சூரிய ஆற்றலில் இயங்கக் கூடிய விமானத்தை ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர்.
சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த சிறிய ரக விமானம் முற்றிலும் சூரிய ஆற்றலில் செயல்படக்கூடியதாகும். பகலில் சூரிய ஆற்றலைப் பெற்று அதன் மூலம் இரவிலும் செயல்படக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர்.
தற்போது தொடர்ந்து 36 மணி நேரம் பறந்து உலகைச் சுற்றி வரக்கூடிய விமானத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம் அடுத்த ஆண்டு இளவேனில் காலத்தில் உலகை வலம் வரும் என்று விமானத்தை வடிவமைக்கும் "பெட்டராண்ட் பிக்கார்ட்' விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
சோதனை முயற்சி வெற்றி பெற்றால் அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் சூரிய ஆற்றலில் செயல்படும் பயணிகள் விமானமும் சாத்தியமாகிவிடும் என்றும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த விமானத்தை வடிவமைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் இந்திய மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை வடிவமைக்கும் குழுவில் 70 பேர் உள்ளனர். இந்தக் குழுவின் தலைவராக பில் முன்ட்வெல்லர் உள்ளார்.சூரிய ஆற்றலை பயன்படுத்தும் நுட்பம் குறித்து பயிலும் இந்திய மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கடிதம் எழுதிவருவதாக முன்ட்வெல்லர் குறிப்பிட்டார். புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தின் எடை 1,600 கிலோவாகும்.
இதன் இறக்கை நீளம் 63 மீட்டர், உயரம் 6.4 மீட்டர். ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடையாகும். இதன் என்ஜின் சக்தி ஒரு ஸ்கூட்டரின் சக்திக்கு இணையானது. ஏர்பஸ் ஏ-340-க்கு இணையாக இது இருக்கும்.அடுத்த ஆண்டு தொடர்ந்து 36 மணி நேரம் பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது.
ஐந்து கண்டங்களில் சிறிது நேரம் நின்று இது புறப்படும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகப் புறப்பட்டு அதிகபட்ச உயரத்தை எட்ட வேண்டியது. அதாவது அதிகபட்சம் 8,000 மீட்டர் எட்டி அதன்மூலம் சூரிய ஆற்றலைப் பெற்று தொடர்ந்து பறப்பது, பின்னர் சூரியன் மறைந்ததும் 1,000 மீட்டர் உயரத்திற்கு கீழிறங்கி சக்தியை அதிகம் செலவிடாமல் தொடர்ந்து பறப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக