வெள்ளி, 6 நவம்பர், 2009

அமெரிக்க ராணுவ முகாமில் டூமீல்., டூமீல்


டெக்சாஸ் : அமெரிக்க ராணுவ வீரர் முகாமில் சக வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாயினர். 30 பேர் காயமுற்றனர். இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட வீரர் ஈராக் பாதுகாப்பு பணிக்காக செல்ல தயாராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மனநல மருத்துவரும் கூட. அமெரிக்காவில் டெக்சாசில் கில்லின் அருகே போர்ட்ஹூட் என்ற ராணுவ முகாம் உள்ளது. இங்கு வீரர்கள் வழக்கம்போல் தங்களது பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் வந்த சக வீரர் ஒருவர் அங்கிருந்த வீரர்களை நோக்கி பட ,பட வென சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் இறந்தனர். 30 பேர் காயமுற்றனர். ஒருவர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ராணுவ ஜெனரல் பேட்டி : இச்சம்பவம் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் பாப்கோன் நிருபர்களிடம் பேசுகையில் ; இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் அங்குள்ள ராணுவ வீரர் மேஜர் நைடால் மாலிக் ஹசன் ( 39 ) . இவர் கையில் இரண்டு துப்பாக்கியுடன் வந்து சுட்டதாக தெரிகிறது. முதலில் சக வீரர்களால் இவர் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி இல்லை. அவர் தற்போது கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகிக்கப்படுகிறது. இவர் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு போலீஸ்காரரும் 11 ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். நல்வேளை அருகில் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த அரங்கினுள் வரவில்லை. அங்கு 600 பேர் இருந்தனர். இத்துயர சம்பவத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்த அங்கிருந்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் .



ஒபாமா கவலை : இது குறித்து அதிபர் ஒபாமா கூறுகையில் ; இந்தச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இது போன்ற செயல் நமது நாட்டின் மதிப்பை குறைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நைடால் ஈராக்கில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இன்னும் சில நாட்களில் ஈராக் செல்ல வேண்டிய அவர் சக வீரர்களை சுட்டு கொன்றது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: