பிரபாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபாகரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 நவம்பர், 2009

வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்!


இலங்கை நிகழ்வுகள் குறித்து தான் எழுதாத கருத்துகளுக்கு வைகோ பதில் அளித்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
விவேகம் இல்லாவிட்டால் வீரத்தால் பலன் ஏற்படாது என்ற கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாடகத்தில் தான் எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முதல்வர் நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:

வார இதழ் ஒன்றில் வந்துள்ள பேட்டியில், ‘இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மௌனமாக அழுவது யாருக்கு தெரியும்?’ என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு பதில் சொல்லப்பட்டிருக்கிறதே? ‘இத்தனை ஆயிரம் பேர் இறந்தது பிரபாகரனால்’ என்று நான் எழுதவே இல்லை. நான் எழுதாததை எழுதியதாக ஒரு கேள்வியை கேட்க செய்து, அதற்கு என்னை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் எழுதியதை மறைத்துவிட்டு கற்பனையாக அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் கேள்வி கேட்டு, அப்படி நான் எழுதினேனா என்பதை தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னை தாக்கி பதில் சொல்லியிருப்பது என் மீது வசை பாடுவதற்காக இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகம்.

‘சகோதர யுத்தம் நடத்தியதால்தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?’ என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கும் உங்களை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே? பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. ‘மாவீரன் மாத்தையா’ என்று ஒரு துரோகியை நீங்கள் அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்கிறாரே? மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான். ‘மாவீரன் மாத்தையா’ என்றுதான் அறிமுகம் செய்துவைத்தார்.

‘வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப் படுத்தப்பட்டது என்று வேதனைப் படுகிறாரே கருணாநிதி?’ என்ற கேள்விக்கும் பதில் அளித்தவர் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உங்களை தாக்கி இருக்கிறாரே? அது நான் எழுதிய கருத்துதான். அதில் என்ன தவறு? வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு நம்மை தாக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்க தோன்றும். வீரம் விவேகம் பற்றி நான் இப்போது கூறவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ‘சாக்ரடீஸ்’ ஓரங்க நாடகத்திலேயே ‘வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!’ என எழுதியிருக்கிறேன்.

அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர் இப்போது இழித்துரைக்கிறார். எனக்கு இன்னும் அந்த பேச்சுதான் நினைவில் நிற்கிறது.
ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக இரண்டு பேரை கைது செய்து, ஒருவரை விடுதலை செய்து விட்டு, தன் மீது மட்டும் வழக்கு போட்டிருப்பதாக உங்கள் மீது குற்றம் சொல்கிறாரே? ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக கைது செய்யப்பட்டாலும், இருவரும் என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை அறிந்து, தவறாக பேசாதவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு, தவறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுப்பது முறைதானே? இதில் சட்டத்தை வளைப்பதற்கு என்ன இருக்கிறது? சண்டித்தனமாக பேசி விட்டு, பிறகு எதற்காக புலம்ப வேண்டும்? ‘பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று கருணாநிதி சொல்கிறார் என்றால், அவர் சிங்கள அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிவிட்டதையே காட்டுகிறது’ என்று பேட்டியாளர் சாடியிருக்கிறாரே? அப்படி நான் கூறவில்லை.

24ம் தேதி எழுதிய ஒரு பதிலில்கூட ‘விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரை பொழிகின்றன. அதே நேரம் இளந்தலைவர் ராஜீவ் காந்தியும், அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்னமும், பத்மநாபாவும் கொல்லப்பட்டபோது அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினரும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?’ என்று எழுதினேன். இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் நான் கண்ணீர் வடிக்கிறேன். அதில் புலிகளும் இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எந்த போராளிக் குழுவிலும் சேராத அப்பாவிகளும் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.
புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை நினைத்து மௌனமாக குதூகலித்தவர் நீங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

மனசாட்சியை விற்று விட்டவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். ஈழ தமிழருக்காக 1956 முதல் குரல் கொடுத்தவன் நான். அவர்களுக்காக சிறை சென்றவன். நான் சிறைபட்டதற்காக பல இளைஞர்கள் தீ வைத்துக் கொண்டு தங்கள் இன்னுயிரை போக்கிக் கொண்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் பதவியை நானும் பேராசிரியரும் இலங்கை தமிழருக்காக ராஜினாமா செய்தோம். புலிகளுக்கு உதவியதாக காரணம் கூறப்பட்டு எனது ஆட்சியே கலைக்கப்பட்டது & ஒருமுறை அல்ல, இரண்டு முறை. விடுதலை புலிகளுக்கும் நிதி வசூலித்து கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர்கள் வாங்கிக் கொள்ளவில்லை. இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆனால் புலிகளின் தலைவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இவர் நேற்றுகூட சந்தித் திருக்கிறார். புலிகளை பற்றி ஜெயலலிதா பேசாத பேச்சா? அவரின் இனிய சகோதரர் இவர். இவர் கூறுகிறார், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை கண்டு நான் குதூகலித்ததாக!

தமிழ்ச் செல்வன் மறைந்தபோது நான் கண்ணீர் கவிதை எழுதினேன். அதனை கண்டித்து அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. சந்திரஹாசனையும், பாலசிங்கத்தையும், சத்யேந்திராவையும் தமிழக காவல்துறை கைது செய்து நாடு கடத்தியபோது, அதை நிறுத்தாவிட்டால் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தி.மு.க. அறிவித்து போராட்டம் நடத்தியது. அதன் காரணமாக நாடு கடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்படிப்பட்ட என்னைப் பார்த்து நான் புலிகள் படுகின்ற துன்பத்தை கண்டு மகிழ்ச்சி அடைவதாக பேட்டி கொடுக்கிறார்.

அந்த வார இதழும் அதை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. ஒரு வகையில் எனக்கோர் மகிழ்ச்சி. நாம் பிரிவினை கேட்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே & திராவிட நாடு திராவிடருக்கே!’ என முழங்கியபோது, ‘எலி வளை எலிகளுக்கே’ என்று கேலிச் சித்திரம் வரைந்து நம்மை கேலி செய்த ஏடு அது. அந்த காலம் மாறி, இன்று எலிகள் அல்ல புலிகள் என்று ஏற்றுக்கொண்டிருப்பது & அதுவும் தமிழ் ஈழம் கேட்கிற அளவுக்கு மாறியிருப்பது மகத்தான மாறுதல். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

சனி, 28 நவம்பர், 2009

வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தி பிரபாகரன் வழிகாட்டலில் தொடர்ந்து போராடுவோம்: விடுதலைப்புலிகள் மாவீரர் தின அறிவிப்பு


உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நேற்று மாவீரர் தினத்தை எழுச்சியுடன் கடைபிடித்தனர். இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கனடா, ஆஸ்திரேலியா, டென் மார்க், பிரான்ஸ், அமெரிக் காவிலும் மாவீரர் தின நிகழ்ச்சிகள் எழுச்சியாக நடந்தன.
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்தின உரையை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னிப் பிரதேசத்தில் நிகழ்த்துவர். கடந்த ஆண்டு வான்புலிகளின் ஹெலி காப்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு பிரபாகரன் வீரஉரையாற்றினார். ஆனால் இந்த ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் மாவீரர் தின உரை நேற்று வெளியிடப்பட்டது.
ஈழத்தமிழ் இனம் வரலாற்று ரீதியாக எவ்வாறு முடக்கப்பட்டது என்பது அந்த உரையில் தெளிவாக கூறப்பட்டிருந்தது. தமிழர்களின் நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட விதமும் கூறப்பட்டிருந்தது.
சிங்களர்களின் சூழ்ச்சிக்கு உலக நாடுகள் அமைதியாகி விட்ட நிலையில் அடுத்து செய்யப்போகும் நடவடிக்கைகள் குறித்து இந்த உரையில் விடுதலைப்புலிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

அந்த மாவீரர் தின உரையின் ஒரு பகுதி வருமாறு:-
எமது பாசமிகு தமிழ் மக்களே, வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாகவும் எமது அரசியல் ராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளி நாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும் கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் இலங்கை அரசுதரப்பு மிகக் கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்ல முடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கவுரவ தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.
நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
அதே நேரம் தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்த காலத்தில் செயற் பட்டது போன்று இனிவரும் காலங்களிலும் ஒற்றுமையோடும் தன்னல மற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

எமது லட்சியப்பாதை அனைவரையும் அரவணைத்து புதிய சூழல்கள், புதிய நட்புகளை தேடி உலக தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்த புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் லட்சியக்கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை.

சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை.
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த முப்பதினா யிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் லட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப் புகளும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத் தீயை மூட்டி யுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதி களால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்ட எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறு திவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.
இவ்வாறு அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 26 நவம்பர், 2009

முடிந்த தொடர்... முடியாத வரலாறு: யாருக்கு ?


இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டாரக வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை முடியாத வரலாறாக வாழும் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம். அதை நினைவில் கொண்டு முதல்வர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: "முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், "நானும் தமிழன் தானே' என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, "நீ தமிழன் தான்! இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான்! ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன்! பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன்! பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன்!' என்று சினந்து கூறுவதாக அமையும். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், ""இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், "எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான்!' என்று கூறுவதாக அமையும். ""இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது'' என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார். இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், ""வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் "பாயும் புலி பண்டாரக வன்னியன்' தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது! விளக்கமான பதில்! வீரம் கொப்பளிக்கும் பதில்! அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டாரகனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள்; அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என்று முடியும். காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.