வியாழன், 24 டிசம்பர், 2009

வடக்கு வாழட்டும் ஆனால் தெற்கு தேய்கிறதே ?


மதராஸ் மாநிலம் என்றைக்கோ தமிழ்நாடாகிவிட்டது,​​ தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு ​வருகிறது,​​ திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினால் வரிச்சலுகை தரப்படுகிறது,​​ ஐ.ஏ.எஸ். தேர்வைக்கூட தமிழில் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதாகப் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.​ தில்லி அதிகார பீடத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கும் சிம்மாசனம் போடப்பட்டுள்ளது -​ இவை அனைத்தும் தமிழனின் உயர்வின் அடையாளம் என்று எண்ணத்தோன்றுவது இயற்கைதான்.

ஆனால் விற்க முடிந்ததையெல்லாம் விற்றுப் பெற்ற கல்வியை வைத்து,​​ மத்திய அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கவே முடியாத சூழ்நிலையில் இருக்கின்ற தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவர்கள் என்ற நிலை கடந்த கால் நூற்றாண்டாக நிலவி வருகிறது.​ மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை நிலைப்பாட்டினால் இந்தியாவிலேயே பாதிக்கப்படுகிற ஒரே இனம் இந்தி படிக்காத தமிழினம் என்பதைக் கேட்கும்போது நெஞ்சு பதைக்கிறது.

திராவிட இயக்கங்கள் மக்களின் மகத்தான ஆதரவுடன் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து,​​ இருமொழிக் கொள்கையை இறுகப் பற்றிக்கொண்டு தமிழனின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற பயணத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழ்மொழியை இந்தி ஆதிக்கத்தின் ஆக்டோபஸ் கரங்களிலிருந்து காத்து,​​ அதை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வுபூர்வமான சிந்தனை உச்சி முகர்ந்து மெச்சத்தக்கதே.​ தாய்மொழியைக் கண்பாவைபோல் கட்டிக்காக்காத பல இனங்களின் மொழிகள் வழக்கொழிந்துபோயின என்பது வரலாற்றின் ஏடுகளில் காணக்கிடக்கிறது.​ 

​இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மொழி உரிமைகளே மறுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில்,​​ நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கொடுத்த இந்தி பேசாத மக்கள்மீது அவர்களாக விரும்பிக் கேட்கும்வரை இந்தி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை அவருக்குப்பின் வந்த மத்திய ஆட்சியாளர்களும் பின்பற்றுவர் என்று எண்ணி,​​ தமிழக ஆட்சியாளர்கள் வாளாதிருந்ததால்,​​ அதுவே இப்போது தமிழர்களின் தலைக்குமேல் வாளாகத் தொங்குகிறது.​ ஒருபுறம் இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்குத் தாராள நிதி அளிப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசு,​​ மறுபுறம் மத்திய அரசுப் பணிகளுக்கு இந்தியைக் கட்டாயமாக்கும் ஏகாதிபத்திய ஏவல்களை ஓசைப்படாமல் செய்துவருகிறது.

1965-ம் ஆண்டு முதல் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்ற கேந்திரிய வித்யாலயா என்று அழைக்கப்படும் மத்திய அரசுப் பள்ளிகள் நாடுமுழுவதிலும் 981 இருக்கின்றன.​ இவற்றில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.​ 1986-ம் ஆண்டுவரை இந்தப் பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இந்தி படித்திருக்கவேண்டும் என்று கேட்கப்பட்டதில்லை.​ 1986-ம் ஆண்டுக்குப்பிறகு இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு இந்தி படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.​ 

​அதேபோல் 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் எனப்படும் மாதிரிப் பள்ளிகள் இந்தியா முழுவதும் 567 இருக்கின்றன.​ மத்திய ஆட்சியாளர்கள் இப்பள்ளிகள் மூலம் மும்மொழிக் கொள்கையை முன்மொழிந்ததால் இவை இதுவரை தமிழ்நாட்டில் வழிமொழியப்படவில்லை.​ இப்பள்ளிகளில் ஆசிரியப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கும் இந்தி அறிவு கட்டாயத் தேவையாக உள்ளது.​ 1986-ம் ஆண்டு வரை,​​ அதாவது 21 ஆண்டுகள் இந்தி படிக்காத தகுதியான தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இப்பள்ளிகளில் திறம்படப் பணியாற்றி நல்லாசிரியர் விருதுகள்கூடப் பெறமுடிந்தது.​ இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத மத்திய அரசு இந்தியைக் கட்டாயமாக்கி,​​ மெத்தப்படித்த தமிழ் இளைஞர்கள்கூட விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய அரசின் இந்தப் பள்ளிகளில் 6037 ஆசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி தெரிவித்திருக்கிறார்.​ ஆனால் படித்த தமிழ் இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இயலாத திக்கற்றவர்களாக இருக்கின்றனர்.​ கூட்டாட்சித் தத்துவத்துக்கே வேட்டு வைக்கிற மத்திய அரசின் இந்த முடிவால் கடந்த 23 ஆண்டுகளில் பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பது உண்மை.​ ​

​மத்திய கல்வித்துறையின் ஒரு பிரிவிலேயே தமிழர்கள் இந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ மத்திய அரசின்கீழ்வரும் மற்ற எந்தெந்தத் துறைகளில் தமிழர்கள் இப்படிப் புறந்தள்ளப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே ​ மலைப்பு மேலிடுகிறது.​ இந்தி படிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லுகிற கயமைக்குச் சொந்தக்காரர்களைவிட,​​ இந்தி படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திய மொழிவெறியர்களே மேலானவர்கள் அல்லவா?​ இப்படித் ​ தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் இளைஞர்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக ஆட்சியாளர்கள் யாரும் முதலடிகூட எடுத்துவைக்கவில்லையென்பதுதான் வேதனையின் உச்சம்.​ 

திராவிட அரசுகள் தொடர்ந்து கடைபிடித்துவரும் இருமொழிக் கொள்கையின் காரணத்தால் இந்தி படிக்காமல் இருந்துவிட்ட இளைஞர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறபோது,​​ கன்றின் குரல் கேட்ட தாய்போல் ஓடோடிச் சென்று அவர்களின் உரிமையை மீட்டுக்கொடுப்பது மாநில அரசின் கடமையல்லவா?​ இந்தி படிக்கவில்லையென்றால் மத்திய அரசில் வேலையில்லை என்று சொல்வதைவிட,​​ மத்திய அரசின் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் தமிழர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று ஒருவரி சேர்த்துவிடலாமே!​ ​

கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவானது இந்திய சட்டக் குழுவிடம் ஒரு பரிந்துரையை அளித்தது.​ அதில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348-ஐ திருத்தி,​​ உச்ச நீதிமன்றத்திலும்,​​ உயர் நீதிமன்றங்களிலும் இந்தியில் அலுவல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.​ சட்டக்குழுவின் ​ தற்போதைய தலைவரான நீதியரசர் ஏஆர்.​ லட்சுமணன் அந்தப் பரிந்துரையை கடந்த ஆண்டு அடியோடு நிராகரித்தார்.​ இவ்வாறு செப்படி வித்தைகள் செய்து இந்தியைத் தூக்கிப்பிடிக்க வடபுலத்தவர் மேற்கொள்ளும் முயற்சிகளின் முனை முறிந்துபோகச் செய்வதற்கான ஒற்றுமை தமிழக அரசியல் கட்சிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது.​ ​

தமிழ்வழிக் கல்விக்கொள்கையால் தம் வாழ்வுரிமையான வேலைவாய்ப்பை இழந்துநிற்கும் ​ தமிழ் இளைஞர்களுக்கு,​​ மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.​ ரயில்வே தேர்வுகளை இனி அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என்று கடந்த அக்டோபர் 5-ம் தேதி அவர் தெரிவித்து,​​ அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே தொடங்க உத்தரவிட்டிருக்கிறார்.​ கடந்த பல ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்று இருந்த,​​ இருக்கிற தமிழ்நாட்டைச் சார்ந்த எந்த அமைச்சரும் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக்கூட எங்கும் வைத்ததாகத் தெரியவில்லை.​ 

மம்தா பானர்ஜிக்கு மாத்திரம் இது எப்படி சாத்தியப்பட்டது?​ மம்தா பானர்ஜி என்ன வங்காளிகளின் வழிபடு தெய்வமான துர்க்கையைப் போன்று பத்துக் கைகளும் பராசக்தி அவதாரமுமாகவா இருக்கிறார்?​ எல்லா வங்காளிகளையும் போலவே தாய்மொழிப்பற்று அவருடைய உதிரத்தில் தோய்ந்து கிடக்கிறது.​ தமிழர்களிடத்தில் தாய்மொழிப்பற்று தேய்ந்து கிடக்கிறது !​ ​

கருத்துகள் இல்லை: