சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் ஒரு பங்களாவை வாங்கி ஸ்டூடியோவாக மாற்றி அமைத்தார். "இந்தியா பிலிம் கம்பெனி" என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
டி.பி.ராஜலட்சுமி, "சீமந்தனி" என்ற படத்தில் நடித்தார். படப்பிடிப்பின்போது அவரை அமெரிக்க டைரக்டர் மைக்கேல் ஓமலேவ் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட படம் இது.
மகாபாரதத்தில் இருந்து "கீசக வதம்" என்ற கதையை தேர்வு செய்து, படத்தயாரிப்பில் இறங்கினார். படத்தின் கேமராமேன், டைரக்டர், எடிட்டர் எல்லாமே அவர்தான்.
37 நாட்களில் படம் முடிவடைந்து, 1916_ம் ஆண்டு ரிலீஸ் ஆகியது. தென்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் (ஊமைப்படம்) இதுதான்.
"கீசக வதம்" தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் பர்மா, மலேயா, முதலிய வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது. ரூ.35 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.50 ஆயிரம் வசூலித்துக்கொடுத்தது. அதாவது நடராஜ முதலியாருக்கு கிடைத்த லாபம் ரூ.15 ஆயிரம். இது அக்காலத்தில் பெரிய தொகை.
கீசக வதத்தைத் தொடர்ந்து "திரவுபதி வஸ்திராபரணம்" என்ற படத்தை தயாரித்தார், நடராஜ முதலியார். இதுவும் மகாபாரதத்தின் ஒரு பகுதிதான். அதாவது, திரவுபதியை துச்சாதனன் துகில் உரியும் காட்சியை மையமாகக் கொண்ட படம்.
இந்தக் காட்சியில் நடிக்க தமிழ்ப்பெண்கள் யாரும் முன்வரவில்லை. "அம்மாடி! எங்கள் சேலையை துச்சாதனன் உருவினால் எங்கள் மானம் போய்விடும்! நாங்கள் நடிக்க மாட்டோம்" என்று ஓட்டம் பிடித்தனர்.
இதனால் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை திரவுபதியாக நடிக்க வைத்தார், நடராஜ முதலியார்.
1918_ம் ஆண்டில் வெளிவந்த இந்தப்படமும் வெற்றிகரமாக ஓடியது.
பின்னர் லவகுசா (1919), ருக்மணி சத்யபாமா (1920), மார்க்கண்டேயா (1922), மயில் ராவணா (1923) ஆகிய படங்களை இவர் தயாரித்தார்.
தமிழ்நாட்டில், முதல் திரைப்படத்தை (ஊமைப்படம்) தயாரித்த ஆர்.நடராஜ முதலியார். இந்நிலையில், அவருடைய ஒரே மகன் இறந்து போனார். சினிமா ஸ்டூடியோவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மனக் கஷ்டமும், பண நஷ்டமும் ஏற்பட்டு, படத்தொழிலை விட்டு நடராஜ முதலியார் விலகினார். மீண்டும் மோட்டார் தொழிலில் ஈடுபட்டார்.
சினிமாத் தொழிலின் ஆரம்ப காலத்தில் சாதனை புரிந்த நடராஜ முதலியார், பிற்காலத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டு காலமானார்.
சென்னையில் முதல் சினிமா தியேட்டரை கட்டிய வெங்கையா, திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட விரும்பினார். அவருக்கு துணை புரிய அவர் மகன் பிரகாஷ் முன்வந்தார். தந்தையின் யோசனைப்படி, லண்டனுக்குச் சென்று திரைப் பட நுணுக்கங்களை கற்று வந்தார்.
பின்னர், சென்னை புரசைவாக்கத்தில் தன் தந்தையின் "ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்" பிலிம் கம்பெனிக்காக ஒரு சினிமா ஸ்டூ டியோவை ரூ.1 லட்சம் செலவில் அமைத்தார். சென்னையில் அமைக்கப்பட்ட முதல் ஸ்டூடியோ இதுதான். இந்த ஸ்டூடியோ வேப்பேரியில் ஆரம்பித்து, கீழ்ப்பாக்கம் (தற்போது சங்கம் தியேட்டர் இருக்கும் இடம் வரை) பரந்து விரிந் திருந்தது!
இந்த ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் "பீஷ்ம பிரதிக்ஞா". (பீஷ்மரின் சபதம்)
இந்தப் படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை பிரகாஷ் கவனித்தார்.
1922_ம் ஆண்டு ரூ.12 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், ரூ60 ஆயிரம் வசூலித்துக் கொடுத்தது.
முதல் படத்தில் வெற்றி கண்ட பிரகாஷ், பின்னர் தயாரித்த படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் ஸ்டூடியோவை மூடினார், பிரகாஷ்.
"பீஷ்ம பிரதிக்ஞா" படத்தில் கிருஷ்ணன் வேடத்தில் நடித்தவர் ஏ.நாராயணன். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். அவர் பின்னர் பட அதிபராக உயர்ந்தார். தர்ம பத்தினி (1929), ஞானசவுந்தரி (1929), கஜேந்திர மோட்சம் (1930), கருட கர்வ பஸ்கம் (1930), கோவலன் (1930) .... என்று வரிசையாக பல படங்களைத் தயாரித்தார். சென்னையின் முதல் ஸ்டூடியோவை அமைத்த பிரகாஷ் இவருடைய நண்பர். எனவே, சில படங்களை டைரக்ட் செய்யும் வாய்ப்பை பிரகாஷ் பெற்றார்.
இந்த சமயத்தில்தான், ஊமைப்பட யுகம் முடிவடைந்து, பேசும் பட யுகம் தொடங்கியது.
இந்தியில் முதல் பேசும் படத்தை தயாரித்த பம்பாய்க்காரர் அர்தேஷ் இரானி, பிற மொழிகளிலும் படம் தயாரிக்க விரும்பினார்.
தமிழிலும், தெலுங்கிலும் படம் தயாரிக்க முடிவு செய்த அவர், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கத் தீர்மானித்தார்!
இந்தியில் முதல் பேசும் படத்தையும் ("ஆலம் ஆரா") தமிழில் முதல் பேசும் படத்தையும் ("காளிதாஸ்") தயாரித்த அர்தேஷ் இரானி.
எப்படியென்றால், தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று விளங்கிய டி.பி.ராஜலட்சுமியை கதாநாயகி வேடத்துக்கு ஒப்பந்தம் செய்தார். தெலுங்கு நடிகர் ஒருவர் தான் கதாநாயகன்!
கதாநாயகி தமிழில் பேச, கதாநாயகன் தெலுங்கில் பேசினார்!
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் முதல் படம் "காளிதாஸ்"தான். படத்தை டைரக்ட் செய்தவர் எச்.எம். ரெட்டி.
1931_ம் ஆண்டு அக்டோபர் 31_ந்தேதி, சென்னையில் "கினிமா சென்ட்ரல்" தியேட்டரில் "காளிதாஸ்" ரிலீஸ் ஆகியது. முதல் தமிழ் பேசும் படத்தைக் காண, ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
(கினிமா சென்ட்ரல்" தற்போது "முருகன் டாக்கீஸ்" என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்தியாவின் முதல் பேசும் படமான "ஆலம் ஆரா"வும் இங்குதான் திரையிடப்பட்டது.)
புராணத்தில் இடம் பெற்றுள்ள மகாகவி காளிதாஸ் கதை தான், இப்படத்தின் கதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக