வெள்ளி, 27 நவம்பர், 2009

இயற்கையை நேசிப்போம்:பாதுகாப்போம்


அமெரிக்கர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் வாழ வேண்டும் என்றால் தற்போது உள்ளதைப் போன்று 5 பூமிகள் இருக்க வேண்டும் என அமெரிக்காவில் வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் "குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க்' என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆவணத்தில் தெரிவித்துள்ளது.நாம் வெளியிடும் கரியமில வாயுவை பூமி மறுசுழற்சி செய்து வெளியிடும் வேகத்தைவிட 44 சதவீதம் வேகமாக இயற்கை வளங்களை நாம் பயன்படுத்துகிறோம். அதாவது ஓராண்டில் நாம் பயன்படுத்திய இயற்கை வளங்களை மறு சுழற்சி செய்து மறுபடியும் நமக்கு அளிக்க இயற்கைக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படுகிறதாம்.இதேரீதியில் நாம் செயல்பட்டால், 2030 வாக்கில் தற்போது உள்ளதைப் போன்று இயற்கை வளங்களுடன் கூடிய இன்னும் ஒரு பூமி தேவை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.1961-ல் உலக இயற்கை வளத்தில் பாதி அளவுக்குத்தான் பயன்படுத்தியுள்ளோம். சராசரி அமெரிக்கர் 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கிறார். சராசரி ஐரோப்பியர் அதில் பாதி அளவு பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கிறார்.ஆனால், மலாவி, ஹைதி, நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் 1.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இயற்கை வளங்களையே அனுபவிக்கின்றனர். இதனால், அந்த நாடுகளில் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.உலக மக்கள்தொகையில் 4 சதவீதம் மட்டுமே உள்ள அமெரிக்கர்கள், 25 சதவீதம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறார்கள் என மற்றோர் ஆய்வு தெரிவிக்கிறது. இயற்கையை மனிதன் இப்படிச் சுரண்டுவதால் ஓசோன் படலம் சிதைவு, புவி வெப்பமடைதல், போதிய மழையின்மை, பனிக்கட்டி உருகுதல் போன்றவை நிகழ்கின்றன.பனிக்கட்டி உருகுவதால் கடல் நீர்மட்டம் 0.2 மீ. முதல் 1.5 மீ. வரை உயரக் கூடும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாலத்தீவு போன்ற நாடுகள் கடலில் மூழ்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.இயற்கையைச் சுரண்டியதால் ஏற்பட்ட விளைவுகளை நமது தமிழகத்தில் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அண்மையில் கண்டோம். மழை நீர்ப் பாதையை அடைத்தது, வனங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றியது, மரங்களை வெட்டி தேயிலைத் தோட்டங்களாக்கியது, சட்டவிரோதமாக கல்குவாரிகளை நடத்துவது போன்றவற்றால் சமீபத்தில் பெய்த பேய் மழைக்கு நிலச்சரிவு, பூமி பிளவு போன்றவை ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடு,வாசல்களை இழந்து தவித்து வருகின்றனர்.நமது நாட்டிலும் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டிய இடத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவான வனப் பகுதியே உள்ளது.இப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? "இயற்கை அன்னை நமது தேவைகளைப் பூர்த்தி செய்வாள். ஆனால், நமது பேராசைகளைப் பூர்த்தி செய்ய மாட்டாள்' என்றார் மகாத்மா காந்தி."போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' போன்றவற்றை நமது முன்னோர் சிறுவயதிலேயே மனங்களில் விதைத்தனர்.இயற்கையை வழிபடுவதை நமது முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்துள்ளனர். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களை வழிபட வழிவழியாக நமது மூதாதையர்கள் கற்பித்து வந்துள்ளனர். தமிழ்நாட்டில் பஞ்சபூதத் தலங்கள் உள்ளதே இதற்கு சாட்சி.பூமியைத் தாயாகக் கருதி பூஜை செய்வது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வது போன்றவை அதன் ஓர் அங்கம்தான். ஆனால், குறுகிய காலத்தில் அதிகப் பணம்சம்பாதிக்க ரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி உணவு அளித்த தாயையே மலடாக்க இன்று நாம் துணிந்துவிட்டோம்.கங்கா மாதா, காவிரித் தாய் என நதிகளைத் தாயாகக் கருதும் வழக்கம் நம் நாட்டில்தான் உண்டு. குளத்திலோ, ஆற்றிலோ எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவை பாவம் என கற்பித்தனர். ஆனால், பாவங்களைப் போக்குவாள் என்று கருதப்படும் கங்கையைத் தூய்மைப்படுத்த பல்லாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசு இப்போது திட்டம் தீட்டி வருகிறது.மரங்களையும் தெய்வமாகக் கருதிய மக்களைக் கொண்ட நாடு இது. ஆனால், இன்று சகட்டுமேனிக்கு மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால், வாழ்வதற்கே தகுதியில்லாத பூமியைத்தான் நமது சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டியிருக்கும். நாம் இஷ்டப்படி வாழ்ந்துவிட்டு இயற்கைக்கு லஞ்சம் கொடுத்துத் தப்பிக்க முடியாது.இப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பொறுப்பை வளரும் நாடுகள் மேல் சுமத்தப் பார்க்கின்றன. அரசாங்கம் ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டாலும், நாமும் நம் பங்குக்கு சில விஷயங்களைச் செய்ய முடியும்."அறத்தை நாம் காத்தால் அறம் நம்மைக் காக்கும்' என்ற சொற்றொடர் ஒன்று உண்டு. அதுபோல, "இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மைக் காக்கும்'.அமெரிக்க பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றி நுகர்வோர் கலாசாரத்தில் மூழ்காமல், நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ளலாம்; நீர் நிலைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தலாம். பிளாஸ்டிக் பயன்பாடு சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மாட்டேன் என உறுதி ஏற்கலாம்.மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம். பெட்ரோல் பயன்பாட்டால் மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. தவிர்க்கமுடியாத நேரம் தவிர மற்ற நேரங்களில் பொது வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். வாய்ப்புள்ள இடங்களில் மரங்களை நட்டுப் பராமரிக்கலாம்.இப்படி அனைவரும் செயல்படத் தொடங்கினால், சுற்றுச்சூழல் மாசுபடாத உலகை விட்டுச் சென்றோம் என நமது அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தும்.

கருத்துகள் இல்லை: