சனி, 5 டிசம்பர், 2009

ரஷ்ய கேளிக்கை விடுதியில் பட்டாசு விபத்து விருந்தில் பங்கேற்ற 100 பேர்பலி



ரஷ்யாவில் உள்ள கேளிக்கை விடுதியில் ஆண்டு விழாவை கொண்டாடிய நேரத்தில் பட்டாசு கூடாரத்தில் விழுந்து தீ பற்றிக்கொண்டது. இதில் 100 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டார் காயமுற்றனர். ரஷ்யாவில் அடுத்தடுத்து துயரச்சம்பவம் நடந்து வருவது அரசுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.


ராக்கெட் வெடி திசை மாறியது: ரஷ்யாவின் வட கிழக்கு பகுதியில் 700 மைல் தொலைவில் பெர்ம் நகரம் உள்ளது. லார்ன் ஹவுஸ் என்ற இரவு நேர விடுதியில் எட்டாம் ஆண்டு நிறைவு விழா  ‌கொண்டாடப்பட்டுள்ளது. இவ்விழாவில் சுமார் 250 பேர் இருந்துள்ளனர். அனைவருக்கும் சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் இந்த விடுதியின் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரே இருந்துள்ளனர் . இரவு 11 . 35 மணி அளவில் பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. வானில் ஏவப்பட்ட ராக்கெட் வெடி திசை மாறி விழா நடந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் கூடாரத்தின்மீது விழுந்துள்ளது. இதில் தீப்பற்றியது. விடுதி அரங்கம் முழுவதும் தீ பரவியது.


இதனையடுத்து பலர் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதில் ஒருவருக்கொருவர் மோதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் தீயில் கருகியும், இதில் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் மூச்சு திணறியும் இறந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் 101 பேர் இறந்து விட்டதாக ரஷ்ய உறவு துறை ஏஜென்சி கூறுகிறது.


பயங்கரவாத தாக்குதல் இல்லை !: சம்பவம் நடந்த இடத்திற்கு ரஷ்ய எமர்ஜென்சி அமைச்சர் செர்ஜி ஷேய்டு, உள்துறை அமைச்சர் ரஷீத் நுர்கலாவ், சுகாதார துறை அமைச்சர் டயானாகேலிக்வி மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்குமோ என்ற கேள்விக்கு இடமில்லை. இது விபத்து தான் என ரஷ்ய உளவு துறை அறிவித்துள்ளது.


அடிக்கடி விபத்து : தொடர்ந்து ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் இது போன்ற சம்பவம் அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ரயில் பயங்கரவாத தாக்குதலில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக ஆயுதக்கிடங்கு தீப்பற்றி எரிந்தது. கடந்த 2003 ல் ஏற்பட்ட தீ விபத்தில் 110 பேர் கொல்லப்பட்டனர். 1977 ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாக ரஷ்யாவில் தீ விபத்து அடிக்கடி நடக்கும் என குற்றம்சாட்டப்படுகிறது. காரணம் போதிய சட்ட திட்டங்கள் இல்லை என்ற குறைபாடும் இருக்கிறது. தீயணைப்பு துறை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்து.


நேற்று இரவு கேளிக்கை விடுதியில் நடந்த இந்த விபத்து முதலில் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என ரஷ்ய உளவு நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: