திங்கள், 16 நவம்பர், 2009

பறக்கும் கார் அமெரிக்காவில் 2011ல் அறிமுகம்


வாஷிங்டன் : சாலையில் ஓடுவதுடன், வானில் பறக்கும் வசதி கொண்ட பறக்கும் கார், அமெரிக்காவில் 2011ம் ஆண்டில் அறிமுகமாகிறது. அதன் விலை ரூ.1 கோடி. சாலையில் ஓடக்கூடிய, அதேநேரத்தில் வானிலும் பறக்கும் வசதி கொண்ட காரை அமெரிக்க நிறுவனமான டெர்ராப்யூஜியா தயாரித்து வருகிறது. அதற்கு Ôடிரான்சிஷன் ரோடபிள் ஏர்கிராப்ட்Õ என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதன் மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு விட்டாலும், பல கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. எனவே, எல்லா சோதனைகளிலும் வெற்றி கிடைத்த பிறகு, அமெரிக்க அரசின் அனுமதி பெற்றதும் 2011ல் பறக்கும் கார் அறிமுகமாக உள்ளது. சிறியரக ஸ்போர்ட் ஏர்கிராப்ட் மாடலில் உள்ள பறக்கும் காரை அமெரிக்காவில் ஓட்ட, விளையாட்டுக்கான பைலட் உரிமம் போதுமானது. சாலையில் ஓடும்போது அதன் இறக்கைகள் இருக்குமிடம் தெரியாமல் மடிக்க முடியும். மீண்டும் வானில் பறக்கத் தயாராகும்போது 30 விநாடிகளுக்குள் இறக்கைகளை விரியச் செய்யலாம். பறக்கும் காராக இருந்தாலும், விமான கட்டுப்பாட்டு அறை அனுமதி பெற்று, விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகவே வானில் பறக்க அனுமதிக்கப்படும். எனவே, விமான நிலையத்துக்கு சாலையில் சாதாரண கார் போல இதை ஓட்டி வரலாம். பிறகு, ஓடுபாதையில் இருந்து வானில் பறக்கலாம். செல்ல வேண்டிய இடத்தின் விமான நிலையத்தில் தரையிறங்கி, மீண்டும் சாலையில் அவரவர் இடத்தை அடையலாம். டிரைவர் கம் பைலட் தவிர ஒரு பயணி மட்டுமே இந்தக் காரில் பயணம் செய்ய முடியும். மோசமான வானிலையால் விமானங்கள் பறக்க முடியாத நேரத்திலும் இந்தக் காரில் பறக்கலாம்.