ஞாயிறு, 13 டிசம்பர், 2009
சூரியனை நோக்கி சுழலும் வீடு
வியாழன், 12 நவம்பர், 2009
முதல் விண்வெளி ஓட்டல் 2012ல் திறப்பு

பார்சிலோனா, : உலகின் முதல் விண்வெளி ஓட்டல் கேலாக்டிக் சூட், 2012ல் திறக்கப்படுகிறது. ரூ.14,100 கோடியில் அமைக்கப்படும் அந்த ஓட்டலில் 3 நாள் தங்க கட்டணம் ரூ.20.7 கோடி. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட். இவர் கேலாக்டிக் சூட் என்ற பெயரில், விண்வெளியில் சொகுசு ஓட்டல் அமைப்பதில் ஈடுபட்டுள்ளார். 2012ல் அதை திறக்க திட்டமிட்டு உள்ளார். விண்வெளி ஓட்டல் அமைக்க ரூ.14,100 கோடி செலவிடப்படுகிறது. கேலக்டிக் சூட் திறக்கப்பட்டதும், அங்கு 3 நாட்கள் தங்க ரூ.20.7 கோடி கட்டணம் செலுத்த வேண்டும்.
முன்பதிவு செய்வோருக்கு, பயண தினத்துக்கு 8 வாரங்கள் முன்பிருந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.ஒவ்வொரு முறையும் 4 பேர் ஓட்டலுக்கு செல்லலாம். அவர்களுடன் 2 விண்வெளி வீரர்கள் வருவார்கள். பூமியில் இருந்து 450 கி.மீ. உயரத்தில் அமையும் ஓட்டல் என்பதால், பயணிகள் மிதக்க வேண்டியிருக்கும். எனவே, விண்வெளி வீரர்களுக்கான வெல்க்ரோ உடைகள் தரப்படும். அதை அணிந்து ஓட்டல் அறைகளின் சுவரைப் பிடித்து ஸ்பைடர்மேன் போல விருந்தாளிகள் நகரலாம். ஓட்டலை ராக்கெட் மூலம் அடைய ஒன்றரை நாள் ஆகும். விண்வெளி ஓட்டல், மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில் சுற்றும். அதில் 80 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை சுற்றி வரலாம். அதன்படி 24 மணி நேரத்தில் சூரியன் தோன்றி மறைவதை 15 முறை பார்க்கலாம். விண்வெளி ஓட்டலில் தங்க 200 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். www.galactic suite.com என்ற இணையதளம் மூலம் 43 பேர் முன்பதிவு செய்து விட்டனர்.
வியாழன், 29 அக்டோபர், 2009
யாஹுவை ஜிமெயில் முந்தியது

இந்தியாவில் இமெயில் பயன்பாட்டில் யாஹூவை பின்னுக்குத் தள்ளி ஜிமெயில் முன்னுக்கு வந்துள்ளது. இதுவரை மிகவும் விசுவாசத்துடன் யாஹூ மெயிலைப் பயன்படுத்தி வந்த பலர் ஜிமெயிலுக்குத் தாவி உள்ளனர். வைஸி சென்ஸ் (ViziSense) என்ற ஆன்லைன் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இப்போது அதிகம் பயன் படுத்தப்படும் இமெயில் கிளையண்ட்டாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் பேர்களுக்கும் மேலாக ஜிமெயிலை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற மாதம் வரை யாஹூ தான் முதல் இடத்தில் இருந்து வந்தது.
யாஹூ மெயிலின் நேயர்கள் எண்ணிக்கை இப்போது ஒரு கோடியே 68 லட்சமாகும். சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் இதன் வாடிக்கையாளர்கள் 8% குறையத் தொடங்கினர். அதே நேரத்தில் ஜிமெயில் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3% அதிகரிக்கத் தொடங்கியது. அக்டோபரின் முதல் வாரத்திலேயே ஜிமெயில் முதல் இடத்திற்கு வந்தது. அதே போல விண்டோஸ் லைவ் மெயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி 8% ஆகும்.
ரீடிப் மெயில் 62 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுடன் இயங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலக அளவில் யாஹூ மெயில் இடத்தை ஜிமெயில் பிடிக்க இன்னும் சில மாதங்களாகலாம். ஏனென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் லைவ் மெயில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்குள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. எனவே யாஹூவும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் மெயிலும் ஏதேனும் அதிரடியான மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு வரவில்லை என்றால், நிச்சயம் உலக அளவில் ஜிமெயில் முதல் இடத்தைப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இதனால் தான் அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவின் பிரபலமான ஆங்கில நாளிதழில் யாஹூ ஒரு முழுப் பக்க விளம்பரத்தினை க் கொடுத்தது. தன்னிடம் விசுவாசமாக உள்ள மெயில் பயனாளர்களைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள யாஹு எடுத்த முயற்சியே இது என்று இந்தத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் எண்ணுகின்றனர்.
செவ்வாய், 6 அக்டோபர், 2009
நானோ தொழில் நுட்பம்
| அடுத்த 5 ஆண்டுகளில் நானோதொழில்நுட்ப துறையில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு - ஐஐடி தலைவர் | | | |
| | |
| சென்னை, அடுத்த 5 ஆண்டுகளில் நானோதொழில்நுட்பத் துறையில் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறினார். சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் நிறுவனமான அறிவியல் நகரம் அமைப்பானது கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நானோதொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான 4 நாள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் தொடக்கவிழா அறிவியல் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கான்பூர் மற்றும் ராஜஸ்தான் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.அனந்தகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:- நானோதொழில்நுட்பம் அனைத்து துறைகளையும் ஆக்கிரமிக்கக் கூடியதாக உருவாகி வருகிறது. அறிவியல் துறையில் எதிர்காலத்தில் வேறொரு புதிய துறை உருவாக வாய்ப்பு இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது. அதிக சக்திவாய்ந்த பொருட்களை மிகச்சிறியதாக உருவாக்குவதுதான் நானோதொழில்நுட்பத்தின் அடிப்படை ஆகும். 1960-களில் கம்ப்ïட்டர் என்றால் ஒரு பெரிய அறை அளவுக்கு இருந்தது. ஆனால், இன்று அதன் உருவம் மேஜை மீது வைக்கக்கூடிய அளவுக்கு சிறிதாக்கப்பட்டுவிட்டது. செயல்திறன் பலமடங்கு கூடியிருக்கிறது. செல்போன் வந்தபோது அது ஒன்றரை கிலோ எடை கொண்டதாக இருந்தது. ஆனால், இன்று அதிக செயல்திறனுடன் மிகச்சிறிய அளவிலான செல்போன்கள் வந்துவிட்டன. தற்போது சென்னை நகரின் முக்கிய பிரச்சினையாக கார் பார்க்கிங் பிரச்சினை இருந்து வருகிறது. எதிர்காலத்தில் காரை பைகள் போன்று கைகளில் மடக்கி வைத்துக்கொண்டு, பின்னர் மீண்டும் அதை விரித்துவிட்டு செல்லக்கூடிய அளவில் கார்கள் வடிவமைக்கப்படும். இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? என்று தற்போது சிரிக்கக்கூடியதாக கூட தோன்றலாம். ஆனால் எதிர்காலத்தில் நானோதொழில்நுட்பம் காரணமாக இது உண்மையில் நடக்கும். நானோ என்ற கிரேக்க வார்த்தைக்கு குள்ளம் என்று பொருள். நானோ அளவுகோலை 100 கோடியில் ஒரு பங்கு என்று குறிக்கிறார்கள். அந்த காலத்தில் தமிழில் கீழ்க்காணி, கீழ்முந்திரி, இம்மி அளவு, அடிசாரம் என்றெல்லாம் அளவுகோல்கள் இருந்துள்ளன. கீழ்க்காணி என்றால் 25 ஆயிரத்து 600-ல் ஒரு பங்கு. கீழ்முந்திரி என்பது ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு ஆகும். இதேபோல், இம்மி அளவு என்றால் 10 லட்சத்து 75 ஆயிரத்து 200-ல் ஒரு பகுதி. அடிசாரம் என்பது 18 லட்சத்து 38 ஆயிரத்து 400-ல் ஒரு பங்கு ஆகும். இவ்வளவு மிகச்சிறிய அளவுகோல்களை தமிழர்கள் எதற்காக பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மருந்துகள் தயாரிக்கும்போது இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுகுறித்து எல்லாம் ஆய்வு செய்யலாம். இவ்வாறு அனந்தகிருஷ்ணன் கூறினார். தொடக்கவிழா முடிவடைந்த பிறகு கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் அனந்தகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், "தகவல் தொழில்நுட்பத் துறையில் எப்படி 10 லட்சம், 20 லட்சம் என்று வேலைவாய்ப்புகள் ஏற்பட்டதோ அதைப் போன்று நானோதொழில்நுட்ப துறையிலும் அடுத்த 5 ஆண்டுகளில் லட்சக்கணக்கிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஆய்வக வசதிகளை மத்திய-மாநில அரசுகளும், தனியார் துறையினரும் செய்துகொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். இந்த 4 நாள் பயிற்சி முகாமில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் படிக்கும் முதல் ஆண்டு எம்.எஸ்சி. இயற்பியல் மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு நானோதொழில்நுட்பம், நானோஎலக்ட்ரானிக்ஸ், நானோமெடிசின், நானோகெமிஸ்ட்ரி உள்ளிட்டவை குறித்து நிபுணர்கள் விளக்கிக் கூறுவார்கள். அவை தொடர்பான ஆய்வு மையங்களையும் மாணவ-மாணவிகள் பார்வையிடுவார்கள். |
ஞாயிறு, 4 அக்டோபர், 2009
மரணத்தை வெல்ல முடியுமா ?
லண்டன் : இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.
தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும். முடிவில் மரணமே ஏற்படாமல் செய்யவும் முடியும், என்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி ரே குர்ஸ்வீல்.ரத்தத்தில் உள்ள செல்களின் பரப்பளவு கொண்ட "நானோ போட்' என்ற பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நானோபோட்டை பயன்படுத்தி கட்டியை அழிக்கலாம்; உடம்பில் துளையிடாமலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்; ரத்தம் உறைவதை தடுக்கலாம்.
இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் மரணமே ஏற்படாதவாறு செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தினால் மூளையின் திறனையும் அதிகரிக்க செய்ய முடியும். ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்தை முழுவதுமாக படிக்கவும் முடியும்.நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை கண்களும், செயற்கை உறுப்புகளும் கூட உருவாக்க முடியும், என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ரே குர்ஸ்வீல் தெரிவித்துள்ளார்.
