வெள்ளி, 13 நவம்பர், 2009

நீறு பூத்த நெருப்பாக ஈழ தமிழர்களின் நிலை ?


இலங்கையில் 25 ஆண்டுக்கும் மேலாக நடந்த போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கு தமிழர்களுக்கான பிரச்னை நீறு பூத்த நெருப்பாகவே தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளாக எந்த கோரிக்கைக்காக தமிழ் மக்கள் அங்கு போராடி வந்தார்களோ, அந்த கோரிக்கை கனவாக ஆகிவிட்டது.



போரின் போது, இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்பம் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக இருக்கிறது. எந்த வசதியும் இல்லாமல் முகாம்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் பலர், ஓர் ஆண்டு காலத்துக்குள் பலமுறை தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டவர்கள். ஒவ்வொரு இடத்திலும், அங்குள்ள கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ ஆரம்பிக்கும் போது, ராணுவத்தால் வலுக்கட்டாயமாக இன்னொரு இடத்துக்கு துரத்தியடிக்கப்பட்டார்கள். வீடுகளின் மேற்கூரை இருந்தால், ராணுவத்துக்கே தெரியாமல் மீண்டும் குடியேறிவிடுவார்கள் என்று கருதி, ஓட்டு வீடுகள் மற்றும் கூரை வீடுகளில் உள்ள மேற்கூரையை ஏற்கனவே இலங்கை ராணுவத்தினர் பிரித்து துவம்சம் செய்துவிட்டனர். இப்போது ஆமை வேகத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தமிழகர்கள் முகாம்களிலிருந்து அவர்கள் வசித்த இடங்களுக்கு திரும்ப அனுப்புகிறார்கள். இதுவரை 12, 420 பேர் வீடு திரும்பியிருப்பதாகதமிழக முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் தெரிவித்தார். ஆகவே இன்னும் விரைவாக குடியமர்த்தம் செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு உள்ளது.



வீடு திரும்பிய தமிழர்களுக்கு "அதிர்ச்சி' காத்திருக்கிறது. அவர்கள் வீடு, வீடாக இல்லை. அவர்கள் விட்டு சென்ற பொருட்கள் சூறையிடப்பட்டுள்ளன. அவர்கள் வாழ்ந்த தெருக்கள் அலங்கோலமாகியிருக்கின்றன. கடைகள் நாசமாகியிருக்கின்றன. அவர்களது விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. சொத்துகள் காணாமல் போய்விட்டன. சொந்தங்கள் உயிருடன் இருக்கிறார்களா... இல்லையா என்பதே தெரியாமல் மரத்துப் போன உணர்வுகளுடன் உள்ளனர். பழைய தொழில் முடக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் வாய்ப்பு இல்லை. இத்தனை சோகங்கள் அவர்களை வரவேற்றாலும், முகாம்களில் படும் நரகவேதனைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை, என்று அவர்களது மனம் தாங்கிக் கொள்கிறது. தங்களுக்கான உலகை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம் என்ற தைரியம் அங்குள்ள தமிழர்களிடம் காணப்படுகிறது. எத்தனையோ போர்க்குற்றங்களை புரிந்த இலங்கை அரசு நிம்மதியாக இருக்கிறது. அவர்கள் மீது விசாரணை இல்லை. சர்வதேச தமிழ் மக்களிடையே இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராயும் இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.



சமீபத்தில் அவர் ஓர் இதழுக்கு அளித்த பேட்டி: இலங்கையில் உள்ள சூழ்நிலை இன்னும் கடினமானதாகவே உள்ளது. ராணுவ வெற்றி அடைந்த அரசு, அங்குள்ள முகாம்களில் ஒரே இடத்தில் ஏராளமானோரை அடைத்திருப்பது ஒரு கொடுமையானதாக இருக்கிறது. இந்த முகாம்களுக்கு உள்ளே இருப்போரின் வலியும் வேதனையும் அந்த முள்வேலியைத் தாண்டி வெளியே வர முடியாத இரும்புத் திரை போல் அமைந்துள்ளது. ஏதும் மறைப்பதற்கு இல்லை என்றால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீடியாவை முகாம்களுக்குள் அனுமதிக்க வேண்டியதுதானே. போர்க் குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட வேண்டியவர். அவர் புரிந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் போனதற்கு இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானும் காரணம். இந்தியா முதலில் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது. பின்னர், அது இலங்கை அரசு பக்கம் தாவிக் கொண்டது.



இலங்கையில் தற்போதும் பயங்கரவாத தடுப்பு சட்டம் உள்ளது. இது பயங்கரவாத தடுப்பு சட்டம் அல்ல. பயங்கரவாத உற்பத்தி சட்டம். அப்பாவிகள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தாக்குதல் நடத்த உதவும் சட்டம். முன்னாள் அதிபர் புஷ் அரசு கையாண்ட கொள்கையைப் போல்... அதாவது, நீங்கள் அரசு தரப்பில் இல்லாவிட்டால், பயங்கரவாதி தரப்பில் இருக்கிறீர்கள் என்ற கொள்கையைப் போல இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது. இதைக்கூறுவதால், புலிகள் ஆதரவு நிலை என்று கருதிவிடக்கூடாது. புலிகளும் இனவாத அடிப்படையில், பயங்கரவாதம் மற்றும் நீதியற்ற நிலையில் நடந்து கொண்டார்கள். ஆயுதப் போரால்தான் தமிழ் மக்கள் அங்கு நசுக்கப்பட்டனர்.



