திங்கள், 30 நவம்பர், 2009
2.1 கோடி சீன செல்போன் இன்றுடன் இணைப்பு ரத்து
சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத செல்போன்கள் திங்கள்கிழமை முதல் செயல்படாது. ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு நவம்பர் 29-ம் தேதியுடன் சேவை அளிப்பதை தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள மத்திய அரசு கெடுவிதித்திருந்தது. அந்த கெடு முடிவடைந்த நிலையில் ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது. முன்னணி செல்போன் நிறுவனங்கள் தயாரிப்பில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தனி சர்வதேச செல்போன் அடையாள எண் அளிக்கப்படுகிறது. இந்த எண், அந்த செல்போன் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது, அந்த செல்போனின் மாடல் ஆகியவற்றை குறிக்கும். ஐஎம்இஐ எண் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்த செல்போனுக்கு சேவை அளிக்கும் நிறுவனத்தில் தானாகவே பதிவாகிவிடும். கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்திய சந்தைக்கு வரும் பெரும்பாலான செல்போன்களில் இந்த ஐஎம்இஐ எண் இருப்பதில்லை. பயன் என்ன? ஐஎம்இஐ எண் மூலமாக ஒரு செல்போனில் இருந்து மற்றொரு செல்போனுக்கு சென்ற அழைப்புகள், வந்த அழைப்புகள் குறித்தும், எந்த இடத்தில் இருந்து செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது என்பதையும் எளிதாக அறிந்துவிட முடியும். சமீபகாலமாக பெரும்பாலான குற்ற சம்பவங்களில் செல்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் ஐஎம்இஐ எண் உதவியுடன் அந்த செல்போன்களை பயன்படுத்தியவர்கள், அதில் வந்த அழைப்புகள் குறித்த தகவல்களை குற்ற சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகள் பெற்று வருகின்றனர். ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்கள் குற்ற சம்பவங்களில் பயன்படுத்தப்படும் போது குற்றவாளிகள் குறித்து எவ்வித தகவலையும் பெற முடியாது. இதனால்தான் பயங்கரவாதிகள் பெரும்பாலும் ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்தி தங்களது சதித்திட்டங்களை கச்சிதமாக அரங்கேற்றிவிடுகின்றனர். இந்தியாவுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இனிமேலும் ஐஎம்இஐ எண்கள் இல்லாத செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதை அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல என மத்திய அரசு கருதி, அதுபோன்ற செல்போன்களுக்கு உடனடியாக சேவையை நிறுத்துமாறு அறிவுறுத்தியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக