வரலாற்று உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாற்று உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 டிசம்பர், 2009

வரலாறு : ராணி எலிசபெத் முடி சூட்டு விழா


கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, ராணி எலிசபெத் முடிசூட்டு விழா. ராணி எலிசபெத்தின் பெரியப்பாவான "எட்டாம் எட்வர்ட்", காதலுக்காக 1936 டிசம்பர் 10 ந்தேதி முடிதுறந்தார். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னரானார். 1937 மே 12.ல் முடிசூட்டு விழா நடந்தது.
 
ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆறாம் ஜார்ஜ், புற்று நோயினால் பீடிக்கப்பட்டார். இதன் காரணமாக 1951 செப்டம்பரில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. அவருடைய ஒரு நுரையீரல் அகற்றப்பட்டது. 1952 பிப்ரவரி 6ந்தேதி தனது 57-வது வயதில் மரணம் அடைந்தார்.
 
ஆறாம் ஜார்ஜ க்குப்பிறகு இங் கிலாந்து அரசியாக அவர் மகள் எலிசபெத் அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தின் இயற்பெயர் அலெக்சாண்ட்ரா மேரி. 1926 ஏப்ரல் 21.ந்தேதி லண்டனில் பிறந்தார். 1947 ல் அவருடைய திருமணம் நடைபெற்றது. மணமகன் பிலிப், திருமணத்துக்குப்பின்னர் "எடின்பரோ கோமகன்" என்று அழைக்கப்படுகிறார்.
 
பட்டத்துக்கு வரும்போது எலிசபெத்துக்கு வயது 26. முடிசூட்டு விழா 1953 ஜுன் 2 ந்தேதி லண்டனில் உள்ள மாதா கோவிலில் மிக கோலாகலமாக நடந்தது. முடிசூட்டு விழாவுக்கு எலிசபெத் ராணி தங்கமயமான கோச்சு வண்டியில் கணவர் எடின்பரோ கோமகனுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்துக்கு முன்பாக குதிரைப்படை, காலாட் படை, பாண்டு வாத்தியக்குழு ஆகியவை அணிவகுத்து சென்றன. ரோட்டின் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
 
ஊர்வலம் காலை 9.27 மணிக்கு புறப்பட்டது. கடும் குளிர் வாட்டியது. இடைஇடையே மழை தூறல் போட்டது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உடலில் போர்வையை போர்த்திக் கொண்டும், பத்திரிகை காகிதங்களை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தார்கள். ஊர்வலத்தை காண வழி நெடுகிலும் 50 லட்சம் மக்கள் கூடினார்கள்.
 
சில இடங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது. பெண்களும், குழந்தைகளும் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முடிசூட்டு விழாவில் `காமன் வெல்த்' அமைப்பில் பங்கு வகிக்கும் இந்தியா உள்பட 8 நாட்டு பிரதமர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலத்தில் அவர்களும் பவனியாக சென்றார்கள்.
 
பிரதமர் நேருவும், அவருடைய மகள் இந்திரா காந்தியும் இரண்டு குதிரைகள் பூட்டிய கோச்சில் (சாரட்டு வண்டி) சென்றார்கள். 11:32 மணிக்கு ஊர்வலம் மாதா கோவிலை சென்றடைந்தது. இங்கிலாந்தின் தலைமை கிறிஸ்தவ பாதிரியார் (ஆர்ச் பிஷப்) முடிசூட்டு வைபவத்தை நடத்தி வைத்தார். சடங்குகள் எல்லாம் முடிந்ததும் வைரக் கற்கள் பதித்த தங்க மகுடம் எலிசபெத்தின் தலையில் சூட்டப்பட்டது.
 
பிறகு அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த தங்க சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். கையில் செங்கோல் பிடித்திருந்தார். மகுடாபிஷேகம் முடிந்ததும் சடங்குகளை நடத்தி வைத்த ஆர்ச் பிஷப் மண்டியிட்டு ராணிக்கு மரியாதை செலுத்தினார். மற்ற பாதிரியார்களும் முழங்காலிட்டு நின்று மரியாதை செலுத்தினர்.
 
பிறகு ராணியின் கணவரான எடின்பரோ கோமகன் தனது மனைவிக்கு (எலிசபெத் ராணி) முன்பாக வந்து நின்று முழங்காலிட்டு விசுவாசப் பிரமாணம் செய்தார். "எடின்பரோ கோமகனான நான், உங்களுக்கு அடிபணிகிறேன். உங்களுக்காகவே வாழ்ந்து, உங்களுக்காகவே உயிர் துறக்க இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் விசுவாச பிரமாண உறுதிமொழி எடுத்தார்.
 
இந்த முடிசூட்டு வைபவத்தை மாதா கோவிலின் மாடிப்பகுதியில் அமர்ந்து இளவரசர் சார்லஸ் (அப்போது அவருக்கு வயது 4) பார்த்துக்கொண்டிருந்தார். அம்மாவுக்கு முன்பாக அப்பா மண்டியிட்டு பிரமாணம் செய்து கொடுத்ததை கண்டு ஆச்சரியப்பட்டு கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
 
எடின்பரோ கோமகனுக்கு அடுத்து ராணியின் உறவினர்களும், பிரபுக்களும் ஒருவர்பின் ஒருவராக சென்று விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தார்கள். மாதா கோவிலில் கூடியிருந்த பிரபுக்களும், மந்திரிகளும், முக்கிய பிரமுகர்களும் ஒன்றுபட்ட குரலில், "கடவுளே! எலிசபெத் ராணியை காப்பாற்றுவாயாக!", "ராணி எலிசபெத் நீடூழி வாழ்க", "ராணி எலிசபெத் சிரஞ்சீவியாக வாழ்க" என்று வாழ்த்து கோஷங்களை முழங்கினார்கள்.
 
பிறகு விஷேச ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ராணி அரண்மனைக்கு பவனியாக சென்றார். அவருக்கு பின்னால் ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் தலைவர்கள், பிரபுக்கள், மந்திரிகளும் பவனி சென்றனர்.
 
மறுநாள் ராணி எலிசபெத் தனது அரண்மனையில் விருந்து அளித்தார். இந்த விருந்தில் பிரதமர் நேரு, மகள் இந்திரா காந்தியுடன் கலந்து கொண்டார். வெளிநாட்டு தூதர்களும் இதில் கலந்து கொண்டார்கள். அதற்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் காலை விருந்து கொடுத்தார். அதிலும் நேரு உள்பட 8 காமன்வெல்த் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
முடிசூட்டு விழாவின்போது ராணி எலிசபெத்துக்கு சார்லஸ் (வயது 4), ஆனி (வயது 2) ஆகிய இரண்டு குழந்தைகள். பிறகு 1960-ல் ஆண்ட்ரூவும், 1964-ல் எட்வர்டும் பிறந்தனர். பட்டத்து இளவரசரான சார்லஸ், அழகி டயானாவை மணந்து பிறகு விவாக ரத்து செய்ததும், டயானா கார் விபத்தில் பலியானதும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்.
 
உலகின் மிகப்பெரும் கோடீசுவரியாக எலிசபெத் மதிக்கப்படுகிறார். அவருடைய சொத்துக்களின் மதிப்பு ரூ.35,000 கோடி. 1993 ஏப்ரல் மாதம் முதல் எலிசபெத் தானே முன்வந்து வருமான வரி செலுத்தி வருகிறார். அவர் கட்டும் வருமான வரி ஆண்டுக்கு சுமார் 315 கோடி ரூபாய்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு மரண தண்டனை


பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோ மீது கொலை வழக்குத் தொடரப்பட்டது. அதில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசியலில் முக்கிய இடம் பெற்றவர் பூட்டோ. ஜின்னாவுக்கு அடுத்த படியாக பெரிய தலைவராக கருதப்பட்டவர்.
பூட்டோவின் இளமை பருவம், அரசியல் வாழ்க்கை பெரும் திருப்புமுனைகளை கொண்டது. அவருடைய இறுதிகால வாழ்க்கை சோதனை மிகுந்த கண்ணீர் காவியமாக அமைந்தது. பூட்டோவின் தந்தை ஷா நவாஸ். பெரிய பணக்காரர். திவானாக இருந்தார். தாயார் ஜக்கிபாய். இந்தியப்பெண்.
பூட்டோவின் முழுப்பெயர் ஜூல் பிகார் அலி பூட்டோ. 1928_ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள `லர்கானா' என்ற ஊரில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது எல்லாம் பம்பாயில் தான். பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது பூட்டோவுக்கு வயது 19. பூட்டோ அமெரிக்காவில் கலிபோர்னியாவிலும், இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து வக்கீல் (பாரிஸ்டர்) பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் வக்கீல் தொழில் செய்த பூட்டோ அரசியலிலும் ஆர்வமாக ஈடுபட தொடங்கினார். 1958_க்கு பிறகு அவரது அரசியல் செல்வாக்கு ஓங்க தொடங்கியது. இஸ்கந்தர் மந்திரிசபையில் இடம் பெற்றார். பாகிஸ்தானில் அயூப்கான் அதிபராக இருந்தபோது, அவரிடம் பூட்டோ வர்த்தக மந்திரியாக இருந்தார். பிறகு 1963_ல் வெளிவிவகார மந்திரியானார்.
1967_ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு `மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார். அயூப்கானுக்கு எதிராக செயல்பட்டதால் பூட்டோ 1968_ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். உடனே பூட்டோ அமெரிக்காவுக்கு சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில், யாகியாகான் பாகிஸ்தான் அதிபர் ஆனார். அவரது ஆட்சி காலத்தில் 1971_ல் இந்தியாவுடன் நடந்த போரில் பாகிஸ்தான் தோற்றது. கிழக்கு பாகிஸ்தான் "வங்காளதேசம்" என்ற பெயரில் சுதந்திர நாடாகியது. இதனால், யாகியாகான் பதவி இழந்தார். அதன்பின் பூட்டோ பாகிஸ்தான் அதிபரானார். அதுவரையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முறையே இருந்து வந்தது. அதிபர் ஆன 2 ஆண்டுகளுக்குப்பிறகு, பூட்டோ ராணுவ ஆட்சி முறையை ரத்து செய்தார். பாகிஸ்தானின் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார்.
1977_ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பூட்டோவின் "மக்கள் கட்சி" 216 இடங்களில் 155 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி கிளர்ச்சி நடத்தினார்கள். இந்த கலவரத்தில் 250 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 5_7_1977_ல் பூட்டோவுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. பூட்டோவினால் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட ஜியா_வுல்_ ஹக் இந்த புரட்சியை நடத்தி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார்.
பூட்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் தேர்தல் நடத்த ஜியா தீர்மானித்ததைத் தொடர்ந்து பூட்டோ விடுதலை செய்யப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி இருந்த பூட்டோவை, ராணுவ அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. ராவல்பிண்டி சிறையில் அடைத்தது.
தன்னுடைய அரசியல் எதிரியான அகமது கசூரி என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தந்தையை கொலை செய்ய உத்தரவிட்டதாக பூட்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது. பூட்டோவின் "மக்கள் கட்சி" தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கசூரி. முதலில் பூட்டோவின் நண்பராக இருந்த அவர், பிறகு பூட்டோவின் ஆட்சியை கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார்.
இதனால் கசூரியை தீர்த்துக்கட்ட பூட்டோ திட்டம் தீட்டினார் என்றும், 4 அதிகாரிகளிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என்றும் கூறப்பட்டது.1974_ல் கசூரியும், அவர் தந்தையும் ஒரு திருமணத்துக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த காரை நோக்கி இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. குறி தவறியதால் கசூரி உயிர் தப்பினார். அருகில் இருந்த அவர் தந்தை குண்டு பாய்ந்து இறந்தார்.
இதையொட்டி, பூட்டோ மீதும் மற்றும் ராணுவ அதிகாரிகள் முகமது அப்பாஸ், குலாம் முஸ்தபா, அரத் ஊக்பால், ராணா இஸ்திகார் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டு விசாரித்து பூட்டோவுக்கும், மற்ற 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 18.03.1978_ல் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூட்டோ அப்பீல் செய்தார். அப்பீலை 7 நீதிபதிகள் விசாரித்து பிப்ரவரி 6_ந்தேதி தீர்ப்பு கூறினார்கள். தூக்கு தண்டனையை 4 நீதிபதிகள் உறுதி செய்தார்கள். 3 நீதிபதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். "மெஜாரிட்டி" தீர்ப்பின்படி தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நீதிபதிகள் கருத்து பிளவுபட்டு இருப்பதால், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பூட்டோ சார்பில் மீண்டும் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மார்ச் மாதம் 24_ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆயினும் தூக்குத்தண்டனையை குறைக்கலாம் என்று அதிபர் ஜியாவுக்கு நீதிபதிகள் சிபாரிசு செய்திருந்தனர். ஆனால் இரும்பு மனம் கொண்ட அதிபர் ஜியா அதை ஏற்கவே இல்லை.
இறுதியில் பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

புதன், 18 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: ராஜீவ் காந்தியின் மரணம்


கடந்த 20_ம் நூற்றாண்டில் உலக நாடுகளில் எத்தனையோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் தேசத்தந்தை காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலர்களே சுட்டுக்கொன்றனர்.
ஆயினும் 47 வயதே நிறைந்தவரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவருமான ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டாகவந்த ஒரு பெண்ணால் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் ரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது.
பிரதமர் பதவியை 7_3_1991_ல் சந்திரசேகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுன் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. மே 21_ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய ராஜீவ் திட்டமிட்டார்.
21_ந்தேதி பகலில் அவர் ஆந்திராவில் பல தேர்தல் கூட்டங்களில் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார். ஆனால் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் காலை சென்னை போகலாம் என்று எண்ணினார். விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தபோது "விமானம் சரியாகி விட்டது சென்னைக்குப் புறப்படலாம்" என்று தகவல் வந்தது. எனவே காரை விமான நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார்.
விமானம் 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் இரவு 8.26 மணிக்கு ராஜீவ் காந்தி சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் பற்றி கேட்டதற்கு "மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்" என்று பதிலளித்தார். பிறகு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குக் காரில் சென்றார். அங்கு இ.காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 10.10 மணிக்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் போய்ச்சேர்ந்தார்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு மேடையை நோக்கிச் செல்லும்போது வழியில் கூடியிருந்தவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்க நின்று கொண்டிருந்தவர்களில் அரக்கோணத்தை சேர்ந்த லதா கண்ணன் (வயது 35) என்ற காங்கிரஸ் ஊழியரும் ஒருவர். அவருடன் அவர் வளர்ப்பு மகளான கோகிலா என்ற 15 வயதுச்சிறுமியும் வந்திருந்தாள். அவள் ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள்.
அதை ராஜீவ் ரசித்துக் கேட்டார். இவர்களுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். சுடிதார் உடையில் இருந்த அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கையில் ஒரு சந்தன மாலை இருந்தது. கோகிலா கவிதை பாடி முடித்ததும் ராஜீவ் காந்தி அவள் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தார். அவர் அங்கிருந்து நகரத் தொடங்கும்போது கையில் சந்தன மாலை வைத்திருந்த பெண் அவர் அருகே சென்றாள். மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள்.
கண்மூடி திறப்பதற்குள் அவள் கை இடுப்பில் மறைவாக கட்டியிருந்த பெல்ட்டைத் தொட்டது. அவ்வளவுதான். பெல்ட்டுடன் கட்டியிருந்த குண்டுகள் வெடித்தன. ராஜீவ் காந்தியும், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களும் உடல் சின்னாபின்னமாகச் சிதறி தரையில் வீழ்ந்தார்கள். குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சத்தம் அதிகம் கேட்கவில்லை.
தவிரவும் மேடை அருகே காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். எனவே அருகே இருந்தவர்கள் கூட குண்டு வெடித்ததை உடனடியாக உணர முடியவில்லை. புகை மண்டலமாக இருக்கிறதே என்று ஓடிச்சென்று பார்த்தபோது பலர் உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த பயங்கரக்காட்சியைக் கண்டு அலறினார்கள்.
இந்தக் கூட்டத்துக்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்து ஓடோடி வந்தனர். "ராஜீவ் எங்கே? ராஜீவ் எங்கே?" என்று கதறினார் மூப்பனார். ராஜீவ் காந்தி தலைகுப்புற கிடந்தார். அவர் தலையின் பின்புறம், காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ராஜீவ் காந்தி என்று அடையாளம் கண்டு கொண்ட ஜெயந்தி நடராஜன் எம்.பி., தாங்க முடியாத அதிர்ச்சியும், துயரமும் அடைந்து கதறினார். இதற்குள் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அந்த இடத்திற்கு ஓடிவந்தனர். ராஜீவ் உடலைப்பார்த்து அலறித்துடித்தனர்.

