தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 அக்டோபர், 2010

தமிழனின் வெற்றிக்கு வாக்களிப்போம் !

 
நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!!
 
தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை. 
 
இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
 
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை  யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!  
இந்தமாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21    
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! 
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது 
 இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx 

  • இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். 
  • உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
  • அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள். 
  • அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
  • முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
      நண்பர் " வந்தேமாதரம் " சசிகுமார்  அவர்களின் வலைப்பூவில் வெளிவந்த இந்த பதிவு மீள்பதிவாக இங்கே பகிரப்படுகிறது. 
மறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்து ஒரு தமிழனை வெற்றி 
பெறச் செய்யுங்கள்.
நன்றி : சசிகுமார்.

வியாழன், 24 டிசம்பர், 2009

வடக்கு வாழட்டும் ஆனால் தெற்கு தேய்கிறதே ?


மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகை தரப்படுகிறது,​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.

திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.​ 

​இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.

1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ 

​அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​

​மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ 

திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​

தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ 

மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​ ​

புதன், 14 அக்டோபர், 2009

என்று தீரும் இவர்களின் துயரம்

முகாமில் இருந்து விடுவியுங்கள் : தமிழக எம்.பி.,க்களிடம் கோரிக்கை

Front page news and headlines today

கொழும்பு : தமிழக எம்.பி.,க்கள் குழுவிடம், "அபிவிருத்திப் பணிகளுக்கு அவசரம் இல்லை; முகாம்களில் உள்ள மக்களின் விடுதலையே அவசியம்' என, யாழ் மாநகர சபை உறுப்பினர் ரெமிடியஸ்,கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தியத் தூதுக்குழு, யாழ் பொது நூலக மண்டபத்தில் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தது. இலங்கைப் படையினருடன் சேர்ந்து இயக்கும் துணைப் படையான, ஈ.பி.டி.பி., குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.அதில், "அரசியல் தீர்வைப் பெற துணை நில்லுங்கள். அபிவிருத்திப் பணிகள் இப்போது அவசரம் இல்லை; முகாம்களில் உள்ள மக்களின் விடுதலை தான் முக்கியம்' என, மாநகர சபை உறுப்பினர் ரெமிடியஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து வர்த்தக பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களின் உறவினர்கள், அகதி முகாம்களில் வாடுகின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வு விஷயத்தில் இந்தியா மவுனம் சாதிக்காமல், வெளிப்படையாக செயல்பட்டு, தீர்வு வழங்க வேண்டும். மேலும், அகதி முகாம்களில் உள்ள இரண்டரை லட்சம் மக்களை உடனடியாக விடுவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், அனைத்துலக நியமனங்களுடனே அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அவர்களின் சொந்த ஊர்களில் குடியேற வேண்டும் என்பதைத் தவிர, அவர்கள் வேறு எதையும் கோரவில்லை' என, தமிழக காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருக்கிறார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:யாரையும் சந்திக்கக் கூடாது என எந்தத் தடையுமின்றி, சுதந்திரமாகவே முகாம்களுக்குச் சென்று, அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தோம். முகாம்களில் உள்ளவர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்பதையே, பிரதான கோரிக்கையாக கூறினர். முகாம்களும் அனைத்துலக நடைமுறைகளின் படியே அமைக்கப்பட்டுள்ளது. சென்னை திரும்பியவுடன், முதல்வர் கருணாநிதியிடம் இலங்கை முகாம்களின் நிலை குறித்த அறிக்கையை கொடுக்க உள்ளோம்.இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

புதன், 7 அக்டோபர், 2009

தமிழருக்கு நோபல் பரிசு

2009ம் ஆண்டிற்கான வேதியியல் துறை கண்டுபிடிப்புக்காக !
அக்டோபர் 07,2009,16:00 IST

Front page news and headlines today

ஸ்டாக்ஹோம்: 2009ம் ஆண்டிற்கான வேதியியல் துறை கண்டுபிடிப்புக்காக சிதம்பரத்தை சேர்ந்த தமிழரான, விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் உள்ள எம்.ஆர்.சி., ஆய்வகத்தில் ரைபோசோம் தொடர்பான இவரது ஆராய்ச்சிக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. இவருடன் இந்த விருதை அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் ஏ.ஸ்டீட்ஸ் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த அடா இ.யோனத் ஆகியோர் பகிர்ந்து கொள்கிறார்கள். தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 1952ல் சிதம்பரத்தில் பிறந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இதற்கு முன்னராக தமிழகத்தை சேர்ந்த சர் சி.வி.ராமன் மற்றும் சுப்ரமணியம் சந்திரசேகர் ஆகியோர் நோபல் பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 5 செப்டம்பர், 2009

காட்டி கொடுத்த தமிழ் துரோகி

ஜூனியர் விகடன் ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!
  • தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும்,......
    சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

    சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

    அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.

    தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.

    இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

    இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.

    தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.

    ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.

    எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.

    ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.

    எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.

    நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.

    தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்

    பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.

    இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.