சென்னை விமான நிலைய கார்கோ (சரக்கு) பிரிவில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடந்த ஆண்டில் அரசுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் கஸ்டம்ஸ் வரி தொகையை, அதிகாரிகள் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள், கார்கோ பிரிவில் தங்கள் சோதனையை நேற்றும் தொடர்ந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் நடந்த சி.பி.ஐ., சோதனையில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளிடம் நடத் திய விசாரணையின் அடிப்படையில் ஏர் கார்கோ காம்ப்ளக்சில் சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். இந்த வழக்கில், மேலும் நான்கு கஸ்டம்ஸ் அதிகாரிகளும், நான்கு ஏஜன்டுகளும் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணை நேற்று துவங்கியது. அந்த பார்சல்கள் எந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவை; அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதியில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள் ளன; யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர்; எவ்வளவு லஞ்ச தொகை பேரம் பேசப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமாகி உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சென்னை விமான நிலைய கார்கோ மூலம், 22 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கையாளப்பட் டுள்ளன. இந்த பொருட்களுக்கு உண்மையான வரி விதிப்பு விதிக்கப்பட்டிருந்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், பத்தில் ஒரு பங்கு கூட வரியாக வசூலிக்கப்படவில்லை. இது தான் தற்போதைய விசாரணை தீவிரத்திற்கு காரணம்.
வழக்கமாக, ஏர் கார்கோவில் இருந்து பொருட்களை டெலிவரி எடுப்பது, இரவு 7 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரை நடக்கும். வெளியாட்கள் தங்களை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக கஸ்டம்ஸ் அதிகாரிகள் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி மாலை சரியாக 6 மணிக்கு ஏர் கார்கோ பிரிவிற்குள் சோதனை தொடங்கிய போது, 30 பார்சல்கள் டெலிவரி செய்யப்படாமல் கிடந்தன. அதில், உபயோகப்படுத்தப்பட்ட பழைய துணி என்று குறிப்பிடப்பட்டிருந்த பார்சல் ஒன்றில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், தங்க கட்டிகள் இருந்தன. மேலும், சில பார்சல்களில் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் காணப்பட்டன. இந்த வகையில், பெரும்பாலான பார்சல்கள் உரிய மதிப்பு குறிப்பிடாமல், குறைந்த மதிப்பிட்டு, கேட்பாஸ் தயார் செய்யப்பட்டுள்ளதையும், இதன் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பல லட்சம் ரூபாய் கஸ்டம்ஸ் வரி மோசடி செய்யப்பட்டிருப்பதையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த பார்சல்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றும் தங்கள் சோதனையை தொடர்ந்தனர். அப்போது, முடக்கி வைக்கப்பட்ட பார்சல்களின் உரிமையாளர்களை போன் மூலம் தொடர்பு கொண்டு, உரிய வரியைச் செலுத்திவிட்டு டெலிவரி எடுக்கும்படி உத்தரவிட்டனர். முதற்கட்டமாக, மூன்று பார்சலுக்கு சொந்தமான நிறுவனங்கள் நேரடியாக வந்து, உண்மையான மதிப்பிற்கு வரி கட்டிவிட்டு பார்சல்களை டெலிவரி எடுத்துச் சென்றன. இதேபோல், மற்ற பார்சல் உரிமையாளர்களையும் வரவழைத்து, முடக்கப்பட்டுள்ள பார்சல்கள் குறித்த விசாரணையில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சி.பி.ஐ., சோதனையைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் பிரிவில் நடந்து வரும் லஞ்ச, லாவண் யம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. பல புகார் மனுக்கள் பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கஸ்டம்ஸ் பிரிவில் சி.பி.ஐ., தொடர்ந்து சோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைக்கு இரண்டு "புல்' லஞ்சம்: சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சென்னைக்கு பொருட்களை கடத்தும் ஏராளமான, "குருவி'கள் உள்ளனர். இவர்கள், பெரிய வியாபாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். தினசரி 100 பேர், "குருவி'களாக சென்னை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இவர்களிடம் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள் லஞ்சமாக பணத்தை பெறுவதில்லை. மாறாக, ஒவ்வொரு, "குருவி'யும் தலா இரண்டு "ஜானிவாக்கர்' பிராண்டு மது பாட்டில்களை கொடுத்துவிட வேண்டும். ஒவ்வொரு பாட்டிலும் 1,200 ரூபாய் மதிப்புடையது. இவ்வாறு தினசரி சேகரிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டில்களை விற்பதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கிறது. இந்த பாட்டில்களை வாங்குவதற்காகவே சென்னை நகரில் பல ஏஜன்டுகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்களும் சி.பி.ஐ.,யின் பார்வையில் சிக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கோடிகளில் புரண்டனர்: சென்னை விமான நிலைய கார்கோவில், முறைகேடாக வரும் சரக்குகளை வெளியே எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வந்தனர். இது குறித்து சி.பி.ஐ., நடத்திய சோதனையில், ஒன்பது கஸ்டம்ஸ் அதிகாரிகள், இரண்டு ஏஜன்டுகள் உட்பட 11 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். இதில், மற்ற அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து அவர்கள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சி.பி.ஐ., பார்வையில் விழுந்துள்ள அந்த நான்கு அதிகாரிகளில், இரண்டு அதிகாரிகளுக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடுகளும், வெவ்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக