குற்றவாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றவாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 நவம்பர், 2009

லிபரான் கமிஷன் அறிக்கை:வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது குற்றச்சாட்டு


புது தில்லி, நவ. 24: பாபர் மசூதி இடிப்பை நடத்தி முடித்து வகுப்பு கலவர நிலைக்கு நாட்டை கொண்டுசென்றதில் பாஜக மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சங்க பரிவாரங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 68 பேருக்கு பங்கு உள்ளது என்று லிபரான் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது.அயோத்தியில் பாபர் மசூதியானது 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை மறுத்த பாஜக, சங்கபரிவாரங்கள் இந்துக்களின் மனக் குமுறலே மசூதி இடிப்பில் முடிந்தது என்று குறிப்பிட்டு வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷன், தனது அறிக்கையை கடந்த ஜூன் 30ம் தேதி அரசிடம் ஒப்படைத்தது. இந்நிலையில் அந்த அறிக்கையின் சில பகுதி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு ரகசியமாக கசிந்து புயலை கிளப்பிவிட்ட நிலையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. வகுப்பு நல்லிணக்கத்தை சீர்குலைக்கச் செய்யும் அளவுக்கு பூதாகர பிரச்னையாகிப்போன பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு சங்கபரிவார அமைப்புகள், அதிகாரிகள் உள்ளிட்ட 68 பேர் மீது கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளது லிபரான் கமிஷன். 4 தொகுப்புகளில் 1000 பக்கம் கொண்டுள்ளது லிபரான் அறிக்கை. இந்த அறிக்கை குற்றம்சுமத்தியுள்ள 68 பேரில் முதலில் இடம்பெறுபவர்களாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் உள்ளனர். பாஜக தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங், விஎச்பி அமைப்பைச் சேர்ந்த கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால் உள்ளிட்டோரையும் இந்த கமிஷன் பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டியுள்ளது. 16ம் நூற்றாண்டு வரலாற்றுச்சின்னமாக திகழ்ந்த பாபர் மசூதியை தகர்க்க சங்கபரிவாரங்கள் முடிவெடுத்தாலும் அதில் பாஜகவின் மிதவாதத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கும் பங்கு உள்ளது என லிபரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த தலைவர்களுக்கு சந்தேகத்தின் பலனைக் கொடுத்து பாபர் மசூதி இடிப்புக் குற்றத்திலிருந்து விடுவிக்கக்கூடாது என்றும் லிபரான் தெரிவித்துள்ளார். மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக இவர்கள் நடந்துள்ளனர். செய்யக்கூடாத குற்றச்செயலை செய்துள்ளனர் இந்த போலி மிதவாதிகள். இதைவிட பெரிய துரோகமோ குற்றமோ ஜனநாயகத்தில் நடந்து இருக்க முடியாது. மசூதி இடிப்பில் பிரதான பொறுப்பு ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தளம், சிவசேனை, பாஜக ஆகியவற்றின் மேல்சுற்று தலைவர்களுக்கு உள்ளது. இந்துக்களின் மனக்குமுறலால் தன்னிச்சையாக வெளிப்பட்ட ஆவேசம் மசூதி இடிப்பு என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு இது நடத்தப்பட்டதல்ல என்றும், வெளிநாட்டு சக்திகள் அரங்கேற்றிய சதி என்றும் தமது கற்பனைக்கேற்ப பலர் பலவிதமாக கூறினர். ஆனால் இவையெல்லாம் பொய்யென லிபரான் கமிஷன் மேலும் தெரிவித்துள்ளது.நரசிம்மராவ் மீது குறையில்லை: அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை பாபர் மசூதி இடிப்பை தடுக்கத் தவறியதாக குறை சொல்ல இயலாது. அயோத்தியில் என்ன நடக்கிறது என்பதை படம்பிடித்துக் காட்டமுடியாதபடி உளவு அமைப்புகள் செயலிழந்து கிடந்தன. அப்போதைய கல்யாண் சிங் அரசு கோரியபடி மத்திய படைகள் அனுப்பப்பட்டபோதும் அந்த படைகளை சம்பவ இடத்தில் நிறுத்தாமல் அப்பால் நிறுத்தியது மாநில அரசு. மேலும் மாநில உயர்நீதிமன்றம் நியமித்த உச்சநீதிமன்ற பார்வையாளரும் நடுநிலைமையாக செயல்படவில்லை. மசூதி கூரைமுகடுகள் இடிக்கப்பட்டபோது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்று கமிஷன் மேலும் குறிப்பிட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புக்குப்பிறகு 10 நாள் கழித்து அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 48 முறை நீட்டிப்புப் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.

வியாழன், 5 நவம்பர், 2009

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்


சென்னை, அக். 4: இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், இதில் ராஜபட்சவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபட்சவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை படைகளின் கூட்டுத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் தில்லியில் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல. மனித நேயமற்ற செயலும் ஆகும். ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது. இப்போதும் அதேபோல செயல்படுமானால், தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார் பழ. நெடுமாறன்

வியாழன், 22 அக்டோபர், 2009

சர்வதேச குற்றவாளிகளின் சொர்க்கம் நேபாளம்


காத்மாண்டு : நேபாள நாடு, உலகளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் புதிய சொர்க்க பூமியாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜப்பா மாவட் டத்தின் கார்பிட்டா சோதனைச் சாவடி வழியாக ஒருவர், சமீபத்தில், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றார். இவர், பாஸ் போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்த போதும், ஒரு வார்த்தை கூட நேபாள மொழியில் பேசாததால், சந்தேகமடைந்த போலீசார் அவரை, பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட இடமான சன்சாரி மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அஷ்ரப் அலி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய, இன்டர்போல் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்' என்றனர்.



இதற்கிடையில் அஷ்ரப் அலி, மாவட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நேபாள நாட்டின் போலி குடியுரிமை பெற்றதாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அலிக்கு போலி பாஸ்போர்ட் வினியோகிக்க பரிந்துரை செய்த, நகராட்சி அதிகாரி, கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டார். இந்தியா மற்றும் வங்க தேசத்தினரால் தேடப்பட்டு வரும் சர்வதேச குற்றவாளியான, சுப்ரடா பாயேன் என்பவரை, கடந்த மாதம், இதே எல்லை சோதனை சாவடியில் போலீசார் கைது செய்தனர். இவர், மேற்கு வங்கத் தில் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டு, பின் ஜாமீனில் வெளி வந்து நேபாள நாட்டில் தஞ்சம் புகுந்தவர். இவரிடமும், நேபாள நாட்டின் பாஸ்போர்ட் உள்ளது.



இவரை தற்போது நேபாள நாட்டின் பத்ரபூர் சிறையில் அடைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போன்று, சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பலர், நேபாள நாட்டில் இருந்து பிற இடங்களுக்கு செல்லும் போது கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பலர் நேபாளத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கு நேபாள நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் அதிகாரிகளிடையே பரவியுள்ள ஊழல் ஆகியவையே காரணம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவிலான குற்றவாளிகளுக்கு நேபாள நாட்டில் அடைக்கலம் கொடுப்பதில், அந்நாட்டின் அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.