புதன், 30 ஜூன், 2010

அறிஞர் அண்ணா: ஒரு சிறப்புப் பார்வை(இறுதி பகுதி)




 
"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அதுபோன்றே " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத்  தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க,  ஏழையின் சிரிப்பில் இறைவனைக்  காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, 

இதுபோன்ற  பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த  எடுத்துகாட்டுகளாகும்.

புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். வாசிக்கும் திறந்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும்என்பார் அண்ணா.பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் வாங்கிவிடுவார்.

ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும்,அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.

திங்கள், 28 ஜூன், 2010

அறிஞர் அண்ணா :ஒரு சிறப்புப் பார்வை (பகுதி-2 )




   
தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. 

அறிஞர்  அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராக பதவி வகித்தார். 1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னையும்,கழகத்தையும் அதில் தீவிரமாக ஈடு படுத்திகொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும்,தி.மு.க விற்கும் கிடைத்தது.  

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார்அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். 

ஞாயிறு, 27 ஜூன், 2010

அறிஞர் அண்ணா : ஒரு சிறப்பு பார்வை !



 

அப்பாவியாக தோற்றமளித்த அறிஞன்.எதிராளியையும் வசப்படுத்திய வைசியன்.குரலால்,எழுத்தால்,ஆண்ட மன்னன்.தமிழ் நாட்டின் அண்ணன் அறிஞர் அண்ணா.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் "தளபதி" .பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும்  அவர் அண்ணாதான்.

பள்ளியில் படிக்கும்போதே பொடி போடும் பழக்கம் கொண்டவர்.கல்லூரிக் காலத்தில் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு ஆளானார்.அதன் காரணமாக எச்சில் துப்ப வகுப்பில் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொள்வார்.வெற்றிலை போடும்  பழக்கம் அவரின் மரணம் வரை இருந்தது.

வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழிகளில் வாழும் மொழியாக இருப்பது தமிழ் மட்டுமே: ஆய்வரங்கத்தில் தமிழுக்கு புகழாரம்

 
கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது.  இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.





கிரிகோரி ஜேம்ஸ்:- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

உல்ரிக் நிக்லாஸ்:- (ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.) நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. 

புதன், 23 ஜூன், 2010

வாருங்கள் வாழ்த்துவோம்:அன்னைத் தமிழுக்கு மகுடாபிசேகம்

பிறப் பொக்கும்
 எல்லா உயிர்க்கும் 

இன்று சூன் 23  தேதி தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொன்னாள்.ஆம்.இன்று கோவையில் செம்மொழியாம் நம் தமிழ் மொழிக்கு,தமிழ் அன்னைக்கு மகுடாபிசேகம் நடைபெறும் நாள்.

இதற்க்கு முன்னாள் நடைப்பெற்ற உலகதமிழ் மாநாடுகளைவிட 
இன்று நடைபெறும் இந்த மாநாடு ஒரு வகையில் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. காரணம் "செம்மொழி" என்ற அந்தஸ்து கிடைக்கப்பெற்ற பிறகு நடைபெறும் முதலாவது மாநாடாகும். 

கோவை மாநகரேமே இன்று விழாகோலம் பூண்டுள்ளது. தமிழகத்தின் எல்லா சாலைகளுமே கோவையை நோக்கியே.தமிழகத்தில் திருவிழா கொண்டாட்டமாக செம்மொழி மாநாடு சிறப்பிக்கப் படுகிறது.