செவ்வாய், 24 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு மரண தண்டனை


பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோ மீது கொலை வழக்குத் தொடரப்பட்டது. அதில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசியலில் முக்கிய இடம் பெற்றவர் பூட்டோ. ஜின்னாவுக்கு அடுத்த படியாக பெரிய தலைவராக கருதப்பட்டவர்.
பூட்டோவின் இளமை பருவம், அரசியல் வாழ்க்கை பெரும் திருப்புமுனைகளை கொண்டது. அவருடைய இறுதிகால வாழ்க்கை சோதனை மிகுந்த கண்ணீர் காவியமாக அமைந்தது. பூட்டோவின் தந்தை ஷா நவாஸ். பெரிய பணக்காரர். திவானாக இருந்தார். தாயார் ஜக்கிபாய். இந்தியப்பெண்.
பூட்டோவின் முழுப்பெயர் ஜூல் பிகார் அலி பூட்டோ. 1928_ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள `லர்கானா' என்ற ஊரில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது எல்லாம் பம்பாயில் தான். பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது பூட்டோவுக்கு வயது 19. பூட்டோ அமெரிக்காவில் கலிபோர்னியாவிலும், இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து வக்கீல் (பாரிஸ்டர்) பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் வக்கீல் தொழில் செய்த பூட்டோ அரசியலிலும் ஆர்வமாக ஈடுபட தொடங்கினார். 1958_க்கு பிறகு அவரது அரசியல் செல்வாக்கு ஓங்க தொடங்கியது. இஸ்கந்தர் மந்திரிசபையில் இடம் பெற்றார். பாகிஸ்தானில் அயூப்கான் அதிபராக இருந்தபோது, அவரிடம் பூட்டோ வர்த்தக மந்திரியாக இருந்தார். பிறகு 1963_ல் வெளிவிவகார மந்திரியானார்.
1967_ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு `மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார். அயூப்கானுக்கு எதிராக செயல்பட்டதால் பூட்டோ 1968_ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். உடனே பூட்டோ அமெரிக்காவுக்கு சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில், யாகியாகான் பாகிஸ்தான் அதிபர் ஆனார். அவரது ஆட்சி காலத்தில் 1971_ல் இந்தியாவுடன் நடந்த போரில் பாகிஸ்தான் தோற்றது. கிழக்கு பாகிஸ்தான் "வங்காளதேசம்" என்ற பெயரில் சுதந்திர நாடாகியது. இதனால், யாகியாகான் பதவி இழந்தார். அதன்பின் பூட்டோ பாகிஸ்தான் அதிபரானார். அதுவரையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முறையே இருந்து வந்தது. அதிபர் ஆன 2 ஆண்டுகளுக்குப்பிறகு, பூட்டோ ராணுவ ஆட்சி முறையை ரத்து செய்தார். பாகிஸ்தானின் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார்.
1977_ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பூட்டோவின் "மக்கள் கட்சி" 216 இடங்களில் 155 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி கிளர்ச்சி நடத்தினார்கள். இந்த கலவரத்தில் 250 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து 5_7_1977_ல் பூட்டோவுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. பூட்டோவினால் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட ஜியா_வுல்_ ஹக் இந்த புரட்சியை நடத்தி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார்.
பூட்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் தேர்தல் நடத்த ஜியா தீர்மானித்ததைத் தொடர்ந்து பூட்டோ விடுதலை செய்யப்பட்டார். தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி இருந்த பூட்டோவை, ராணுவ அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. ராவல்பிண்டி சிறையில் அடைத்தது.
தன்னுடைய அரசியல் எதிரியான அகமது கசூரி என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தந்தையை கொலை செய்ய உத்தரவிட்டதாக பூட்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது. பூட்டோவின் "மக்கள் கட்சி" தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கசூரி. முதலில் பூட்டோவின் நண்பராக இருந்த அவர், பிறகு பூட்டோவின் ஆட்சியை கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார்.
இதனால் கசூரியை தீர்த்துக்கட்ட பூட்டோ திட்டம் தீட்டினார் என்றும், 4 அதிகாரிகளிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என்றும் கூறப்பட்டது.1974_ல் கசூரியும், அவர் தந்தையும் ஒரு திருமணத்துக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த காரை நோக்கி இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. குறி தவறியதால் கசூரி உயிர் தப்பினார். அருகில் இருந்த அவர் தந்தை குண்டு பாய்ந்து இறந்தார்.
இதையொட்டி, பூட்டோ மீதும் மற்றும் ராணுவ அதிகாரிகள் முகமது அப்பாஸ், குலாம் முஸ்தபா, அரத் ஊக்பால், ராணா இஸ்திகார் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டு விசாரித்து பூட்டோவுக்கும், மற்ற 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 18.03.1978_ல் தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூட்டோ அப்பீல் செய்தார். அப்பீலை 7 நீதிபதிகள் விசாரித்து பிப்ரவரி 6_ந்தேதி தீர்ப்பு கூறினார்கள். தூக்கு தண்டனையை 4 நீதிபதிகள் உறுதி செய்தார்கள். 3 நீதிபதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். "மெஜாரிட்டி" தீர்ப்பின்படி தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நீதிபதிகள் கருத்து பிளவுபட்டு இருப்பதால், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பூட்டோ சார்பில் மீண்டும் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மார்ச் மாதம் 24_ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆயினும் தூக்குத்தண்டனையை குறைக்கலாம் என்று அதிபர் ஜியாவுக்கு நீதிபதிகள் சிபாரிசு செய்திருந்தனர். ஆனால் இரும்பு மனம் கொண்ட அதிபர் ஜியா அதை ஏற்கவே இல்லை.
இறுதியில் பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

கருத்துகள் இல்லை: