வெள்ளி, 4 டிசம்பர், 2009

ஓசோன் 2010


வரும் 2010 புத்தாண்டு தினத்திலிருந்து, இந்த உலகை அச்சுறுத்தி வந்த, ஓசோன் படலத்தில் துளையிடக்கூடிய குளோரோ புளூரோ கார்பன் (சி.எப்.சி.,), ஹேலான், கார்பன் டெட்ரா குளோரைடு மாசுகள் இந்த உலகிலிருந்து வெளியேறுவது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது.


சூரியனிலிருந்து வரக்கூடிய புறஊதாக் கதிர்களை, பூமியை சுற்றி உள்ள ஓசோன் படலம் போர்வை போல் காப்பதால், நாம் அதிகப்படியான வெப்பத்திலிருந்து தப்புகிறோம். கடந்த 1970ம் ஆண்டுகளிலிருந்து ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக, 1985ல் வியன்னாவில் நடந்த மாநாட்டில் விரிவாக விளக்கப்பட்ட போது உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஓசோன் துளையால், புவியின் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது. பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.


1987ல் கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் ஓசோனை காப்பாற்றும் வகையில் ஐ.நா., சார்பில், மாநாடு நடந்தது. ரெப்ரிஜிரேட்டர், ஏர்கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் குளோரோ புளூரோ கார்பன் (சி.எப்.சி.,), தீ அணைப்பு கருவி உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் ஹேலான்கள், ஜவுளி மற்றும் மெட்டல் கிளீனிங் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கார்பன் டெட்ராகுளோரைடு மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படும் மீத்தைல் குளோரோபார்ம் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் உபயோகத்தை, 2010ம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறுத்திவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. 195 நாடுகள் கையொப்பம் இட்டுள்ள மான்ட்ரியல் உடன்படிக்கையின் படி, தற்போது 97 சதவீத ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் மாசுகள் தடுக்கப்பட்டுள்ளன. இதுதான், உலகிலேயே மிகவும் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்ட சர்வதேச சுற்றுச்சூழல் ஒப்பந்தம். 2010ம் ஆண்டிலிருந்து முற்றிலுமாக இந்த மாசுகள் வெளியேறாது. என்றாலும், ஓசோன் படலம் தன்னை சரிசெய்து கொண்டு பழைய நிலைக்கு, 2050ம் ஆண்டில்தான் திரும்பும் என்று 2006ல் நடந்த ஓசோன் துளை தொடர்பான அறிவியல் பூர்வ மதிப்பீடு தெரிவித்துள்ளது.


உலகம் முழுவதும், தற்போது ஏர்கண்டிஷனர் மற்றும் பிரிட்ஜ்களில் சி.எப்.சி.,களுக்குப் பதிலாக, ஓசோனுக்கு கேடு விளைவிக்காத "ஹைட்ரோபுளூரோ கார்பன்' மற்றும் "ஹைட்ரோகார்பன்கள்' பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓசோனுக்கு கேடு விளைவிக்காவிட்டாலும், கார்பன் டை ஆக்சைடைப் போலவே இவையும் பசுமை இல்ல விளைவை ஏற்படுத்துவதால் புவியின் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. எனவே, அடுத்து இவற்றையும் முற்றிலும் நீக்கும் முயற்சிகளும் சவால் நிறைந்ததாகவே தொடர்ந்து வருகின்றன. 1931ல் அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சியில் "டுயுபாண்ட்' எனும் நிறுவனம்தான் முதன் முதலில், சி.எப்.சி.,யில் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியது. தற்போது இதுபோன்று "சி.எப்.சி.,' உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு முடிவு வந்துவிட்டது என்று கூறலாம். சட்டவிரோதமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை கடத்துவதை தடுக்கவும், ஐ.நா.,வின் சர்வதே சுங்க நிறுவனம் கடினமான சுற்றுச்சூழல் குற்ற சட்ட விதிமுறைகளை அமல் செய்துள்ளது.