திங்கள், 16 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: இந்திய நாணய வரலாறு


இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை நாணயங்கள் இருந்தன.
இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்தது. 1_4_1957 முதல் புதிய பைசா நாணயம் அமுலுக்கு வரும் என்று அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்த நாணயம் எப்படி இருக்குமோ? பழைய நாணயத்தை எப்படி மாற்றுவது? இதன் விளைவாக விலைவாசி உயருமா?" என்பது போன்ற அச்சம் நிலவியது. ஆனால் நாளடைவில் அது சரியாகி விட்டது.
16 அணா என்ற கணக்கை மாற்றி, ஒரு ரூபாய்க்கு 100 காசு என்ற புதிய கணக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு அணா என்பது 6 காசு ஆனது. கணக்கு போடுவதை சுலபமாக்குவதற்காகவே இந்த மாற்றம் (தசாம்ச நாணய முறை) கொண்டு வரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்ற 4 புதிய காசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை வருமாறு:-
1. பழைய காலணாவை கொஞ்சம் சிறிய உருவத்தில் அச்சிடப்பட்டு இருந்தது ஒரு பைசா நாணயம்.
2. ஒரு அணாவைப் போல வளைவு வளைவாக சிறிய உருவத்தில் வெளி வந்தது 2 பைசா நாணயம்.
3. அரை அணா, 2 அணா நாணயங்களைப்போல சதுர வடிவில் 5 பைசா இருந்தது.
4. அணாவைப் போலவே பெரிய உருவத்தில் 10 பைசா இருந்தது.
(இதற்கு பின்னர் 20 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.)
இந்த புதிய பைசா நாணய முறை, ஏப்ரல் 1_ந்தேதி முதல் அமுலுக்கு வந்ததால், பாங்கி கணக்குகளை மாற்றவேண்டியது இருந்தது. இதற்காக பாங்கிகளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்களுக்கும் 2 நாள் விடுமுறை கொடுக்கப்பட்டது.
பாங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், ஏப்ரல் 4_ந்தேதியில் இருந்துதான் பைசா நாணயம் பொது மக்கள் கையில் கிடைத்தது. புதிய நாணயத்தை வாங்கிப் பார்ப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.
பைசா நாணயம் அமுலுக்கு வந்தாலும் பழைய அணா நாணயமும் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். புதிய நாணயம் பற்றி பிரதமர் நேரு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
"ஏப்ரல் 1_ந்தேதி ஒரு புரட்சி ஆரம்பமாக இருக்கிறது. அதுதான் புதிய நாணய திட்டம். மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பழக்கவழக்கங்களையும் பாதிக்கிற இந்த மாறுதல் ஏன்? என்று கேட்கலாம். இப்போதுள்ள நாணய முறை சிக்கல் நிறைந்தது.
கணக்கு போடுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே சிக்கல் இல்லாத புதிய நாணய முறையை கொண்டு வருகிறோம். இந்த மாறுதல்கள் ஆரம்பத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். இந்த சங்கடங்களை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய் திருக்கிறோம். இன்னும் 3 வருடங்களுக்கு பழைய நாணயங்களும் சட்டப்படி செல்லுபடியாகும்.
புதிய மாறுதலால் யாருக்கும் எந்தவித கஷ்டமோ, நஷ்டமோ ஏற்படாது. நன்மையே ஏற்படும். எனவே இந்த புதிய நாணய முறையை நாட்டு மக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்." இவ்வாறு பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார். இந்த புதிய நாணய முறைக்கு ராஜாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா போன்ற சில்லறை நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. 25 பைசா கிடைப்பது கூட அரிதாக இருக்கிறது.
பஸ், ரெயில் கட்டணங்கள் மற்றும் பொருட்களின் விலைகள் 50 காசு அல்லது ரூபாய் கணக்கில் நிர்ணயம் செய்யப்படுவதால் சில்லறை நாணயங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

வெள்ளி, 13 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம் : ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்


கல்கத்தாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ராஜீவ் காந்தி, பெரும்பாலும் விமானிகள் அறையிலேயே இருந்தார். டெல்லியில் இருந்து, வயர்லெஸ் மூலம் அவருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்திரா காந்தி இறந்து விட்டதாக பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் வந்தது. தன் உணர்ச்சிகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராஜீவ்காந்தி. அவர் டெல்லி போய்ச்சேர்ந்தபோது, விமானநிலையத்தில் மந்திரிகளும், காங்கிரஸ் தலைவர்களும் கூடியிருந்தனர். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர்.
நேரு மறைந்தபோதும் லால்பகதூர் சாஸ்திரி இறந்தபோதும், மூத்த மந்திரியான நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். பிறகு பிரதமர் தேர்தல் நடைபெற்றது. அதே மாதிரி தன்னை இடைக்காலப் பிரதமராக ஆக்குவார்கள் என்று பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்தார். ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அவர் ஏமாற்றம் அடைந்தார். எனினும், அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் குழு (பார்லிமெண்டரி போர்டு) கூடி, புதிய பிரதமராக ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. ஆட்சி மன்றக் குழுவில் மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் பிரதமர் இறந்துவிட்டார். 2 பேர் அப்போது டெல்லியில் இல்லை.
நரசிம்மராவ் (உள்துறை மந்திரி), பிரணாப் முகர்ஜி (நிதி மந்திரி) ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவரும், ராஜீவ் பெயரை அறிவித்தனர். யேமன் நாட்டுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ஜெயில்சிங், இந்திரா மரணச் செய்தியை அறிந்ததும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டார். அன்று மாலை டெல்லி வந்து சேர்ந்தார். அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுடன்தான் அவர் வந்தார். காங்கிரஸ் தலைவர்களும் அதே முடிவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், ராஜீவ் காந்தி பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு உத்தரவிட்டார். அன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில், இந்தியாவின் புதிய பிரதமராக ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ஜெயில்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
"இந்திரா காந்தி மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த மந்திரிகள் அனைவரும் தொடர்ந்து நீடிப்பார்கள். புதிய மந்திரிகள் நியமனம் இல்லை. மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்படமாட்டாது" என்று ராஜீவ் அறிவித்தார். அன்றிரவு ராஜீவ் காந்தி ரேடியோவில் பேசினார். அவர் கூறியதாவது:-
"இந்திரா காந்தி, படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அவர் எனக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே தாயாக விளங்கினார். தன்னுடைய கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை, இந்திய மக்களுக்காக அவர் பாடுபட்டார். நாம் அனைவரும் துயரத்தில் முழ்கியுள்ள நேரம் இது. இந்த துயரத்தை _ சோதனையை நாம் தைரியத்துடனும், மனோ வலிமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி மறைந்துவிட்டார். ஆயினும் அவருடைய ஆன்மா நம்முடன் வாழ்கிறது. அவருடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை. நம்முடைய இந்திய நாடு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நாம் ஒற்றுமையுடன் இருந்து, இந்தியாவின் ஸ்திரத்தன்மையைக் காப்போம்." இவ்வாறு ராஜீவ் கூறினார்.
பின்னர், ராஜீவ் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. இந்திரா உடலை அன்றிரவு அவர் வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு இரண்டு நாட்கள் "தீன் மூர்த்தி" இல்லத்தில் (நேரு வசித்த வீடு) பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்கு வைத்திருப்பது என்றும், 3_ந்தேதி இறுதி ஊர்வலம் நடத்துவது என்றும், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்திரா மரணச்செய்தி டெல்லியில் காட்டுத்தீ போல பரவியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாரி சாரியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதார்கள். பலர் மயக்கம் அடைந்தார்கள். இந்திரா காந்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மருமகள் மேனகா, இந்திரா மரணச் செய்தி அறிந்ததும் ஓடோடி வந்தார். மாமியார் உடலைக் கண்டு அலறித்துடித்தார். நாள் முழுவதும் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் அமர்ந்திருந்தார். அன்று இந்திரா வீட்டில் இருந்த எவரும் தூங்கவில்லை.
உறவினர்கள் இந்திரா உடல் அருகே கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். இந்திரா வீட்டைச் சுற்றிலும், தோட்டத்திலும், ரோடுகளிலும் ஏராளமானவர்கள் சோகத்துடன் கூடியிருந்தனர். மறுநாள் காலை இந்திரா காந்தியின் உடல் "தீன் மூர்த்தி" இல்லத்துக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட "கிï" வரிசையில் நின்று, இறுதி மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று ஆத்திரம் அடைந்தவர்கள், சீக்கியர்களின் கடைகளையும், வீடுகளையும் தாக்கினார்கள்.
ஏராளமான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பயந்துபோன சீக்கியர்கள், வீடு_வாசலை விட்டுவிட்டு பஞ்சாப் மாநிலத்துக்கு தப்பி ஓடினர். இந்த கலவரங்களில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் இருக்கும் என்றும், டெல்லியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பின்னர் வந்த தகவல்கள் கூறின. சுமார் 50 ஆயிரம் பேர், வீடு_ வாசலை இழந்து அகதிகளானார்கள். 2_ந்தேதி இரவு, ராஜீவ் காந்தி டெலிவிஷனில் பேசினார். "இப்போது நடைபெற்று வரும் கலவரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கலவரங்கள், இந்திரா காந்தி எந்த லட்சியங்களுக்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியங்களுக்கு எதிரானவை.
கலவரம் அடங்காவிட்டால், அதை அடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார். வன்முறைக் கும்பலில் காலிகளும் ஊடுருவியிருந்தனர். அதனால் கலவரம் நீடித்தது. வன்முறையை ஒடுக்குமாறு ராணுவத்துக்கு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, ராணுவத்தினர் கலவரத்தை அடக்கினர். டெல்லியில் ராணுவத்தினர் டாங்கிகளில் ரோந்து வந்தனர். 3_ந்தேதி காலை, இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அவர் உடல் பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, ராணுவத்தினர் அணிவகுத்து செல்ல ஊர்வலம் புறப்பட்டது.
மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் இறுதி ஊர்வலம் சென்ற அதே பாதையில், இந்திராவின் இறுதி ஊர்வலமும் சென்றது. கலவர சூழ்நிலை காரணமாக, ஊர்வலத்தை காண ரோட்டின் இருபுறமும் கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை முன் அளவுக்கு இல்லாமல் குறைவாகவே இருந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி, நேரு ஆகியோரின் சமாதிகள் உள்ள இடத்திற்கு அருகே, சாந்தி வனம் என்ற இடம் இந்திரா காந்தியின் உடல் தகனத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஊர்வலம் அந்த இடத்தை அடைந்ததும், இந்திராவின் உடல் பீரங்கி வண்டியில் இருந்து இறக்கப் பட்டு, சந்தனக் கட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த "சிதை"யில் வைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் மார்க்கரெட் தாட்சர், ஜப்பான் பிரதமர் நாக சோனே, பாகிஸ்தான் அதிபர் ஜியா, வங்காள தேச அதிபர் எர் ஷாத், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, பாலஸ்தீன தலைவர் அராபத் மற்றும் ஜாம்பியா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அன்னை தெரசா, திரை உலகப் பிரமுகர்கள் வந்திருந்து இந்திராவுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். (இந்த சமயத்தில், தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று, மாற்று சிறுநீரகம் பொருத்த ஏற்பாடு நடந்து வந்தது. இந்த நிலையில், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்தால், அவர் உடல் நிலை மேலும் மோசமடையும் என்பதால், அந்தத் தகவல் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை.)

தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மரியாதை செலுத்தினர். பின்னர், "சிதை"க்கு ராஜீவ்காந்தி தீ மூட்டினார். "சிதை" எரிந்த போது, கூடியிருந்தவர்கள் "இந்திரா அமரர் ஆனார்", "இந்திராவின் புகழ் வாழ்க" என்று குரல் எழுப்பினர். மறுநாள் இந்திராவின் அஸ்தி (சாம்பல்) பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அஸ்தியின் ஒரு பகுதி திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. "நான் இறந்தபின், என் அஸ்தி இமயமலை மீது தூவப்பட வேண்டும்" என்று தன் விருப்பத்தை இந்திரா காந்தி ஏற்கனவே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, தாயாரின் அஸ்தியின் ஒரு பகுதியை, இந்திய விமானப்படை விமானத்தில் ராஜீவ் காந்தி எடுத்துச்சென்று, இமயமலைச் சாரலில் தூவினார்.

வியாழன், 12 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம் : இரண்டாம் உலகப்போர் :1942



ஜன.1:26 உறுப்பினர்களுடன் ஐ.நா.சபை உருவாயிற்று.
ஜன.2: பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள மணிலா நகரத்தை ஜப்பானியர் கைப்பற்றினர்.

ஜன.19: ஜெர்மணி படைகள் இருந்த பகுதிக்குள் ரஷிய பாராசூட் படையினர் குதித்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

ஜன.31: சிங்கப்பூரை ஜப்பான் படைகள் முற்றுகையிட்டன.

பிப்.8: சிங்கப்பூருக்குள் ஜப்பான் படைகள் புகுந்தன. சிங்கப்பூர் வீழ்ந்தது.

பிப்.15: ஜப்பானிடம் சிங்கப்பூர் சரண் அடைந்தது

மார்ச்.7: ஜப்பானிடம் ஜாவா சரண் அடைந்தது.

ஏப்.1: இலங்கை மீது ஜப்பான் விமானங்கள் குண்டு வீச்சு.

ஏப்.18: ஜப்பான் தலைநகர் டோக்கியோ மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியது.

ஏப்.30: ஹிட்லரும் முசோலினியும் சந்தித்துப் பேசினார்கள் ( லெனின்கிராட் நகரில் மட்டும் ஏப்பரல் மாதத்தில் 1 லட்சம் பேர் மாண்டனர்)
மே.2: பர்மாவில் உள்ள மாண்டாலே நகரை ஜப்பான் கைப்பற்றியது.

மே.4: மடகாஸ்கர் தீவை பிரிட்டீஷ் படைகள் கைப்பற்றின.

மே.31: ஆஸதிரேலியாவில் உள்ள சிட்னி துறைமுகத்தின் மீது ஜப்பானின் நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நடத்தின. ( இந்த மே மாதத்தில் மட்டும் 1,30,000 யூதர்கள் விஷவாயு மூலமாகவும் துப்பாக்கியால் சுட்டும் ஜெர்மானியர்கள் கொன்றனர். )

ஜூன்.10: போலந்து நாட்டில் ஏராளமான மக்களை ஜெர்மனி தூக்கிலிட்டது.

ஜூன்.16: மத்திய தரைக்கடலில் பிரிட்டீஷ் போர்க்கப்பல்களும் 3 இத்தாலி போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன ஐசோனவர்

ஜூன்.25: ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகளுக்கு தளபதியாக ஐசனோவர் (பிற்காலத்தில் ஜனாதிபதியானவர்) நியமிக்கப்பட்டவர்.
( ஜூன் மாதத்தில் வட அட்லாண்டிக் கடலில் நேச நாடுகளின் 124 கப்பல்களை ஜெர்மனி தாக்கி மூழ்கடித்தது )

ஜூலை.27: ரஷியாவுக்கு நுழைந்த ஜெர்மணிப்படைகள் டான் சூ ஆற்றைக்கடந்து காகசஸ் நகரை நோக்கி முன்னேறின. ஒரு அடிக்கூட பின்வாங்கக்கூடாது என்று ஸ்டாலின் தனது படைகளுக்கு கட்டளையிட்டார்.

ஆக.9: காகசஸ் நகருக்கு அருகில் எண்ணெய் கிணறுகள் உள்ள முக்கிய பகுதிக்குள் ஜெர்மணிப்படைகள் நுழைந்தன.

ஆக.13: இங்கிலாந்துப்பிரதமர் சர்ச்சில் ரஷுயாவுக்கு சென்று ஸ்டாலினை சந்தித்து பேசினார்

ஆக.23: ஸ்டாலின் கிரேடுக்கு வடக்கே உள்ள வால்கா என்ற பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன.

செப்.13: ஸ்டாலின் கிரேடு நகருக்குள் ஜெர்மனி படைகள் புகுந்தன.
செப்.22: ஸ்டாலின் கிராடு மையப்பகுதியை ஜெர்மனிப்படைகள் அடைந்தன. இரு தரப்பு படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்தது. ஜெர்மனி ரானுவம் திணறல்

நவ.22: ஸ்டாலின் கிராடு நகரில் புகுந்த ஜெர்மனிப்படைகளை ரஷ்யப்படைகள் சுற்றி வளைத்து தாக்கின.

டிச.11: ரஷ்யாவில் காகசஸ் நகரை பிடித்த ஜெர்மனி ரானுவம் அங்கிருந்து பின்வாங்கியது.

டிச.19: ஸ்டாலின் கிராடில் அகப்பட்டுக்கொண்ட தனது ரானுவத்தை மீட்க ஜெர்மனி செய்த முயற்சி தோல்வி அடைந்தது.( டிசம்பர் மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் ரஷிய யுத்தக்கைதிகளை ஜெர்மனி ரானுவம் பட்டினி போட்டுக் கொன்றது. 1942-ல் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 30 லட்ச

புதன், 11 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்:இந்திரா காந்தி சுட்டு கொலை


மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.

இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு "அம்மா!" என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர "ஆபரேஷன்" நடந்தது. இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்" என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.
இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. "பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்" என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர். அங்கு "இந்தியன் ஏர்லைன்ஸ்" விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள்.

செவ்வாய், 10 நவம்பர், 2009

ஹிட்லரின் வாழ்வும் மரணமும் ?


1945 ஏப்ரல் 30-ந்தேதி இரவு 9 மணி. "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும், அவர் மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்" என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது. ரேடியோச் செய்தியை ஹிட்லர் நேரடியாகக் கேட்டார். காதலியுடன் முசோலினியின் முடிவு, ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது. அன்றிரவு 12 மணி, பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும், எந்த நேரத்திலும், சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும், ஹிட்லருக்குத் தகவல் கிடைத்தது. ஹிட்லரின் முகம் இருண்டது. மவுனமாக எழுந்து, தன் தோழர்களுடன் கை குலுக்கினார்.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம் தெரிவித்தார். ஹிட்லரின் முடிவைக் கேட்டு, ஈவாபிரவுன் திடுக்கிடவில்லை. "வாழ்விலும் உங்களுடன் இருந்தேன். சாவிலும் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுடன் நானும் தற்கொலை செய்து கொள்வேன்" என்றாள்.
பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து, "நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம். நாங்கள் இறந்தபின், எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். எங்கள் அறையில் உள்ள கடிதங்கள், டைரிகள், என் உடைகள், என் பேனா, கண்ணாடி முதலிய பொருள்களை சேகரித்து, ஒன்று விடாமல் எரித்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றார். அறைக்கதவு சாத்தப்பட்டது. வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. ஹிட்லரும் ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும், தளபதிகளும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி: ஒரு சோபாவில், உட்கார்ந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல். அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது. அதன் நுனியிலிருந்து புகை வந்து கொண்டிருந்ததால், அவர் சற்று நேரத்துக்கு முன்தான் தன்னைச் சுட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்தது. அவருடைய வலது காதுக்கு கீழ் அரை அங்குல அளவுக்கு துவாரம் விழுந்து, அதிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
ஹிட்லர், துப்பாக்கி முனையை வாய்க்குள் வைத்து சுட்டதால்தான், குண்டு காதுக்கு அருகே துளைத்துக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று தளபதிகள் கருதினார்கள். ஹிட்லரின் வலது கரம் ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது. அந்தப்படம், ஹிட்லரின் தாயாரின் புகைப்படம். தாயின் மீது ஹிட்லர் கொண்டிருந்த பாசத்தை எண்ணி அவர் நண்பர்கள் கண்ணீர் சிந்தினர். ஹிட்லர் உடல் இருந்த சோபாவில் சாய்ந்தபடி பிணமாகியிருந்தாள் அவருடைய மனைவி ஈவா. வெள்ளைப் புள்ளிகளோடு கூடிய கருநீல "மாக்சி" உடை அணிந்திருந்தாள். அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது. எனவே அவள் சயனைடு விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.
ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலால் பொடிபொடியான ஹிட்லரின் பாதாள மாளிகை ஹிட்லர் உடலையும், ஈவா உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள். பிறகு அந்த உடல்களை அந்த அறையிலிருந்து தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். அங்கே, பெட்ரோலையும், எரிவாயுவையும் கொண்டு இரு உடல்களையும் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த ரஷியப்படையினர் ஹிட்லரைக் காணாமல் திகைத்துப் போனார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டதும், பிணம் எரிக்கப்பட்டதும் பிறகுதான் தெரிந்தது. எனினும் ஹிட்லர் சாகவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என்று நீண்ட காலம் நம்பியவர்கள் ஏராளம்!
ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவே சாப்பிடுவார்.
உலகப் போரின்போது, ஹிட்லரின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டவர், கோயபல்ஸ். 1897-ல் பிறந்த கோயபல்ஸ், 8 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயின்றவர். தத்துவத்தில் "டாக்டர்" பட்டம் பெற்றவர். சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். 1929-ல் இவர் ஹிட்லர் மந்திரி சபையில் பிரசார மந்திரியானார். உலகப்போரின்போது, புதுப்புது உத்திகளைக் கையாண்டு, ஹிட்லரின் பெயர் உலகம் முழுவதும் பரவச் செய்தார். (போரில் ஹிட்லர் தோல்வியைச் சந்தித்தபோதும், அவர் வெற்றி பெற்று வருவதாக பிரசாரம் செய்தார். இதன் காரணமாக பொய் பேசுபவர்களை "கோயபல்ஸ்" என்று வர்ணிக்கும் வழக்கம் வந்தது.) ஹிட்லர் மீது இவர் கொண்டிருந்த பக்திக்கு அளவே இல்லை. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதற்கு மறுநாள், கோயபல்ஸ் தன் மனைவியுடனும், 6 குழந்தைகளுடனும் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் 2 முதல் 12 வயது வரை உள்ளவர்கள்.

