வெள்ளி, 20 நவம்பர், 2009

வைகோவின் சாட்டையடி


இலங்கைக்கு கிடைத்த பன்னாட்டு ஆயுத உதவியால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவும் தோல்வியும் ஏற்பட்டபோது முதல்வர் கருணாநிதி மௌனமாகக் குதூகலித்தார் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் தமிழர்களின் வரலாற்றில், வேறு எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இலங்கையின் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா.ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியதுடன் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடனை இந்தியா அளித்தது. இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தன. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இன்றைக்கு மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டிருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான். ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர் பிரபாகரனைக் கொச்சைப்படுத்தி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கருணாநிதி வருந்துகிறார். மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார். இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.2009 ஈழப்போரில் பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: