வெள்ளி, 30 ஜூலை, 2010

மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்




மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை.

மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். 

இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். 

எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டு அதன் முடிவில் " மனித மூளையை ஸ்கேன் செய்து எதிர்காலத் திட்டங்களை " தீர்மானிக்கலாம் என கண்டறிந்துள்ளார்.

வியாழன், 29 ஜூலை, 2010

சுஜாதா : ஒரு சிறப்புப் பார்வை -பகுதி-2


சுஜாதா : ஒரு சிறப்புப்பார்வை தொடர்ச்சி..........

 
சுஜாதா ஒரு புத்தகப் பிரியர். புதிதாக வருகின்ற  இலக்கிய புத்தகமானாலும் சரி, அறிவியல் சம்பந்தமான புத்தகமாக இருந்தாலும் சரி அதை முதலில் படித்து முடித்துவிட்டுதான் பிற வேளைகளில் கவனம் செலுத்துவார்.    

உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என்ற தாகம் அவரிடம் இருந்தது.அதை கடைப் பிடிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம்.

ஹாலில் ஒரு புத்தகம்,பெட்ரூமில் வேறு  ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம் என மாறி,மாறிப் படிக்கிற பழக்கமுடையவர் சுஜாதா.சுஜாதாவின் நாடங்கள் பலவற்றை பூர்ணம்விஸ்வநாதன் மேடையேற்றினார்.அவர் எழுதிய நாடங்களில் " கடவுள் வந்திருந்தார் " என்ற நாடகம் புகழ் பெற்ற ஒன்றாகும்.

டெல்லியில் பதினான்கு வருடங்கள் கழித்து, 1970ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் [BEL] நிறுவனத்தில் டெபுடி மானேஜராக வேலைக்குச் சேர்ந்தார். அதன் பின் முப்பது வருடங்கள் பெங்களூர் வாசம் தான். பிறகு சிறிது வருடங்களில் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டு பிரிவில் ஜிஎம் பதவிக்கு உயர்ந்த போது, கடுமையான வேலைகள் காத்துக் கொண்டிருந்தன.



இங்குதான் மீண்டும் தன் நண்பர் கலாமுடன் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் ஏவுகணை ப்ரோக்கிராமிங் செய்தார்கள். கலாமைப் பற்றி தனது நினைவுகளை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் சுஜாதா. அவர்களிருவரும் சேர்ந்து ராக்கெட் இயலை பற்றி திப்பு சுல்தான்லிருந்து தொடங்கி எழுத நினைத்திருந்தனர். இன்னும் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2010

எல்லைக் கோடும் ! வறுமைக் கோடும் ?

 
  
தேசத்தை பிரித்துக்காட்டுவது 
எல்லைக் கோடு

தேசத்தின் மக்களைப் பிரித்துபோடுவது 
வறுமைக் கோடு

எல்லைக் கோடு தேசத்தின் அடையாளம் 

வறுமைக் கோடு தேசத்தின் அவமானம் 

வறுமைக் கோட்டிற்கு மேல் -  வளமாம் 
வறுமைக் கோட்டிற்கு கீழ் -  பஞ்சமாம் 

செழிப்பின் நிறம் -      பச்சையாம்
வறுமையின் நிறம் -  சிவப்பாம் 
பிரித்தது யார்.
அதிகார வர்க்கமா, ஆளும் அரசா ?

கோடிகளில் புரளுகிறது  அங்கே ஒரு கூட்டம் 
தெருக் கோடி  குப்பைகளை புரட்டுகிறது இங்கே ஒரு கூட்டம்

வறுமை தேசங்கள் என்றால் நாம் கை காட்டுவது
ஆப்ரிக்க தேசங்களை 
வறுமைக் கோட்டிற்கு கீழ் இத்தனைக் கோடிபேர் இந்தியாவில் 
யுனெஸ்கோ நம்மை சுட்டிக்  காட்டுகிறது.

ஏன் இந்த சமமின்மை ? ஏன் இந்த பொருளாதார வேறு பாடு ?

வல்லரசு இந்தியா ! பெருமைதான் எமக்கு 
வறுமைக் கோட்டிற்கு கீழ் கோடி மக்கள்
எங்கே போய் முட்டிக் கொள்வது ?


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த 
ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய 

மீசை முறுக்கிய முண்டாசு கவிஞனே 

கோடிப் பேருக்கு உணவில்லையே இந்த பாரதத்தில் 
கோபம் கொண்டு யார் கோவணத்தை பறிப்பது ?


வளமையைக்  கொண்டு வறுமையை வெல்வோம் 
தோள் கொடு தோழா!
.







திங்கள், 26 ஜூலை, 2010

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

 
 
நான்கு மாதக் கருவாக இருந்தபோதே தாயின் உயிரைக் காப்பாற்றி ஒரு குழந்தை சாதனை படைத்துள்ளது.  

இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியைச் சேர்ந்த சிட்கப் நகரைச் சேர்ந்தவர் கிளாரி (26). அழகுகலை நிபுணரான அவர் கருவுற்று 4 மாதங்களானபோது ரத்தப்போக்கு ஏற்பட்டது. தாய்மையின் பூரிப்பில் இருந்த அவர், கரு கலைந்து விட்டதாகக் கருதி சோகத்தில் மூழ்கினார். 

இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த தகவல்கள் வெளிவந்தன.   அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதின் காரணம், வயிற்றில் வளர்ந்த புற்றுக் கட்டி என்பது தெரியவந்தது. 

அவரது கரு கலையவில்லை என்பதும், வயிற்றில் வளரும் 4 மாதக் குழந்தை எட்டி, எட்டி உதைத்ததில் புற்றுக் கட்டி உடைந்துள்ளது என்பதையும் டாக்டர்கள் கண்டறிந்தனர்.  கருவைக் கலைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கிளாரியிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால், கிளாரி அதனை ஏற்க மறுத்து விட்டார்.  

4 மாதக் குழந்தை எட்டி உதைக்கவில்லை என்றால் வயிற்றில் புற்றுக்கட்டி வளருவதை கண்டுபிடித்திருக்க முடியாது. எனது உயிரைக் காப்பாற்றிய என் குழந்தையை அழிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார்.  புற்றுக் கட்டியை வளரவிட்டால், குழந்தை பிறக்கும்போது அவர் உயிர் பிழைப்பதற்கு 40 சதவீத வாய்ப்புகளே உள்ளது என்று டாக்டர்கள் கூறியும் கருவைக் கலைக்க கிளாரி சம்மதிக்கவில்லை.

நன்றி:
தினமணி 

ஞாயிறு, 25 ஜூலை, 2010

சுஜாதா : ஒரு சிறப்புப் பார்வை ! பகுதி -1

பிரபல எழுத்தாளரும்,திரைப்பட வசனகர்த்தாவும்,கணினி தமிழ் கண்டவரும், அறிவியல் தமிழ் தந்தவரும், ஆகிய பண்முகம் கொண்ட " திரு:சுஜாதா" அவர்களைப் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.

திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்விகமாக கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். இவர் 1935 ம் ஆண்டு மே மாதம் 3  தேதி  பிறந்தார்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். 

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம்இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
 
திருக்குறள்,புறநானுறு,சிலப்பதிகாரம்,இவற்றிற்கு ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. மக்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்.

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி இயற்பியல்  படிப்பை முடித்தார். முன்னாள் குடியசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களும்,  சுஜாதாவும் திருச்சி ஜோசப் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

அதன் பின் சென்னை எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  பொறியியல் பட்டதாரி ஆனார். இங்கும் டாக்டர் அப்துல் கலாமும் இவரும் சேர்ந்தே படித்தார்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்டபிறகும் அந்த நட்பு கடைசி வரை உறுதியாக இருந்தது. 

மத்திய அரசுப் பணியில் சேர்ந்து , டெல்லியில் முதலில் பணியாற்றினார். 
14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.