இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30.10.1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முத லியவற்றைக் குறிப் பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் பேசத் தொடங்கினார். உணர்ச்சி மிகுதியில் குரல் தழுதழுக்க அவர் கூறினார்: "இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது... என்னை சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன்.
நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்." _இவ்வாறு இந்திரா காந்தி கூறினார். இந்திராவின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள், "இந்திரா வாழ்க" என்று குரல் எழுப்பினர். அடுத்த நாள் நடக்கப்போகும் விபரீதத்தை அவர்கள் அறியவில்லை. கூட்டம் முடிந்ததும் இந்திரா காந்தி, கவர்னர் பி.என்.பாண்டேயின் இல்லத்துக்குச் சென்று தங்கினார்.
அப்போது கவர்னர், "வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்" என்று இந்திராவிடம் கூறினார். "நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்" என்று இந்திரா பதிலளித்தார்.
இந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்து இந்திராவுக்கு டெலிபோன் வந்தது. பிரியங்காவும், ராகுலும் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது கார் விபத்தில் சிக்கினார்கள் என்று, போனில் சோனியா தெரிவித்தார். பொற்கோவில் போரைத் தொடர்ந்து, தன் பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம், அல்லது கடத்தப்படலாம் என்று இந்திரா எதிர்பார்த்தார். எனவே, விபத்தில் சிக்கினார்கள் என்ற செய்தி கேட்டு, அவர் பதற்றம் அடைந்தார். "இது சிறிய விபத்துதான். யாருக்கும் காயம் இல்லை. நன்றாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினால் போதும்" என்று சோனியா எவ்வளவோ கூறியும், இந்திராவுக்கு நிம்மதி ஏற்படவில்லை. சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பத் தீர்மானித்தார். அதன்படி, அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது.
இரவோடு இரவாக, விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். நள்ளிரவுக்குப்பின் டெல்லியை அடைந்தார். நேராக காரில் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பேரக்குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். "அவர்களுக்கு காயம் எதுவுமில்லை. கவலைப்படாதீர்கள்" என்று இந்திராவிடம் கூறினார், சோனியா. இந்திரா, தன் செயலாளர் பி.சி.அலெக்சாண்டரை அழைத்துப் பேசினார். இந்திரா மிகவும் களைப்புடன் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டர், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், காஷ்மீர் பற்றியும், பஞ்சாப் பற்றியும் விரிவாக விவாதித்த பிறகே, அலெக்சாண்டரை அனுப்பினார். பிறகு செயலாளர் ஆர்.கே.தவானை அழைத்தார். மறுநாள் என்னென்ன நிகழ்ச்சிகள் தனக்கு இருக்கின்றன என்று கேட்டறிந்தார். முக்கியமானவற்றைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடும்படி கூறினார். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் படுக்கச்சென்றார். விடியற்காலை 4 மணிக்கு சோனியா எழுந்து பார்த்தபோது, இந்திரா ஏற்கனவே எழுந்துவிட்டதையும், குளிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதையும் கண்டார். அன்றைய தினம் காலையில் 9.00 மணிக் அளவில் சுட்டு கொல்லப்பட்டார் (31.10.1984)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக