திங்கள், 14 டிசம்பர், 2009

இந்தியாவில் மாநிலங்கள் உருவான வரலாறு


கடந்த 1947ல் நாடு சுதந்திரம் பெற்றபோது, 500க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களையும் எல்லாம் சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைக்க பாடுபட்டு வெற்றி பெற்றவர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். அதே நேரத்தில் நாட்டில் முதல் மாநில பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் பொட்டி ஸ்ரீராமுலு. மாஜி ரயில்வே ஊழியரான ஸ்ரீராமுலு சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை, அப்போதைய மதராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள பகுதிகளை பிரிக்க வேண்டும் என்பதாகும். அப்போது, கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்து மதராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசுவோர் இருந்த பகுதிகளை பிரித்து ஆந்திரா மாநிலத்தை உருவாக்கியது.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டி வரும் என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களால் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால், ஆங்கிலேயர் அமைத்த மாகாணங்கள் இருந்தாலும், பெரும்பா லான இடங்களில் மொழிவாரியாகத்தான் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுதந்திரம் பெற்றதுமே, மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க நேரு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரிவினையால் இந்தியா பாதிக்கப்பட்டி ருக்கும் நேரத்தில் மொழிவாரியாக மாநிலங்களை பிரித்தால் நாட்டின் ஸ்திரதன்மை பாதிக்கப்படும் என்று நேரு கருதினார். வல்லபாய் படேலும் நேருவின் கருத்தை ஆதரித்தார். ஆனால், மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்ற போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அந்த போராட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதை நேருவால் தடுக்க முடியவில்லை. கன்னடம், மராட்டி, மலையாளம், குஜராத்தி பேசுவோர் தனிமாநிலங்கள் கேட்டு போராடியபோதும், விசால ஆந்திரா கேட்டு தெலுங்கு மொழி பேசுபவர்கள் நடத்தி போராட்டம் வேகமாக நடந்தது.


1952ல் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற நேருவை தெலுங்கு பேசுபவர்கள் முற்றுகையிட்டனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, ஒரு சில மொழிவாரி மாநிலங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனாலும், அதற்கான நேரம் இதுவல்ல என்றும் கூறினார். இதை தொடர்ந்து, சென்னையில் ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். 56 நாட்களுக்கு பின் அவர் இறந்ததும், வன்முறை வெடித்தது. ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, 1952ம் ஆண்டு டிசம்பரில் ஆந்திரா தனி மாநிலம் உருவாக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மற்ற மொழி பேசுபவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷனின் பரிந்துரை அடிப்படையில், 1956ல் 14 புதிய மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. ஏற்கனவே மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ஆந்திராவும், ஐதராபாத் மாநிலமும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவானது.


இதைத் தொடர்ந்து 1960ல், பம்பாய் மாகாணம் பிரிக்கப்பட்டது. மராத்தி பேசுபவர்கள் இருந்த பகுதி மகாராஷ்டிரா என்றும், குஜராத்தி பேசுபவர்கள் வசித்த பகுதிகள் குஜராத் என்றும் பெயரிடப்பட்டு தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அசாமில் இருந்து நாகா இன மக்கள் வாழ்ந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு நாகாலாந்து உருவானது. 1966ல் பஞ்சாப் மாநிலம் மூன்றாக பிரிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் இருந்து அரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிதாக பிறந்தன. இதைத் தொடர்ந்து 1972ல் வடகிழக்கு பகுதியில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.


நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2000ம் ஆண்டில் ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது, சந்திரசேகர் ராவ் உண்ணாவிரதத்தை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலை, தெலுங்கானா தனி மாநிலம் அமைய வழிகண்டுள்ளது. கடந்த 1956ல் ஆந்திரா மாநிலத்தோடு, ஐதராபாத் மாநிலம் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது. இப்போது, பழைய ஐதராபாத் மாநிலத்தின் பெரும்பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட உள்ளது. வரலாறு திரும்புகிறது.

2 கருத்துகள்:

Nowfal சொன்னது…

good post, came to know the past history. Thanks

THANGAMANI சொன்னது…

நன்று.