சனி, 7 நவம்பர், 2009

கென்னடி சுட்டு கொல்லப்பட்டார் .


அமெரிக்க மக்களை மட்டுல்ல, உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி. புகழின் உச்சியிலிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்தது.
கம்பீரமான தோற்றமும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட கென்னடி, அமெரிக்கர்களால் மட்டுமல்ல; உலக மக்களாலும் நேசிக்கப்பட்டார். அவர் ஆட்சியின்போதுதான் வானவெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
1962 அக்டோபர் மாதம், அமெரிக்கா அருகில் உள்ள கிïபாவில் ஏவுகணை தளம் அமைக்க ரஷியா முயன்ற போது, கிïபாவைச் சுற்றிப் போர்க்கப்பல்களை நிறுத்தி, "கடல் முற்றுகை"யிட்டு ரஷியாவின் முயற்சியை முறியடித்தார், கென்னடி. அதே மாதத்தில், இந்தியா மீது சீனா படை யெடுத்தபோது, இந்தியாவுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவினார்.
உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய கென்னடி 1964_ல் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், 1963 நவம்பர் 22_ந்தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்குச் சென்றார். மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்றபோது, ரோட்டின் இருபுறமும் திரளான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார், கென்னடி.
திடீரென்று, ஒரு கட்டிடத்தின் 6_வது மாடியிலிருந்து சீறி வந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கென்னடியின் தலையிலும், கழுத்திலும் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்தார், கென்னடி. அவரை ஜாக் குலின் தாங்கிக் கொண்டு கதறினார்.
கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்தச் சம்பவம் நடந்து விட்டது. என்ன நடந்தது என்பது கூடப் பொது மக்களில் பலருக்குத் தெரியவில்லை. காரிலிருந்த மெய்க்காவலர்கள், காரை அருகில் இருந்த ஆஸ்பத்திரியை நோக்கித் திருப்பினார்கள். அங்கு கென்னடிக்கு ஆபரேஷன் நடந்தது.
அவர் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் பெருமுயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அரை மணி நேரத்தில் கென்னடியின் உயிர் பிரிந்தது.
கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு (வயது 24) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். அவன் முன்பு கடற்படையில் பணியாற்றியவன். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக 24_ந்தேதியன்று போலீசார் வெளியே அழைத்து வந்தனர்.
ஜெயிலுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜாக் ரூபி (வயது 42) என்பவன், ஆஸ்வால்டை வெகு அருகிலிருந்து சுட்டான். குண்டு குறி தவறாமல் நெஞ்சில் பாய்ந்தது. ஆஸ்வால்டு அதே இடத்தில் செத்து விழுந்தான். ஆஸ்வால்டு கொல்லப்பட்டதால், கென்னடியை அவன் எதற்காகச் சுட்டுக்கொன்றான், அதன் பின்னணி என்ன, அவனை யாரும் தூண்டிவிட்டார்களா என்பதே தெரியாமல் போய் விட்டது.
ஆஸ்வால்டை சுட்டுக்கொன்ற ரூபியை உடனே போலீசார் கைது செய்தனர். ரூபி "இரவு விடுதி" ஒன்றின் சொந்தக்காரன். அவன் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவனுக்கு 1964 மார்ச் 14_ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவன் மனநோயாளி என்று டாக்டர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் காவலில் வைக்கப் பட்டிருந்தான். சிறையிலேயே 1967 ஜனவரி 3_ந்தேதி மரணம் அடைந்தான்.