பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார். அவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை, அதிபர் ஜியா நிராகரித்தார்.
தன் அரசியல் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
7 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள சிறையில் பூட்டோவை அடைத்து வைத்து இருந்தார்கள். இந்த அறைக்குள் சூரிய வெளிச்சமே தெரியாது. இதை பூட்டோவின் நெருங்கிய நண்பரான பிர்ஓடா என்பவர் பூட்டோவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பூட்டோ உணவு எதையும் சாப்பிடவில்லை. தேன் மட்டும் சாப்பிடுகிறார். சில நேரம் காபி குடிக்கிறார். இதனால் பூட்டோ உடல் எலும்பு கூடு போல இருக்கிறது. முகச்சவரம் செய்யாததால் தாடி வளர்ந்து இருக்கிறது" என்று தெரிவித்தார். விசாரணைக்காக ஒருமுறை பூட்டோ கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது கண் கலங்கியபடி காட்சி அளித்தார்.
"இந்த நாட்டுக்கு நான் எந்த தீமையும் செய்யவில்லை. என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்" என்று அவர் முறையிட்டார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதை ரத்து செய்யும்படி அதிபருக்கு கருணை மனு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை பூட்டோ ஏற்கவில்லை.
கருணை மனு தாக்கல் செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆகவே கருணை மனு தாக்கல் செய்யமாட்டேன்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு தனது உறவினர்களும், நண்பர்களும் தனக்காக கருணை மனு கொடுக்கக்கூடாது என்றும் தடுத்துவிட்டார்.
ஆனால் பூட்டோவின் அக்காள் முனுவார் பூஸ்லாம் என்பவர் ஜியாவுக்கு கருணை மனு அனுப்பினார். அதனை கேள்விப்பட்ட பூட்டோ மிகவும் கோபம் அடைந்தார். சாகும் வரை அவர் தனது உறுதியில் இருந்து மாறவில்லை. தூக்கு மேடை ஏற அவர் அஞ்சவில்லை.
பூட்டோவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் அமீர் பேகம். 2_வது மனைவி பெயர் நசரத் இக்பாகனி. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். பூட்டோவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன்கள் லண்டனில் தங்கி படித்து வந்தனர்.
பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதும் மனைவி நசரத்தும், மகள் பெனாசிரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள். இதனால் இந்த 2 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
தூக்கில் போடப்படுவதற்கு முன்தினம் பூட்டோவை கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது.
அதன்படி அவர்கள் 3_4_1979 அன்று சந்தித்தனர். இதற்காக இருவரும் போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமாக பூட்டோவை சந்திக்க 1 மணி நேரம் தான் கொடுக்கப்படும்.
ஆனால் இது கடைசி சந்திப்பு என்பதால் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பூட்டோவுடன் நசரத்தும், பெனாசிரும் 3 மணி நேரம் தங்கி இருந்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் சந்திப்பதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனுக்குள் இருந்த நசரத், பெனாசிர் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தனர். பூட்டோவை பார்க்கச்சென்ற குடும்பத்தினர் கதறி அழுதபோது, "எனக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். தூக்கு மேடை ஏற நான் பயப்படவில்லை" என்று பூட்டோ கூறினார்.
பூட்டோவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுமே அவர் உயிரைக் காப்பாற்ற உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அனுப்பிய கடிதங்களை அதிபர் ஜியா பார்க்கவே இல்லை. பாகிஸ்தானின் வெளிநாட்டு இலாகா அலுவலகத்திலேயே அந்த கடிதங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
பூட்டோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஜியா குறியாக இருந்தார். பூட்டோ தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டபின், செவ்வாய்க்கிழமை இரவும் சில வெளிநாட்டு தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ரஷியா, சுவீடன், சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாட்டுத் தலைவர்கள் கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அவசர செய்திகளை அனுப்பி வைத்தனர். பிரான்சு ஜனாதிபதி அவசர தந்தி அனுப்பினார். ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே அதிபர் ஜியா அடியோடு புறக்கணித்துவிட்டு பூட்டோவை தூக்கில் போட்டார்.
தூக்கில் போடப்பட்டபோது பூட்டோவுக்கு 51 வயது தான். பூட்டோவை தூக்கில் போடப்பட்ட செய்தியையும் பாகிஸ்தான் உடனடியாக அறிவிக்கவில்லை. உடலை அடக்கம் செய்தபின்பு 30 நிமிடம் கழித்து பகல் 11_30 மணிக்கே ரேடியோ மூலம் அறிவித்தது.
பொதுவாக, சூரியன் உதிக்கும் நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் பூட்டோவை இரவோடு இரவாக தூக்கில் போட்டு உடலை விடிவதற்கு முன்பே சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டனர். உடல் கொண்டுபோகப்பட்ட விமானத்தில் ராணுவத்தின் காவல் பலமாக இருந்தது.
தூக்கில் போடப்படுவதற்கு முன்னால் பூட்டோ குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாக அவர் சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாடி வளர்ந்து இருந்தது. சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிலில் கையெழுத்து போடும்படி அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அவர் கையெழுத்துப் போட்டார்.
பிறகு, பூட்டோவின் கைகளை பின்புறமாக கட்டினார்கள். அதன் பின் பூட்டோ தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை அதிகாரிகள், ஒரு ராணுவ அதிகாரி, ஒரு மாஜிஸ்திரேட்டு ஆகியோர் உடன் சென்றனர். இந்திய நேரப்படி அதிகாலை 2_30 மணிக்கு பூட்டோ தூக்கில் போடப்பட்டார்.
பூட்டோவை தூக்கில் போட்டவரின் பெயர் _ தாரா மஷியா. இவர் பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர். தூக்குப்போடுவதையே பரம்பரை தொழிலாக செய்து வந்தவர். அவருக்கு கூலியாக 25 ரூபாய் கொடுக்கப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு ஒரு ராணுவ லாரி சிறைச்சாலைக்குள் சென்றது. உடனடியாக பூட்டோ உடலை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றது. பூட்டோ உடல், சிந்து மாநிலத்தில் உள்ள சுக்கூர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்துக்கு கொண்டு போகப்பட்டது.
பூட்டோ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிந்து நதிக்கரையில் உள்ளது. பூட்டோவின் தந்தை ஷாநவாஸ் உடல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பக்கத்திலேயே பூட்டோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கம் நடந்த இடத்துக்கு முதல் மனைவி அமீர் பேகம் வந்திருந்தார். அவர் முஸ்லிம் சம்பிரதாயப்படி முகம் முழுவதையும் மூடி `பர்தா' அணிந்திருந்தார். உடல் அடக்கம் முடிந்ததும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தார்கள். பூட்டோவை தூக்கில் போட்டதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இங்கிலாந்து பிரதமர் கல்லகன் இதுபற்றி கூறியதாவது:-
"பூட்டோவை தூக்கில் போட்டது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கும்படி 3 முறை வேண்டுகோள் விடுத்தேன். அதை அலட்சியம் செய்துவிட்டனர்."
இவ்வாறு கல்லகன் கூறினார்.
இந்திரா காந்தி கூறியதாவது:-
"இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பூட்டோவை கொல்ல வேண்டாம் என்று உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஜியா மதிக்காமல் நடந்து கொண்டார். பூட்டோவை தீர்த்துக்கட்டும் இந்த முடிவுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் காரணமாகும்.
பூட்டோவின் மனைவி நசரத்துக்கும், மகள் பெனாசிருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1972_ல் சிம்லாவில் பெனாசிர் என்னை சந்தித்து உரையாடியதை நினைத்து கண் கலங்குகிறேன். பாகிஸ்தான் மக்களுக்கும் என் துயரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு இந்திரா காந்தி கூறியிருந்தார்.
ஆனால் மலேசிய முன்னாள் பிரதமரான துங்கு அப்துல் ரகுமான், ஜியாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். "அரசியல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் பிரதமர் பூட்டோ. தேசத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்பவர்களுக்கு இது ஒரு பாடம்" என்று அவர் தெரிவித்து இருந்தார்.
பூட்டோ சிறையில் இருந்தபோது தன் வாழ்க்கை குறிப்பை எழுதினார். அது பூட்டோவின் மரண சாசனம் போல் அமைந்துள்ளது. அதில் பூட்டோ கூறியிருந்ததாவது:-
"என் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது அபாண்டமான குற்றச்சாட்டு. சிறையில் வாடி வதங்கி தூக்கு மேடையை சந்திப்பதற்காக நான் பிறந்தவன் அல்ல. ஆயினும் ஒரு நன்றி கெட்ட துரோகியினால் (ஜியா) நான் இன்று தூக்கு மேடையை சந்திக்க இருக்கிறேன்.
நான் அரசியல்வாதி என்பதைத்தவிர, கவிஞன், புரட்சிக்காரன். இப்படியே இவ்வளவு நாட்களும் வாழ்ந்தேன். இனி என் உடலில் இருந்து கடைசி மூச்சு பிரியும்வரை அப்படியே வாழ்வேன்."
இவ்வாறு பூட்டோ குறிப்பிட்டு இருந்தார்.
ராவல்பிண்டியில் பூட்டோ ஆத்மா சாந்தியடைய ஒரு பெரிய பிரார்த்தனைக்கூட்டம் நடந்தது. "லியாகத்பாக்" பூந்தோட்டத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அந்த வழியாகப் போன 3 பஸ்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
பூட்டோ தூக்கிலிடப்பட்ட ராவல்பிண்டி சிறைச்சாலை அருகேயும் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்களும், பெண்களும் மாரடித்து அழுதபடி சிறைச்சாலையை நோக்கி சென்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ்களையும், லாரிகளையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். 6 பஸ்கள் அடியோடு எரிந்து சாம்பலாயின. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியிலும் கலவரம் நடந்தது. கராச்சி நகர எல்லையில் உள்ள "இப்ராகிம் ஹைதிர்" என்ற இடத்தில் பூட்டோ ஆதரவாளர்கள் கூடினார்கள்.
தூக்கிலிடப்பட்ட பூட்டோவுக்காக தொழுகை நடத்தி இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஜியா_வுல்_ஹக்குக்கு எதிராகவும், ராணுவ அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினார்கள்.
பூட்டோ தூக்கிலிடப்பட்டபோது நடந்த சம்பவங்கள் பற்றி பாகிஸ்தான் பத்திரிகைகள் பலவித தகவல்களை வெளியிட்டன. அதில் ஒரு தகவல் வருமாறு:-
பூட்டோ தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டவுடன் மஷியா அவரது இரு கால்களையும் கட்டி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டினான். பூட்டோ கடைசியாகப் பேசினார். "இறைவா! எனக்கு உதவி செய்! நான் நிரபராதி!"
பூட்டோ கடைசியாக இந்த வார்த்தைகளை உச்சரித்தவுடன் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு "சிக்னல்" கொடுக்கப்பட்டது. உடனே பூட்டோவின் காலடியில் இருந்த பகுதி விலகி கீழே சென்றது. அவர் பிணமாக தொங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக