ஐகோர்ட் வளாக மோதல் சம்பவம்; 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் பயங்கர மோதல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தானாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கையும் எடுத்தது. இதற்கிடையில், 'போலீஸ் அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்வது அரசைப் பொறுத்தது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டையே அணுகுமாறு உத்தரவிட்டது. தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வக்கீல் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதியை, ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே நியமித்தார். இந்த வழக்கில் 20 நாட்களாக விசாரணை நடந்தது. சம்பவத்தின் போது, எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை 'சிடி'க்களில் பதிவு செய்து நீதிபதிகள் முன் போலீசாரும், வக்கீல்களும் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கின் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் 'டிவிஷன் பெஞ்ச்', கடந்த 7ம் தேதி தள்ளி வைத்தது. பரபரப்பான இந்த வழக்கில், நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்', இன்று உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் தங்களது உத்தரவில்; சம்பந்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த கமிஷனரும் தற்போதைய சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியுமான ராதாகிருஷ்ணன் , கூடுதல் கமிஷனராக இருந்த விஸ்வநாதன் ( தற்போது டில்லியில் பணியாற்றுகிறார் ) , துணை கமிஷனராக இருந்த பிரேமானந்தன்சின்கா , இணை கமிஷனராக இருந்த ராமசுப்பிரமணியன் ஆகிய 4 பேர் தான் முழுப்பொறுப்பு ஆவர். அந்நாளில் நடத்தப்பட்டது நீதித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் . அந்நாளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் கோர்ட்டை அவமதித்தாகவும் கருதப்படுகிறது. வக்கீல்கள் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை தொடரலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக