சனி, 21 நவம்பர், 2009
30 காசு செலவில் முகம் பார்த்து பேசலாம்
சென்னை: தென்னிந்தியாவில் முதல்முறையாக 30 காசு கட்டணத்தில் எதிர்முனையில் பேசுபவரின் முகம் பார்த்து பேசும் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்ப(3ஜி) செல்போன் சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிவேக இன்டெர்நெட், வீடியோ அழைப்பு, வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களை செல்போன் மூலம் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதி கொண்டதுதான் மூன்றாம் தலைமுறை செல்போன் சேவை. இதை மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா முன்னிலையில் கடந்த பிப்.22ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். வணிக ரீதியிலான மூன்றாம் தலைமுறை செல்போன் சேவையை சென்னை தொலைபேசி நேற்று தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தென்னிந்திய தொலைத் தொடர்பு திட்ட தலைமை பொது மேலாளர்அனந்தன் தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் ஆ.சுப்பிரமணியன் பேசும் போது, ‘அதிவேக இன்டர்நெட் சேவையை இந்த 3ஜி சேவை மூலம் பெறலாம். எதிர் முனையில் பேசுவரின் முகத்தை பார்த்து பேசும் வீடியோ அழைப்பு வசதி உள்ளது. இப்படி உள்ள 3ஜி சேவையை குறைந்த கட்டணத்தில் பேசலாம். உள்ளூர் வீடியோ அழைப்பு ஒரு நிமிடத்திற்கு 30 காசுகள், எஸ்டிடி வீடியோ அழைப்புக்கு 50 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்காக ஒரு லட்சம் இணைப்புகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இச்சேவைக்காக சென்னை முழுவதும் 304 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒன்றரை மாதத்தில் 256 கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே 2ஜி சேவை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களும் அதே எண்ணை பயன்படுத்தி 3ஜி சேவைக்கு மாறிக் கொள்ளலாம்’ என்றார். ‘சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர இதர மாவட்டங்களில் 38 நகரங்களில் இன்னும் 2 மாதங்களில் 3ஜி சேவை ஆரம்பிக்கப்படும்’’ என தமிழக தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் வரதராஜன் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக