தொடர்ச்சி ...................
தமிழக தனியார் மருத்துவ சேவைத்துறையின் வரலாறு என்பது வெளிநாட்டு மிசனரிகள்,உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,தனிநபர்களின் பங்களிப்போடு ஆங்கிலேயரியின் ஆட்சியிலேயே துவங்கியது.வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ மனை,திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சி.எப்.மருத்துவமனை,சேலம் மாவட்டம் டேனிஷ் பேட்டையில் உள்ள டேனிஷ் மிசன் மருத்துவமனை,
திருச்சியில் உள்ள (குழந்தைகளுக்கான ) அமெரிக்கன் ஆஸ்பத்திரி,போன்றவை குறைவான கட்டணத்தில் நெடுங்காலமாக மருத்துவ சேவை ஆற்றி வருகின்றன.அதனையடுத்து தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள்,பல்வேறு அறக்கட்டளைகள் ஆங்காங்கே மருத்துவமனைகள் துவக்கி, மருத்துவ சேவைகளை பரவலாக வழங்க ஆரம்பித்தன.
மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை அதற்கு ஒரு முக்கிய எடுத்துகாட்டு.இது தவிர இந்திய மருத்துவ முறைகளான சித்த வைத்தியம்,ஆயுர்வேதம், ஹோமியோபதி,யுனானி,போன்றவையும் கிராமப்புற மக்களின் உடல் நலனில் பெரிதும் பங்காற்றி வந்திருக்கின்றன.இன்றும் அது தொடர்கிறது.
இது போன்ற அரசு,தனியார்,தொண்டு நிறுவனங்கள்,பரம்பரை வைத்தியர்கள் ஆகியோரின் கூட்டு சேவை காரணமாக தமிழகத்தில் கொள்ளை நோய்கள்,பேறுகால உயிர் இழப்புகள் போன்றவை பெருமளவு தவிர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.
இதுவெல்லாம்,ஒருபுறமிருக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓசையின்றி ஒரு மருத்துவப் புரட்சிக் காண வித்து ஊன்றப்பட்டது.நாட்டின் பெருமை மிகு கல்வி நிறுனங்களும்,தமிழகத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்து வெளிவந்த பட்டதாரிகளும் சொந்தமாக மருத்துவமனைகளை உருவாக்கி உழைப்பை செலுத்த ஆரம்பித்தார்கள்.
அதற்கடுத்து நடந்ததெல்லாம் அதிசயம்தான். 1983 ல் சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டியால் ஆரம்பிக்கப்பட்ட " அப்பல்லோ " மருத்துவமனை இன்று ஆலமரமாக விழுது விட்டு நாட்டின் மிகப்பெரிய மருத்துவ குழுமமாக உருவாகியிருக்கிறது. 1985 ல் ராமசாமி உடையாரால் துவக்கப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தின் மருத்துவமனை இன்று நாட்டின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று. 20 கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் தொலை மருத்துவம் மூலம் இலவச சேவைகளை இம்மருத்துவமனை வழங்கி வருகிறது.