வெளியிடுகின்றன. இதனால் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவைகள் உண்மையல்ல என நம்புகிறேன். பல ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து இந்த போட்டியை சிறப்பாக நடத்த முயன்று வருகின்றார்கள்.
இந்த நிலையில் நமது பத்திரிகையாளர்கள் காமன் வெல்த் போட்டி மற்றும் இந்தியா குறித்தும் நல்ல செய்திகளை வெளியிட வேண்டும் என மீடியாவை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ரஹ்மான் தெரிவித்தார்.
பாடல் வெளியாவதில் உள்ள தாமதம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதால், பாடலின் சில வரிகளை ரஹ்மான் பாடிக் காண்பித்தார்.
நன்றி:
தினமலர்
4 கருத்துகள்:
Nice..
ஊழல் நடக்காமல் பத்திரிக்கையாளர்கள் செய்தி வெளியிடுவார்களா?
தங்களின் வருகைக்கு,
கருத்துபகிர்வுக்கும் நன்றி
@அகமது இர்ஷாத்
நம்ம நாட்டில் எதில்தான் ஊழல் இல்லை.
காமன் வெல்த் போட்டியிலும் ஊழல் நடந்துள்ளதாக பத்திரிககள் எழுதுகின்றன.
அதையும் மீறி காமன் வெல்த் போட்டிகள் சிறப்பாக நடை பெறவேண்டும்.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
சிநேகிதன்@அக்பர்.
கருத்துரையிடுக