இந்தியா வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது குறித்து, புதுடில்லியில் உள்ள மத்திய அரசின் "ஓசோன் செல்' இயக்குனர் துரைசாமி, தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி: இந்தியா 1992ல் மான்ட்ரியல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. 2003ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பிரிட்ஜ்களில் சி.எப்.சி., உபயோகம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக "ஆர் 134-ஏ' எனும் ஓசோனுக்கு கேடு விளைவிக்காத பொருள் பயன்படுத்தப்படுகிறது. சில நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் பயன்படுத்துகின்றன. 2008 ஆக. 1லேயே இந்தியாவில் சி.எப்.சி., உபயோகம் மற்றும் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இது 2010ம் ஆண்டுக்கு முன்னரே இந்தியா தனது கடமையை செய்துவிட்டது. ஹேலான்களை 2002ல் இந்தியா முழுவதுமாக குறைத்துக் கொண்டது.


கார்பன் டெட்ரா குளோரைடைப் பொறுத்தவரை 2007லேயே 85 சதவீதத்தை இந்தியா குறைத்துக் கொண்டது. தற்போது முற்றிலும் குறைத்துவிட்டது. இந்தியாவில் ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை ஒழித்துக் கட்டியபோதே, நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறிக் கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு அளித்துள்ளதால் நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படையவில்லை. ஆஸ்துமா நோயாளிகளுக்கான இன்ஹேலர்கள் தயாரிப்பில் மட்டுமே இனி சி.எப்.சி., இருக்கும். அது மான்ட்ரியல் வரைமுறையின் படி, அனுமதிக்கப்பட்டதுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார். மான்ட்ரியல் உடன்படிக்கையை சிறந்த முறையில் அமல் செய்த நாடு என்பதற்கான ஐ.நா.,வின் விருதையும் இந்தியா பெற்றுள்ளது. ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு விடை கொடுத்து புதிய சுவாசத்துடன் 2010 புத்தாண்டு விடியப்போகிறது.


உருகும் பனி: ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் இழப்பு குளிர்காலத்தில் அதிகமாக ஏற்படுகிறது. அப்போது வெப்பநிலை - 78 டிகிரிக்கு செல்லும் போது, குளிர்ச்சி அடைந்த மேகங்கள் பனிக்கட்டிகளாக மாறுகின்றன. இந்த பனியில் மாசுகளான நைட்ரிக் அமிலம், சல்பியூரிக் அமிலம் ஆகியன கலந்து குளோரோ புளூரோ கார்பன் (சி.எப்.சி.,) வினைபுரிய தூண்டுகின்றன. ஆகவே அப்பகுதியில் வெப்பம் அதிகரித்து பனி உருக காரணமாக அமைகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அண்டார்டிகா பகுதியில் ஓசோனில் துளை ஏற்பட்டுள்ளது.


பூமியை காக்க: வளிமண்டலத்தில் சேர்ந்துள்ள மாசுகளில் கார்பன் டை ஆக்ச�டு 86 சதவீதம். "ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் சி.எப்.சி., உபயோகத்துக்குப் பதிலாக ஹைட்ரோபுளூரோகார்பன் பயன்படுத்துவதால் அது வளிமண்டலத்தில் இந்த மாசு அளவு 9 சதவீதமாக கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது' என்று சர்வதேச தட்பவெப்பநிலை நிறுவன தலைமை செயலாளர் மைக்கேல் ஜக்கார்ட் தெரிவித்துள்ளார். இவையும் புவி வெப்பமாக காரணமாக அமைகின்றன.


ஓசோனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்களை குறைத்தது போல், தொழிற்சாலை, வாகன மற்றும் பிற மாசுகளின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, டிசம்பர் 15ல் கோபன்ஹேகனில் நடைபெறும் உச்சி மாநாட்டில் நாடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளும் பிற நாடுகளும் அதை சரியாக கடைபிடிக்கும் பட்சத்தில் இந்த பூமி நாம் வாழத்தகுந்ததாக தொடரும்.


காடுகளுக்கு பாதிப்பு: ஓசோனில் ஏற்பட்டுள்ள துளை புவி வெப்பமயமாவதற்கு காரணமாக அமைவதால் காடுகளின் அடர்த்தி குறைகிறது. காடுகள் அழிவதாலும், மனித தேவைகளுக்கு அழிப்பதாலும் கார்பன் மறு சுழற்சி பாதிக்கப்படுவதால், புவி மேலும் வெப்படைகிறது.


பருவநிலை மாற்றம்: வெப்பம், ஈரப்பதம், காற்று மற்றும் வளிமண்டலத்தில் உள்ள ரசாயனப் பொருட்கள் ஓசோனை பாதிக்கின்றன. ஓசோன் பாதிக்கப்பட்டால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியை அடைவதால் பருவ நிலை மேலும் பாதிக்கிறது. பருவநிலை பாதிப்பு வறண்ட பூமியையும் மகசூலில் பாதிப்பையும் ஏற்படுத்தி விவசாயத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றன.


அண்டார்டிகா பகுதியில் ஏற்பட்டுள்ள துளை தற்போது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரிதாக உள்ளது. தரையிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள ஸ்ராடஸ்பியர் வளிமண்டல பகுதியில்தான் ஓசோன் வாயு காணப்படுகிறது. சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பமிக்க, தோல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய புற ஊதாக் கதிர்களை இந்த வாயுப்படலம் பிரதிபலித்து பூமியில் விழாமல் தடுத்து விடுகிறது. இதனால் மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் காக்கப்படுகின்றன. ஓசோன் துளை உள்ள இடங்களில் புற ஊதாக் கதிர்கள் புகுந்துவிடுவதால், பூமியின் தரைப்பகுதியில் வெப்பத்தை அதிகரிக்கிறது.

2 கருத்துகள்:

Ramesh சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல்கள்...
இதையும் பாருங்கோ
ஓசோனுக்காய் .......
http://sidaralkal.blogspot.com/search/label/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D

டென்மாக் கொபன்ஹேர்கில் காலநிலை மாற்ற மாநாடும் உலக நாடுகளும் -டிசெம்பர் 2009
http://sidaralkal.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

கிரி சொன்னது…

அபுல் பசர் ரொம்ப சிறப்பா எழுதி இருக்கீங்க.. பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

குளோரோ புளூரோ கார்பன் (சி.எப்.சி) முற்றிலும் தடை செய்யப்பட்டது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது..அதுவும் இந்தியாவில்..நிஜமாவே இல்லையா?

தற்போது வரும் குளிர்சாதன இயந்திரங்கள் "ஹைட்ரோபுளூரோ கார்பன்' மற்றும் "ஹைட்ரோகார்பன்கள்' பயன்படுத்தி தான் வருகின்றனவா? இது பற்றி தற்போது உங்கள் இடுகையிலே அறிகிறேன். உண்மை என்றால் ரொம்ப சந்தோசம்.

//ஓசோனுக்கு கேடு விளைவிக்காத "ஹைட்ரோபுளூரோ கார்பன்' மற்றும் "ஹைட்ரோகார்பன்கள்' பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓசோனுக்கு கேடு விளைவிக்காவிட்டாலும், கார்பன் டை ஆக்சைடைப் போலவே இவையும் பசுமை இல்ல விளைவை ஏற்படுத்துவதால் புவியின் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. எனவே, அடுத்து இவற்றையும் முற்றிலும் நீக்கும் முயற்சிகளும் சவால் நிறைந்ததாகவே தொடர்ந்து வருகின்றன//

இவையும் நிறைவேற்றப்பட்டால் பெரிய சாதனை தான்.

சிறப்பான இடுகைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்