வெள்ளி, 6 நவம்பர், 2009

சென்னையில் ரூ.2000 கோடியில் 'கிரீன் பீல்ட் ஏர்போர்ட்'



தமிழகத்தின் தலைநகரான சென்னை, கடந்த 10 ஆண்டுகளாக அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, புதிய தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. மேலும், பல நிறுவனங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.



திரிசூலத்தில் தற்போது இயங்கும் சர்வதேச விமான நிலையத்தை 1,800 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக தமிழக அரசு 1069 ஏக்கர் நிலத்தை இலவசமாக தந்துள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய உள்நாட்டு, பன்னாட்டு முனையம், நவீன கார்கோ காம்ப்ளக்ஸ், அடுக்குமாடி கார் பார்க்கிங், இரண்டாவது ஓடுதளம் ஆகியவற்றை அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், சென்னையில் விமான போக்குவரத்து தேவையை சமாளிக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே "கிரீன்பீல்ட் ஏர்போர்ட்' அமைக்கும் திட்டமும் உள்ளது. இதற்காக, 3,486 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 2,000 கோடி ரூபாய் செலவில் இங்கு "கிரீன்பீல்ட் ஏர்போர்ட்' அமைய உள்ளது. முதலில், இத் திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையமே செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதற்காக பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன.



ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்ட் ஏர்போர்ட்டில் நான்கு ரன்வேக்கள் அமையும். மிகவும் நவீன முறையில், சுற்றுச்சூழல் சார்ந்த இந்த விமான நிலையத்திற்கான வடிவமைப்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. ஏரோபிரிட்ஜுடன் கூடிய "பிளைட் பே'க்கள், நகரும் தரை மற்றும் படிக்கட்டுகள், சுற்றுச்சூழலை பாதிக்காத கட்டுமானங்கள், வருகை மற்றும் புறப்பாடு முனையங்களுக்கு வாகனங்கள் மூலம் நேரடியாக சென்று இறங்க வகை செய்யும் "ரேம்ப்'கள், கூடுதல் இமிகிரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் கவுன்ட்டர்கள் என ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்ட் ஏர்போர்ட் பிரம்மாண்டமாகவும், நவீனமாகவும் அமையும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து, கட்டுமானப் பணிகள் துவக்கப்படும் நாளில் இருந்து 28 மாதங்களில் கிரீன்பீல்ட் ஏர்போர்ட் பணிகள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வடிவமைப்புடனும், தரத்துடனும் அமைக்கப்பட உள்ள சென்னை கிரீன்பீல்ட் ஏர்போர்ட் செயல்படும் போது சென்னை நகரம் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பான விமான போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டிருக்கும் என்பதில் மாற்றமில்லை.

நன்றி
தினமலர்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நல்ல செய்தி