இந்திய மக்களைப் பொறுத்தவரை இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. அதற்கு காரணம், இந்திய மீடியாக்கள் லாவகமாக விஷயத்தை மறைத்துவிட்டன. இலங்கைப் பிரச்னையை இந்திய அரசு உற்று நோக்கி வருகிறது. இங்குள்ள மாவோயிஸ்ட்கள் மீதும் இலங்கை அரசு புலிகள் மீது பின்பற்றிய பாணியை பின்பற்றும் என்று நினைத்தோம். ஆனால் தற்போதுள்ள மத்திய அரசு வேறுவிதமாக செயல்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போரில் பல்வேறு நாடுகள் சிக்கித் தவித்து வருகின்றன. ஈராக், ஆப்கன், பாகிஸ்தான், இலங்கை... தற்போது இந்தியாவும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 2010 ஜனவரிக்குள் தமிழ் மக்கள் அனைவரையும் குடியமர்த்திவிடுவோம் என்கிறது. இலங்கை அரசு. வாக்குறுதிகள் காப்பாற்றப்படாத பட்சத்தில் அங்குள்ள தமிழர்களில் பாதிப்பேர் காணாமல் போய்விடும் வாய்ப்புள்ளது.



வெளிநாடுவாழ் தமிழர்களுக்கும் மிரட்டல்: இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் மிரட்டல் கொடுக்கிறது' என்கிறார் புலம்பெயர் தமிழீழ அரசின் செய்தித் தொடர்பாளர் சதீசன் குமரன். "இலங்கை அரசு செய்த அத்தனை தவறுகளும் மறக்கப்பட்டு வரும் இந்த வேளையில், இன்னொரு விதமாக தமிழர்கள் மீது இலங்கை அதிபர் ராஜபக்ஷே தாக்குதல் தொடுத்துள்ளார்' என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



வழிக்கு கொண்டு வரமுடியுமா? புலிகளுக்கு எதிரான போரின் போது, மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கருத்துக்கள் மூலம் மக்களிடம் ஒரு புறம் செல்வாக்கைப் பெற்றுக் கொண்ட போதிலும் மறுபுறம் ஐரோப்பிய யூனியனிலிருந்து சலுகைகளை கறப்பதில் குறியாக இருக்கிறது. இலங்கை அரசு. மனித உரிமை மீறல்களால் இலங்கை அரசுக்கான சலுகைகளை ரத்து செய்வது தொடர்பாக ஐரோப்பிய யூனியன், அதன் உறுப்பு நாடுகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டிலிருந்து ஜவுளி ஏற்றுமதிக்கான சலுகைகளை இலங்கை அரசு பெற்று வருகிறது. புலிகளுக்கு எதிரான கடைசி போரில், ஈவு இரக்கமின்றி நடந்து கொண்டது, தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல், 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்களை நெருக்கடியான முகாம்களில் அடைத்துப் போட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களால் ஐரோப்பிய யூனியன் கடும் கோபத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் கூறும் விஷயங்களை கடைபிடிக்காவிட்டால், வர்த்தக சலுகைகளை 2009ம் ஆண்டுக்கு மேல் நீட்டிக்காது என்றும் தெரிகிறது. இதை ஐரோப்பிய யூனியனின் பிளாக் மெயில் என்று இலங்கை அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நிலைமையை ஆராய ஐரோப்பிய யூனியன் கோரிக்கை விடுத்த போதும் அந்த விசாரணையை நடத்த இலங்கை மறுப்புத் தெரிவித்துவிட்டது. புலிகளையும் ஒழிக்க வேண்டும், அதே நேரத்தில் ஐரோப்பிய யூனியனின் சலுகையையும் விடக்கூடாது என்பதில் அதிபர் ராஜபக்ஷே அக்கறை காட்டி வருகிறார்.



சமீபத்தில் ஐரோப்பிய யூனியனை வழிக்கு கொண்டு வர, இலங்கை அரசு நான்கு பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. இதற்கு தலைவராக பெரீஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை பார்லிமென்டில் தெரிவித்த போது, "வர்த்தக சலுகை என்ற ஆயுதத்தை காட்டி, நம்மை ஐரோப்பிய யூனியன் அச்சுறுத்தக்கூடாது' என்றார். அதே நேரத்தில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார இதழான தி எகனாமிஸ்ட் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழர்களை குடியமர்த்துவதில் அக்கறை காட்டி வருகிறோம்' என்றார். ஐரோப்பிய யூனியன் வர்த்தகத்தை தொடர்ந்து குறைத்துக் கொள்ளத் தொடங்கினால், இலங்கையில் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் பெரீஸ் கவலை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற முயற்சியை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டால், மைனாரிட்டியாக மாறிவிட்ட, தமிழர்களின் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வருவதில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை: